You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுவராஜ் சிங் ஓய்வு - ''கிரிக்கெட் எனக்கு எப்படி போராட வேண்டும் என கற்றுக்கொடுத்தது''
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
''இந்த 22 யார்டுகளில் எனது 25 ஆண்டுகளை கழித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் உள்ளே வெளியே ஆட்டத்தில் இருந்தேன். இந்த விளையாட்டை கடந்து செல்ல முடிவெடுத்துள்ளேன். இந்த விளையாட்டு எனக்கு எப்படி போராட வேண்டும், எப்படி வீழ்ச்சியில் இருந்து எழ வேண்டும், எப்படி தோல்விகளில் இருந்து கடந்து செல்ல வேண்டும் என எல்லாம் கற்றுக்கொடுத்திருக்கிறது'' எனப் பேசியுள்ளார் யுவராஜ் சிங்.
யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் 17 சதங்களை விளாசியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 62 இன்னிங்ஸ்களில் 1900 ரன்கள் விளாசியுள்ள யுவராஜ் சிங், ஒருநாள் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 8701 ரன்கள் எடுத்துள்ளார்.
2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது தொடர் நாயகன் விருது பெற்றவர் யுவராஜ் சிங்.
2007 டி20 உலகக்கோப்பையில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசி கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
இவ்விரு உலகக்கோப்பையை இந்தியா வெல்லவும் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கினார் யுவராஜ்சிங்.
மிடில் ஆர்டரில் களமிறங்கும் யுவராஜ் சிங் பகுதி நேர பந்துவீச்சாளராகவும் செயல்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அவர் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் என பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். அணித்தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
1981 டிசம்பர் 12-ம் தேதி பிறந்த யுவராஜ் சிங் 37 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
''வீரர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் யுவராஜ் சிங் போன்ற வீரர்களை கண்டுபிடிப்பது அரிதானது. கடினமான காலங்களை அவர் கடந்திருக்கிறார். நோயை விளாசினார், பௌலர்களை விளாசினார்; இதயங்களை வென்றார் மேலும் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுபவராகவும் ஊக்கமளிப்பவராகவும் இருந்துள்ளார்'' என வீரேந்திர சேவாக் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
''வரலாற்றில் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர்'' என முகமது கைஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்து இந்திய அணியில் இடம்பிடித்து சில போட்டிகளில் விளையாடினார் யுவராஜ் சிங். எனினும் 2019 உலகக்கோப்பையில் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
பிற செய்திகள்:
- இந்தியாவுக்கு 'சிறப்பான' 'தரமான' வெற்றி சாத்தியமானது எப்படி ?
- புயல் வந்தாலும் அசராத வீடு: எளிய முறையில் கட்டட கலையை பயிற்றுவிக்கும் சேலத்து இளைஞர்
- காஷ்மீர் கத்துவா சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு
- கிரிஷ் கர்னாட் - இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மொழி உரிமைக்கும் குரல் கொடுத்தவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்