You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கால்பந்து உலககோப்பை : இன்னும் சில மணி நேரத்தில் சுமார் ரூ 260 கோடி பரிசு யாருக்கு?
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை திருவிழாவுக்கு உலகம் முழுவம் பரவலான வரவேற்பு உண்டு. இந்நிலையில் 2018 கால்பந்து உலகக் கோப்பை இறுதியாட்டம் இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கிறது.
குரேஷியா முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்போடு இருக்கிறது. அதே சமயம் பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை ஜெயிக்க திட்டமிட்டுள்ளது. கடைசி ஆறு உலக கோப்பை கால்பந்து தொடர்களில் மூன்றாவது முறையாக பிரான்ஸ் தற்போது இறுதியாட்டத்தில் விளையாடுகிறது.
பிரான்ஸ் அணி மீண்டும் கோப்பையை ஜெயிக்குமா?
20 வருடங்களுக்கு முன்னதாக பிரான்ஸ் உலக கோப்பையை வென்றது. 2006 உலககோப்பையில் இறுதியாட்டத்தில் இத்தாலியிடம் கோப்பையை இழந்தது.
2010 உலககோப்பையில் லீக் சுற்றோடு பிரான்ஸ் வெளியேறியது. 2014-ல் காலிறுதி வரையில் விளையாடியது.
குரூப் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் அணி அப்பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் பெரு அணிகளை வீழ்த்தியது. டென்மார்க் உடனான போட்டியை டிரா செய்தது.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்தது.
காலிறுதியில் உருகுவே அணியை 2-0 கோல் கணக்கில் வென்றது.
அரை இறுதியில் பெல்ஜியம் அணியை 1-0 என வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
கோப்பையை வெல்லுமா குரோஷியா?
குரோஷியா தனி நாடான பின்னர் கலந்து கொண்ட முதல் உலககோப்பையில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டதால் அரை இறுதி கனவு கலைந்தது. 1998-ல் நடந்த உலககோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. அதன்பிறகு 2002,2006,2014 உலக கோப்பைகளில் லீக் சுற்றோடு குரோஷியா வெளியேறியது.
ரஷ்யா உலககோப்பையில் குரோஷியாவின் பயணம் அபாரமானது. இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளையும் வென்ற ஒரே அணியாக விளங்குகிறது குரோஷியா.
குரூப் டி பிரிவில் இடம்பெற்ற குரோஷியா அணி அப்பிரிவிலுள்ள அர்ஜென்டினா, நைஜீரியா, ஐஸ்லாந்து அணிகளை வென்று நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது.
நாக் அவுட் சுற்றில் டென்மார்க் அணியுடனான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 1-1 என சமநிலையில் இருந்ததால் ஃபெனால்டி ஷூட் அவுட்டில் வென்றது.
காலிறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
அரை இறுதியில் இங்கிலாந்து அணியை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
பிரான்ஸ் அணியும் குரேஷியாவும் இதுவரை ஐந்து முறை மோதியுள்ளது. இதில் மூன்று போட்டிகளில் பிரான்ஸ் வென்றது. இரு போட்டிகள் டிரா ஆனது.
இவ்விரு அணிகளும் மோதிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகள் பெரிய தொடர்களில் நடைபெற்றது. 1998 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் குரோஷியா தோற்றது. 2004-ல் ஈரோ கோப்பையில் 2-2 கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
கடைசியாக நடைபெற்ற மூன்று உலககோப்பை இறுதி போட்டிகளும் கூடுதல் நேரம் வரை ஆட்டம் நீண்டது. குரோஷிமா இம்முறை விளையாடிய ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரை இறுதி ஆட்டங்களில் கூடுதல் நேரம் வரை ஆட்டம் நீண்டது.
உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் முறையாக குரேஷியா தகுதிபெற்றுள்ளது. உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் 10வது ஐரோப்பா அணியானது குரேஷியா.
2016 ஈரோ கோப்பையில் பிரான்ஸ் அணி இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியிடம் தோற்றது. கடந்த 20 வருடங்களில் நடந்துள்ள ஆறு உலககோப்பையில் மூன்று முறை இறுதிபோட்டிக்குத் தகுதி பெற்ற ஒரே அணி பிரான்ஸ். இதே காலகட்டத்தில் பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் இரண்டு முறை இறுதியில் ஆடின.
இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் 260 கோடி) பரிசாக வழங்கப்படும். இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 28 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :