You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப்பார்வை: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள்
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள்
மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ரசாக், இரவு முழுவதும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் ஊழல் என மூன்று குற்றச்சாட்டுகளை ரசாக் எதிர்கொள்கிறார்.
மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட நஜிப், 1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பில்லியன்கணக்கான டாலர்கள் காணாமல்போனது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்தார்.
ஐ.எஸ் தலைவரின் மகன் பலி
ஐ.எஸ் குழுவின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியின் மகன் ஹுடேஃபா அல்- பத்ரி, சிரியாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக ஐ.எஸ் குழு கூறியுள்ளது. ஹோம்ஸ் நகரில் உள்ள அனல்மின் நிலையத்தில் நடந்த தாக்குதலின்போது அவர் கொல்லப்பட்டார்.
அபு பக்கர் அல் பக்தாதி எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் உயிருடன் இருக்கிறார் என்பது ஐ.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிகிறது.
கூண்டில் அடைக்கப்பட்ட குழந்தை ஏசு
அகதிகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் எடுத்தும் வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, குழந்தை ஏசு மற்றும் ஏசுவின் தாய் மரியா, தந்தை ஜோசப்பின் சிலையை ஒரு அமெரிக்க சர்ச் கூண்டில் வைத்து எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளது.
பைபிளில் குறிப்பிடப்படுகின்ற இந்த குடும்பமும் அகதிகளாக இருந்துள்ளது என அமெரிக்காவின் இன்டியானாபோலீஸில் உள்ள இந்த தேவாலயம் விளக்கம் அளித்துள்ளது.
அகதிகளின் குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கும் டிரம்ப் நிர்வாகத்துக்கான எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளதாக இந்த தேவாலயம் கூறுகிறது.
தாய்லாந்து: சிக்கியுள்ள சிறுவர்களின் புதிய காணொளி
தாய்லாந்து குகை ஒன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்களைக் கொண்ட கால்பந்து அணியின் புதிய காணொளியை மீட்பு படையினர் வெளியிட்டுள்ளனர். தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் சிறுவர்கள், நல்ல உடல் நிலையில் இருப்பதாகக் கூறுவதாக இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது.
இச்சிறுவர்கள் வெளியே மீட்கப்படும் வரை, அவர்களுடனே தங்கியிருக்கும் முக்குளிப்பவர்களிடம் சிறுவர்கள் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பது இந்த காணொளியில் தெரிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்