You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தினேஷ் கார்த்திக் - ஷிகர் தவான் போராட்டம் வீண் - இந்தியா தோற்றது ஏன்? 5 முக்கிய காரணங்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் ஷார்ட்டின் விக்கெட்டை சொற்ப ரன்களில் இழந்தது.
ஆட்டத்தின் 16-வது ஓவர் நடந்து கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால், 20 ஓவர்கள் கொண்ட போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா, தொடக்க ஆட்டக்காரர் ரோகித சர்மாவின் விக்கெட்டை சொற்ப ரன்களில் இழந்தது
கே. எல். ராகுல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணித்தலைவர் விராட் கோலி 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆடம் ஜாம்பாவின் சுழல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் இணை மிக சிறப்பாக விளையாடி 4 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தது.
ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த காரணத்தால் 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை மட்டும் பெற்ற இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா தோல்வியுற்றதற்கு 5 முக்கிய காரணங்கள் இவை.
கைகொடுக்காத கோலி, ரோகித்
தொடக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்த போதிலும், வழக்கமாக இந்திய அணி அதிக ரன்கள் சேஸிங் செய்யும்போது ஜொலிக்கும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்த போட்டியில் ஒற்றை இலக்க ரன்களில் அட்டமிழந்தது அணிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுக்கள்
கே. எல். ராகுல், விராட் கோலி மற்றும் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தவான் ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணியின் ரன் குவிப்பு மட்டுப்பட்டது.
அதேபோல், இறுதி கட்டங்களில் ரிஷிப் பந்த், குருநால் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியாவால் இறுதி ஓவரில் ஜொலிக்க முடியவில்லை.
அசத்திய ஆடம் ஜாம்பா
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படும் பிரிஸ்பேன் ஆடுகளத்தில், ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்திய அணியின் ரன் குவிப்பை பெரிதும் கட்டுப்படுத்தியது.
வாரி வழங்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்
இந்திய பந்து வீச்சாளர்களில் குறிப்பாக குருநால் பாண்ட்யா மற்றும் கலீல் அகமது ஆகிய இருவரும் அதிக அளவு ரன்களை தங்களின் பந்துவீச்சில் விட்டுக் கொடுத்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
வழக்கமான அதிரடி பாணியில் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உதவியோடு 46 ரன்கள் எடுத்தார். இதனால் ஒருகட்டத்தில் 150 ரன்கள் மட்டுமே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி 17 ஓவர்களில் 158 ரன்கள் குவித்தது.
பிற செய்திகள்:
- ‘கஜ’ புயல் பாதிப்பு: "மீண்டும் தென்னை மரங்கள் உருவாக ஒரு தலைமுறையாகும்"
- கஷோக்ஜி கொலை: கண்டனங்கள் இருந்தாலும் சௌதியுடன் உறவு தொடரும் - டிரம்ப்
- ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி
- மத்தியப் பிரதேச தேர்தல்: பழங்குடியினரிடம் இந்துத்துவாவை திணிக்கிறதா பாஜக?
- ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னை மாணவி தேர்வு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :