அல்சைமர் நோய் மருந்து: மூளையில் ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்கும் லெகானமாப்

    • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்
    • பதவி, சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர்

அல்சைமர் நோயை மட்டுப்படுத்தும் ஒரு மருந்தின் சோதனை முடிவுகள் 'வரலாற்று சிறப்புமிக்க தருணமாக' பார்க்கப்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களான இஸ்சய் (Eisai) மற்றும் பயோஜின் (Biogen), இந்த நோய் ஆரம்ப கட்ட நிலையில் இருக்கும்போது, தங்களின் மருந்து வேலை செய்தது என்று கூறியுள்ளன.

இது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த நோயால் மூளையில் ஏற்படும் தேய்மானத்தின் வேகம் மெதுவாகிறது என்று கண்டறியப்படுகிறது.

இந்த முடிவுகள் குறித்து கிடைத்த குறைவான தரவுகள்கூட, டிமென்ஷியா குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனநலத்தில் எத்தகைய முன்னேற்றம்?

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் உருவாகும் நச்சுத்தன்மை வாய்ந்த பீட்டா - அமிலாய்டு புரதங்களின் திட்டுகளை நீக்கும் வகையில் லெகானமாப் (lecanemab) என்ற மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் நடந்த பல பரிசோதனை தோல்வியடைந்தன. இந்த நோயை உண்மையில் அமிலாய்டுதான் ஏற்படுத்துக்கின்றதா என்ற கேள்விக்கு வழிவகுத்தது.

இந்த சோதனையில், அல்சைமர் பாதிப்பின் ஆரம்ப கட்ட நிலையில் இருந்த 1795 பேருக்கு ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை லெகானமாப் மருந்து அளிக்கப்பட்டது. அவர்களின் நினைவாற்றலும் மனநல விரைவியக்கமும் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டன.

மாதிரி மருந்து பெற்றவர்கள் மற்றும் 18 மாதம் சிகிசைக்கான மருந்து அளிக்கப்பட்டவர்களை ஒப்பிடுகையில், மருந்து அளிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளானவர்களின் அறிவுத் திறன் குறையும் வேகம் 27% குறைந்துள்ளது என்று மருந்தாக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மூளையில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட புரதங்களும் குறைக்கப்பட்டதும் அவர்களிடம் தென்பட்டது. மூளை வீக்கமும், தலைவலியும் அவர்களுக்கு உண்டான பக்கவிளைவுகளில் அடக்கம். இந்த மருந்து மற்ற டிமென்ஷியா வகை நோய்களுக்கு வேலை செய்யாது.

'இது மிகவும் ஊக்கமளிக்கிறது'

இதுகுறித்து பயோஜின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மிச்செல் வோநட்ஸாஸ் கூறுகையில், "லெகனேமாப் மருந்து அங்கீகரிக்கப்பட்டால், அல்சைமர் நோய் தீவிரமாவதை மட்டுப்படுத்தும் திறன் உள்ளது என்று நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நம்பிக்கை கிடைக்கும். மேலும் மூளையின் அறிவுத் திறனுக்கும் செயல்பாட்டிற்கும் மருத்துவ ரீதியான அர்த்தமுள்ள தாக்கத்தை அளிக்கும்," என்றார்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் வழங்கப்படும் மருந்துக்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு இந்த நிறுவனங்கள் இப்போது விண்ணப்பித்துள்ளன.

அல்சைமர்ஸ் ரிசர்ச் யுகே நிறுவனத்தின் ஆய்வுகளுக்கான இயக்குநர் டாக்டர் சூசன் கோல்ஹாஸ், இது ஒரு திருப்புமுனை என்றும், டிமென்ஷியா ஆராய்ச்சிக்கான வரலாற்று தருணம் என்று கூறினார். ஏனெனில் இது 'ஒரு தலைமுறையில் அறிவுத்திறன் தேய்மானத்தை வெற்றிகரமாகக் குறைக்கும்' முதல் பெரிய மருத்துவ பரிசோதனையாகும் என்றார்.

யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஹார்டி, இந்த பரிசோதனை முடிவுகள் உண்மையிலேயே ஊக்கமளிக்கும் என்றார்.

"இந்த முடிவுகள் சுமாரானவை, ஆனால் உண்மையானவை," என்று அவர் கூறினார். "இது நிச்சயம் மாயை அல்ல. ஆனால் இது ஒரு நிச்சயமான 'ஆரம்பத்தின் முடிவு' போல் தெரிகிறது." என்றார்.

'நேர்மறையான முடிவு'

இதே நிறுவனங்கள் முன்பு டுகனுமாப் (ducanumab) எனப்படும் அல்சைமர் மருந்தை அறிவித்தன. அது குறித்து பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் அதன் அமெரிக்க வெளியீடு பரவலாக விமர்சிக்கப்பட்டது. அந்த மருந்து வேலை செய்ததா என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் அதை அனுமதிக்க மறுத்தது.

அவர்களின் சமீபத்திய மருந்துக்கான ஆரம்பகட்ட தரவு தெளிவாக இருக்கிறது. ஆனால் அதன் முழுமையான விவரங்கள் நவம்பர் வரை அறிவிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த 'முதுமை மனநல மருத்துவத்தின்' பேராசிரியரான பேராசிரியர் ராப் ஹோவர்ட் கூறுகையில், "இது ஒரு தெளிவான, புள்ளிவிவர ரீதியாக நேர்மறையான முடிவு. அல்சைமர் நோயின் முதல் உறுதியான மாற்றத்தைக் காணும் போது ஒரு வரலாற்று தருணத்தை பிரதிபலிக்கிறது," என்றார்.

"இதற்காக நாங்கள் நீண்ட நேரம் காத்திருந்தோம் என்று கடவுளுக்கு தெரியும்."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: