You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னை மாணவி தேர்வு
இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தமிழ் இந்து - "ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னை மாணவி தேர்வு"
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மாணவி ஸ்ருதி பழனியப்பன் (20) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
"ஹார்வர்ட் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் சக்திவாய்ந்த அமைப்பாக இளங்கலை கவுன்சில் உள்ளது. இதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்ருதியும் துணைத் தலைவர் பதவிக்கு அவருடன் சேர்ந்து போட்டியிட்ட ஜூலியா ஹூசா (20) என்பவரும் வெற்றி பெற்றனர்.
தேர்தலில் ஸ்ருதியும் ஜூலியா வும் 41.5 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்களை அடுத்து இரண்டாமிடம் பிடித்த ஜோடி 26.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.
ஸ்ருதியின் பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். கடந்த 1992-ல் இவர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினத்தந்தி: "கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு"
டெல்லி தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தியவர் பிடிபட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"டெல்லி மாநில அரசின் தலைமைச்செயலகம் 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் செயல்படுகிறது. அதன் 3-வது மாடியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகம் உள்ளது.
நேற்று வழக்கம் போல கெஜ்ரிவால் அலுவலகம் வந்து தன் பணிகளை கவனித்தார். மதியம் சுமார் 2 மணிக்கு அவர் மதிய சாப்பாட்டுக்கு செல்வதற்காக தனது அறையில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே பதுங்கி நின்ற ஒருவர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தினார். இதில் அவரது மூக்கு கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. நல்ல வேளையாக மிளகாய் பொடி அவரது கண்களை பதம் பார்க்கவில்லை.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்திய அந்த நபரை பாய்ந்து சென்று பிடித்து விசாரணைக்கு கொண்டு சென்றனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'டைம்ஸ் ஆஃப் இந்தியா': "இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது"
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் நடக்கவுள்ளது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக பிரிஸ்பேன் ஆடுகளம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் முன்னணி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களான மிட்சல் ஸ்டிச், ஹேசல்வுட்,நேதன் லயான் ஆகியோர் இடம்பெறவில்லை. வரவிருக்கும் டெஸ்ட் தொடரை முன்னிட்டு இவர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய இருதரப்பு டி20 போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவை 3-0 என்று இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- கஷோக்ஜி கொலை: கண்டனங்கள் இருந்தாலும் சௌதியுடன் உறவு தொடரும் - டிரம்ப்
- ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி
- ஆப்கன் மதத் தலைவர்கள் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 43 பேர் பலி
- கஜ வேதனை: "இதிலிருந்து எப்படி மீளப் போகிறோம்னு தெரியல" - மக்கள்
- புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; மிக கனமழைக்கு வாய்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :