You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீண்டும் குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் சகோதரி: இம்முறை வீனஸ்
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் கூறுவது சரியாக இருந்தால், செரீனா பெண் குழந்தையைத்தான் பெற்றெடுப்பார்.
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்றுவரும் வீனஸ் வில்லியம்ஸ், தனது போட்டிக்கு பிறகு அளித்த தொலைக்காட்சி பேட்டியில் இந்த தகவலை எதேச்சையாக தெரிவித்துள்ளார்.
தனது தங்கைக்கு பிறக்கப்போகும் குழந்தையை 'அவள்' என்று குறிப்பிட்ட வீனஸ் வில்லியம்ஸ், தங்கையின் மகளுக்கு வைப்பதற்கென சில பெண் பெயர்களை பரிந்துரைத்தார்.
வரும் இலையுதிர் காலத்தில், செரீனாவுக்கும், அவரது வாழ்க்கைத் துணைவரான , ரெட்டிட் சமூக வலைதள நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுக்கும் குழந்தை பிறக்கவுள்ளது.
கடந்த புதன்கிழமையயன்று பாரீசில் ஜப்பானை சேர்ந்த குருமி நாராவை வென்ற பிறகு, வீனஸ் வில்லியம்ஸ் அளித்த பேட்டியில், ''அவள் (செரீனாவுக்கு பிறக்கப் போகும் குழந்தை) என்னை பிரியமான பெரியம்மா என்றே அழைக்கப் போகிறாள்'' என்று யுரோஸ்போர்ட் தொலைக்காட்சி தொகுப்பாளரிடம் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
தனது மற்ற சகோதரிகளான லிண்ட்ரீயா மற்றும் இஷா ஆகியோர் தங்கள் பெயர்களைத்தான் செரீனாவின் குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று விரும்புவதாக வீனஸ் வில்லியம்ஸ் நகைச்சுவையாக தெரிவித்தார்.
வில்லியம்ஸ் சகோதரிகளின் குடும்பத்துக்கும், ரகசியங்களை காப்பதற்கும் ஏழாம் பொருத்தம்தான் போலும்.
கடந்த மாதத்தில், ஸ்னாப்ச்சாட் வலைதளத்தில் தனது புகைப்படத்தை செரீனா வில்லியம்ஸ் தவறுதலாக பதிவேற்றம் செய்ததால் அவர் கருவுற்று இருக்கும் செய்தியை தற்செயலாக உலகம் அறிந்து கொண்டது.
23 கிராண்ட் ஸ்லாம்களை வென்றுள்ள செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ''20 வாரங்களாகி விட்டது'' என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்