கடல் குதிரையின் ரகசிய வாழ்க்கையை ஆய்வு செய்யும் தந்தை, மகள்

பதினான்கு வயதான க்ளோ பிரவுன், அவரது அப்பா கிறிஸ் இருவருக்கும் ஓர் அசாதாரணமான பொழுதுபோக்கு உண்டு. அவர்கள் பிரிட்டனின் டோர்செட் கடற்கரையில் கடல் குதிரைகளின் ரகசிய வாழ்க்கையைப் பதிவு செய்கிறார்கள்.

கடல்குதிரை அறக்கட்டளையின் தன்னார்வ முக்குளிப்போராக இருக்கும் இருவரும் குளிர்காலத்தில் வேமவுத் விரிகுடாவில் மீன்களைக் கண்காணித்து அவற்றின் நடத்தையைப் பதிவு செய்ய முயன்றனர்.

"கடல் குதிரைகள் ஆண்டு முழுவதும் ஒரே பிரதேசத்தில் தங்குகின்றனவா என்பதை உறுதிசெய்ய ஆண்டு முழுவதும் முக்குளிக்க நான் முடிவெடுத்தேன். அந்த முயற்சியின் முதல் ஆண்டு இது," என்கிறார் பிரவுன்.

தொழில்முறை முக்குளிப்பு பயிற்றுநர்கள் சங்கத்தில் டைவிங் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவருடைய மகள் க்ளோ தந்தையோடு இணைய முடிவு செய்தார். அவர் வேமவுத்தில் செயல்படும் அறக்கட்டளையில் ஆய்வு செய்யும் உரிமம் பெற்றவர்களில் ஒருவராக உள்ளார்.

"மிகவும் குளிர்ச்சியான பகுதியில் முக்குளிப்பதும் இதில் இருக்கும். நாங்கள் கடல் குதிரைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். அவை குளிர்காலத்தில் ஆழமற்ற பகுதியில் இருக்கின்றனவா அல்லது ஆழமான பகுதிக்குச் செல்கின்றனவா என்பதைக் கண்காணிக்கிறோம்," என்கிறார் க்ளோ.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் வளங்களில் கடல் குதிரைகளை கவனித்து வந்தவரும் வளர்ப்பிடங்களில் அவற்றை வளர்த்தவருமான பிரவுன், "அவற்றின் ரகசிய வாழ்க்கையைப் பற்றி இன்னும் நிறைய தெரியவில்லை.

அவற்றின் எண்ணிக்கை இயக்கவியல் மற்றும் அபாரமான கடற்பாசி வாழ்விடங்களை அவை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்," என்கிறார்.

கையில் ஸ்லேட், பென்சில், டார்ச் லைட், திசைகாட்டி, அளவிடும் கருவி, கேமரா ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தந்தையும் மகளும் மெதுவாக நீந்திக் கொண்டே, கடற்பாசியில் வாலைச் சுற்றிக் கொண்டிருக்கும் சில கடல் குதிரைகளைப் பார்க்க முடியுமென்ற நம்பிக்கையோடு தங்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

இதுவொரு நுட்பமான செயல்முறை. இது 90 நிமிடங்கள் வரை நீடிக்கும். தண்ணீரில் நீந்துவது, "வெறும் விரல்கள், முழங்கால்கள் அல்லது கால்களில் அணிந்திருக்கும் துடுப்புகளின் உதவியொடு" கடல் பரப்பில் படுத்தவாறு ஆய்வு செய்வது என்று இருக்கும் என்கிறார் க்ளோயி.

"அவற்றைக் காண்பது மிகவும் கடினம். பொதுவாக அவற்றின் சுற்றுப்புறத்தோடு ஒன்றி இலைமறை தோற்றமாகக் கலந்துவிடுகின்றன.

"சில நேரங்களில் அவற்றின் நிழற்படத்தைத் தெளிவாகக் காணலாம். ஆனால், சில நேரங்களில் அவை தலையைக் குனிந்து தன்னை மறைந்துக் கொண்டிருந்தால் கண்டுபிடிக்கவே முடியாது," என்றும் க்ளோ கூறுகிறார்.

"என்னால், தனித்தனியாக வெவ்வேறு கடல் குதிரைகளை தனிப்பட்ட முறையில், அவற்றின் உடலிலுள்ள அடையாளக் குறிகளை வைத்து இனம் காணமுடியும். அவையனைத்துமே முகத்திலும் உடலிலும் தனித்துவமான புள்ளிகளைக் கொண்டுள்ளன.

நாங்கள் ஒரு கடல் குதிரையைக் கண்டால், நான் நிதானமாக பின்னால் இருந்து அதை அவதானிப்பேன், என் அப்பா முன்னால் சென்று அதை அடையாளம் காண்பதற்காக அதன் இரு பக்கங்களையும் ஒளிப்படம் எடுப்பார்.

அவர் விலகிச் செல்லும்போது, நான் அருகில் சென்று சில படங்களை எடுத்து, நீருக்கடியிலேயே அவற்றை அடையாளம் காண முடியுமா என்று பார்ப்பேன்," என்கிறார் க்ளோ.

அவர்கள் முக்குளிக்கும்போது இரண்டு கடல் குதிரைகளில் ஒன்றை வழக்கமாகப் பார்க்கிறார்கள். அது இவர்களின் குளிர்கால ஆய்வுத் திட்டத்திற்கு உதவக்கூடும் என்று தந்தையும் மகளும் நம்புகிறார்கள்.

"ஓர் ஆண் கடல் குதிரைக்கு 'ஸ்னெயில் ஹெட்' (நத்தை தலை) என்று பெயரிட்டுள்ளோம். ஏனெனில் முதல்முறை பார்த்தபோது அவனது கிரீடத்தின் உச்சியில் ஒரு நத்தை இருந்தது. அவனுடைய துணை என்று நாங்கள் நினைக்கும் ஒரு பெண் கடல் குதிரையின் பெயர், 'ஸ்னெயில் லெஸ்' (நத்தை இல்லாதவள்)

"அவை இரண்டின் வாழ்விட எல்லைகள் அருகருகே இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவை இரண்டையும் ஒரே நேரத்தில் நாங்கள் பார்த்ததில்லை. அவற்றின் வாழ்விட எல்லைகள் எவ்வளவு பெரியவை என்பதைப் பற்றி அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் எங்களுக்கு மேலும் தெரியவரும் என்று நம்புகிறோம்," என்கிறார் க்ளோ.

முக்குளிப்பை முடித்துவிட்டு நிலப்பகுத்திக்கு வந்தவுடன், தந்தையும் மகளும் முக்குளிப்புகளில் சேகரித்த தகவல்களை விரிவான அறிக்கையாக எழுதி அதை கடல் குதிரை அறக்கட்டளைக்கு அனுப்புகின்றனர். அதைச் சேகரிக்கும் அறக்கட்டளை, அறிக்கைகளைத் தொகுத்து கடல் மேலாண்மை அமைப்பிடம் சமர்ப்பிக்கின்றது.

செப்டம்பர் மாதம் இதைத் தொடங்கிய இவர்கள், தங்கள் குளிர்கால முக்குளிப்பு ஆய்வுகளில் கிடைக்கும் கண்டுபிடிப்புகளை அடுத்த வசந்த காலத்திற்குள் வெளியிட முடியுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

கடல் குதிரைகள்

  • கடல் குதிரைகள் மீன் இனத்தைச் சேர்ந்தவை. மீனின் சுவாசப்பை அமைப்பைக் கொண்டுள்ள இவை, செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன.
  • கடல் குதிரைகள் மைசிஸ் இறால் போன்ற சிறிய ஒட்டுமீன்களைச் சாப்பிடுகின்றன. நன்கு வளர்ந்த ஒரு கடல் குதிரை ஒரு நாளைக்கு 30-50 முறை சாப்பிடும்.
  • கடல் குதிரைகள் சிறந்த கண்பார்வை திறன் கொண்டவை. அவற்றின் கண்கள் தலையின் இருபுறமும் சுதந்திரமாகச் செயல்படும்.
  • பெண் கடல் குதிரைகளின் வாழ்விட எல்லை சுமார் 100 சதுர மீட்டர், ஆண் கடல் குதிரைகளின் வாழ்விட எல்லை சுமார் 0.5 சதுர மீட்டர் பரப்பளவு தான். அவற்றின் வாழ்விட எல்லைகள் ஒன்றொக்கொன்று அருகிலேயே அமைந்திருக்கும்.
  • பிரிட்டிஷ் கடல் பகுதியில் கடல் குதிரைகளை தொந்தரவு செய்வது, எடுப்பது ஆகிய செயல்கள் சட்டவிரோதமானவை. இந்திய கடற்பகுதியிலும் கடல் குதிரைகளைக் கொல்வது, எடுப்பது, தொந்தரவு செய்வது, விற்பனை செய்வது, வாங்குவது அனைத்தும் சட்டவிரோதம்.
  • கடல் குதிரைகளின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதாவது கடற்பாசி படுக்கையில் கடல் குதிரையைக் கண்டால், அந்த கடற்பாசி படுக்கை பாதுகாக்கப்படும் பகுதியாகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: