You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார்.
தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார்.
இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ராகுல் டிராவிட்டை கவுரவிக்க விரும்பிய பெங்களூரு பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க விரும்பியது.
தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை தான் பணிவுடன் மறுப்பதாக டிராவிட் தெரிவித்துள்ளதாக பெங்களூரு பல்கலைக்கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
தனது அபார ஆட்டத்தால் இந்திய அணியை பலமுறை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளார். இதனால் இந்திய அணியின் 'தடுப்புச்சுவர்' என்று அவர் அழைக்கப்பட்டார்.
1996-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான டிராவிட், கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது 19 வயதுக்குற்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்