கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள் - காரணம் என்ன?

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கான நேரத்தை மருத்துவர்கள் தீர்மானிப்பதற்குப் பதிலாக சமீப காலமாக ஜோதிடர்கள்தான் அதிகம் தீர்மானிக்கிறார்கள் என்றும், நல்ல நேரம் பார்த்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் பலர் மருத்துவர்களை நிர்ப்பந்திக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் மாதங்கி ராஜகோபால்.

வயிற்றில் உள்ள சிசுவின் உயிரை காக்கும் சிகிச்சையாக இருந்த சிசேரியன், பிரசவ வலியைத் தவிர்ப்பதற்கும், ஜோதிட நம்பிக்கைக்கு ஏற்ப குழந்தை பிறப்பு நேரத்தை தீர்மானிக்கவும் பயன்படுகிறது என்று கூறும் அவர், சிசேரியன் பரவலாக செய்யப்படுகிற ஆபத்தற்ற சிகிச்சையாக இருந்தபோதும், சில நேரங்களில் தாய் சேய் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அபாயமும் இதில் இருக்கிறது என்றும் கூறுகிறார்.

இந்திய அரசு புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் தற்போது 21.5 சதவீத பிரசவங்கள் சிசேரியன் பிரசவங்களாக நடைபெறுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் சிசேரியன் பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரித்தே இந்த சதவீதம் வந்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கம், உடல் உழைப்பு என பல்வேறு காரணங்களால் சிசேரியன் அதிகரித்துள்ளது. ஒரு சிலர் தங்களால் வலி தாங்க முடியாது என்று கூறி அறுவை சிகிச்சையை நாடுவதும் உண்டு என்கிறார் மாதங்கி.

சிசேரியன் அறுவை சிகிச்சை தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் மருத்துவர் மாதங்கி.

சிசேரியன் செய்வதற்கான காரணிகள் என்ன?

முதலில் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்துகொண்டே போனால்,உடனடியாக குழந்தையைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.

அடுத்ததாக, குழந்தையின் எடை முக்கியம். 3.2 கிலோவுக்கு மேலாக எடையுள்ள குழந்தையாக இருந்தால், அந்த தாயின் இடுப்பு எலும்பு அந்த குழந்தை வெளியில் வருவதற்கான நெகிழ்வுத் தன்மையுடன் இருந்தால்தான் அந்த குழந்தை வெளியேறமுடியும். இல்லாவிட்டால், அறுவை சிகிச்சைதான் வழி. மிகவும் எடை குறைந்த குழந்தையாக இருந்தாலும், அந்த குழந்தையால் வெளியில்வர முடியாது. பிரசவ வலியின் சுருக்கங்களை அந்தக் குழந்தையால் தாங்க முடியாது என்பதால், அந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மூன்றாவது முக்கிய காரணம், பெண்ணின் கர்ப்பப்பை வாய் 10 சென்டிமீட்டர் அளவுக்கு திறந்து விரிந்து கொடுக்கவேண்டும். அப்படி இல்லாத சமயத்தில், அறுவை சிகிச்சைதான் வழி.

முதல் பிரசவம் சிசேரியன் செய்வதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாகதான் இருக்குமா?

கண்டிப்பாக அப்படி இல்லை. முதல் பிரசவம் போலவேதான் இரண்டாவது பிரசவம் அமையும் என்று சொல்லமுடியாது. சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்றால், அந்த தாய் மற்றும் குழந்தையின் முயற்சியும் அடங்கும். சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்துதான் சுகப் பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை என்பதை சொல்லமுடியும்.

சமீப காலங்களில், ஒரு சில பெற்றோர் சுகப் பிரசவம் நேருவதற்கு வாய்ப்பிருந்தாலும், தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நல்ல நேரத்தில்தான் குழந்தை பிறக்கவேண்டும் என்றும் கேட்கிறார்கள். அதனால், மருத்துவர்களைவிட ஜோதிடர்கள் அறுவை சிகிச்சையா அல்லது சுகபிரசவமா என முடிவுசெய்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

ஒரு சில குடும்பங்களில், அந்த பெண் வலிதாங்க முடியாது என்று சொல்வார் அல்லது அந்த பெண்ணின் பெற்றோர், கணவர் முடிவுசெய்து அறுவை சிகிச்சைதான் தங்களுக்கு வேண்டும் என்றும் சொல்வது நடைமுறையில் இருக்கிறது.

சிசேரியன் சிகிச்சையால் வாழ்நாள் முழுவதும் வலிகளை பெண்கள் அனுபவிப்பார்களா?

ஒரு அறுவை சிகிச்சையால் பிரச்சனை வராது. ஒருவேளை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று சிசேரியன் ஒரு பெண்ணுக்கு நடந்தால், அவரது உடலில் சில கோளாறுகள் ஏற்படும். ஒவ்வொரு முறை அறுவை சிகிச்சை செய்யும்போதும், கர்ப்பப்பைக்கு அருகில் உள்ள சிறுநீர்ப் பை மற்றும் பிற உறுப்புகளில் அசைவு ஏற்பட்டு, அவை முன்பு போல செயல்படுவதில் சிக்கல் ஏற்படலாம்.

சில சமயம், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு, ரத்தம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்வதால், உடல் தேறுவதற்கு அந்த பெண்ணிற்கு போதுமான கவனிப்பு, ஊட்டச்சத்து உணவு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சிசேரியன் சிகிச்சையின்போது செலுத்தப்படும் மயக்க ஊசியின் பக்கவிளைவால் முதுகுவலி ஏற்படும் என்று சொல்வது உண்மையா?

சிசேரியன் செய்யும்போது, இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை மறுத்துபோகும் மயக்கஊசியை செலுத்துவார்கள். அந்த ஊசி முதுகு தண்டில் செலுத்தப்படும். எபிடியூரல் அனஸ்தீஷியா என்று கூறப்படும் இந்த ஊசியால் காலம் முழுவதும் முதுகுவலி ஏற்படும் என்பது உண்மை இல்லை.

பொதுவாக, அறுவை சிகிச்சைக்கு பின்னர், அந்த பெண் உடல் தேறுவதற்காகவும், குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டும் என்பதற்காகவும் அதிகமாக உணவு எடுத்துக்கொள்வதால், சரியான உடற்பயிற்சி இல்லாமல், உடல் எடை அதிகரிக்கும். அதனால், முதுகு வலி ஏற்படும். மயக்க ஊசியால் முதுகு வலி ஏற்படாது என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: