You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசிய விளையாட்டு போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்று தமிழக வீரர் தருண் அய்யாசாமி சாதனை
இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரரான தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற 400மீட்டர் தடை தாண்டும் ஓட்ட பந்தயத்தில் தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டியில் தருண் அய்யாசாமி 48.96 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவரது முந்தைய தேசிய சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி பிரிவில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜோசப் ஆபிரஹாம் தங்கம் வென்றபிறகு, தருண் வென்ற வெள்ளிப்பதக்கமே இந்தியாவுக்கு கிடைத்த பதக்கமாகும்.
இந்த போட்டியில் கத்தாரின் சம்பா தங்கப்பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 47.66 வினாடிகளில் கடந்தார்.
இதுவரை நடப்பு ஆசிய விளையாட்டு போட்டிகளில் 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்கள் உள்பட 40 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.
தருண் அய்யாசாமி பதக்கம் வென்றது குறித்த தனது மகிழ்ச்சியை அவரது தாயார் பூங்கொடி பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். "நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். தருண் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வாங்கியது விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சென்ற காமன் வெல்த் போட்டியிலும் கலந்து கொண்டிருந்தான். ஆனால் அப்போது அவனுக்கு காலில் காயம் இருந்தால் வெற்றி பெற முடியவில்லை. காலில் காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் இன்னும் அதிக பயிற்சி எடுத்து அப்போதும் பதக்கம் வாங்கியிருப்பான்" என்று அவர் கூறினார்.
"சிறு வயது முதலே தருணுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம். பள்ளியின் ஆரம்ப காலத்தில் கோ-கோ போட்டிகளில் அதிகமாக பங்கேற்பான். கோ கோ வில் சிறப்பாக விளையாடியதால் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும்போதே தமிழக கோகோ அணியில் இடம் பெற்றிருந்தான். பின்னர் பத்தாம் வகுப்பிற்கு மேல் தடகள போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினான்" என்று அவர் மேலும் கூறினார்.
படிப்படியாக மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றான். அப்போதெல்லாம் வீட்டில் இருந்து சென்று பள்ளி கிரவுண்டில் பயிற்சி செய்தான். ஏசியன் கேம்ஸில் பங்கேற்றது முதலே தருண் பதக்கம் வெல்லவேண்டும் என வேண்டிக்கொண்டே இருந்தேன். வெள்ளிப் பதக்கம் கிடைத்ததை கேள்விப் பட்டவுடன் எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை அவ்வளவு சந்தோஷமாக உள்ளது. உறவினர்கள், சக ஆசிரியர்கள் என எல்லோரும் போன் செய்துகொண்டே இருக்கிறார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
தருண் அய்யாசாமிக்கு சத்யா என்கிற தங்கை ஒருவர் உள்ளார். கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துவரும் அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "நான் சொல்லமுடியாத சந்தோஷத்தில் உள்ளேன். காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும்போதே பதக்கம் வெல்வார் என நினைத்திருந்தேன். ஏசியன் கேம்ஸில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது அளவில்லா சந்தோஷமாக உள்ளது. இனியும் அதிகமான போட்டிகளில் பங்கேற்று நிறைய பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :