ரியான் பராக் : ராஜஸ்தான் அணி வென்றது எப்படி? ஆறாவது முறையாக கொல்கத்தா அணி தோல்வி

பட மூலாதாரம், NurPhoto
தனி ஆளாக அதிரடி காட்டிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் எடுத்த 97 ரன்கள், அந்த அணிக்கு 175 ரன்கள் என்ற வலுவான இலக்கை குவிக்க உதவினாலும், ராஜஸ்தான் அணியின் குழு ஆட்டம் அந்த அணிக்கு 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
12-ஆவது ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டி கொல்கத்தாவில் நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதல் ஓவரிலேயே கொல்கத்தா அணி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. பிறகு களமிறங்கிய வீரர்கள் சற்றே நிதானமாக விளையாடினாலும் யாரும் அதிகநேரம் நிலைத்து விளையாடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஒருபுறம் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 97 ரன்கள் குவிக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அணிக்கு அதிரடி தொடக்கத்தை தந்தனர். சஞ்சு சாம்சன் 22 ரன்களும், ரஹானே 34 ரன்களும் எடுத்தனர்.
ஆனால், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முழு காரணமும் அந்த அணியில் பல வீரர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்ததே.
ஒருவர் ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து களமிறங்கிய புதிய பேட்ஸ்மேன் தன் பொறுப்பை உணர்ந்து விளையாடியது ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.
17 வயதான இளம் வீரர் ரியான் பராக் ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் எந்த பதற்றமும் இல்லமால் மிக சிறப்பாக விளையாடினார். இவர் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசினார்.

பட மூலாதாரம், NurPhoto
அதேபோல் இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்த ஆர்ச்சர் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோற்றதன் மூலம் தொடர்ந்து ஆறாவது முறையாக கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதேவேளையில் ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் தலா 8 புள்ளிகளுடன் நடப்பு ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளன.
பிற செய்திகள்:
- சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












