வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது?

    • எழுதியவர், ரெடாக்ஸியோன்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ

உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எந்த உணவை சாப்பிட்டால் ஏதுவாக இருக்கும், எந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், வயிற்றுபோக்கை நிறுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என பல கேள்விகள் எழும். இந்த வயிற்றுப்போக்கு முறையாக சாப்பிடாமல் இருப்பது, புற்றுநோய், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். சிலருக்கு சில உணவுகளுக்கு ஒவ்வாமை இருக்கலாம்.

நிபுணர்கள் பரிந்துரைக்கும் முதல் விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட நபர் நன்கு நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதை செய்ய வேண்டும்.

பிரேசிலிய மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவரும் குழந்தைகளுக்கான மருத்துவருமான லூசியானா ரோட்ரிக்ஸ் சில்வா கூறுகையில், "எல்லா வயதினருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அவர்களை காக்கும் தூண்களாக இருப்பது அவர் உடலில் உள்ள நீர்ச்சத்தும் ஊட்டச்சத்துமே ஆகும்," என்று பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.

அதிலிருந்து நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட கூடாது என்பதை தீர்மானிக்கலாம்.

இதற்கு பொதுவாக சில உணவுகள் பரிந்துரைக்கப்படும். ஆனால் இந்த 'மெனு' உண்மையில் ஒவ்வொரு நபரின் உடல்நலத்தின் பின்னணி, வயது மற்றும் வயிற்றுப்போக்கின் தீவிரம் போன்றவை பொறுத்தது என்று பிபிசி நியூஸ் பிரேசிலுக்கான கிறிஸ்டியான் மார்டின்ஸ் படித்த ஆய்வுகள் குறிப்பிடுக்கின்றன.

அதே போல், இது உணவைப் பொறுத்த விஷயம் மட்டும் அல்ல. அந்த உணவு எப்படி பாதுகாக்கப்படுகிறது, தயாரிக்கப்படுகிறது, பரிமாறிப்படுகிறது என்பதை பொறுத்தும் உள்ளது.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். என்ன செய்ய வேண்டும் என்பது ஒருவருக்கான சிறப்பு நிபுணர் கையில் உள்ளது.

ஆனால், பொதுவாக வயிற்றுபோக்கை அதிகரிக்கும் சில வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கொழுப்பு, காரமான, வறுத்த மற்றும் இனிப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. மேலும், பழச்சாறுகள், மது பானங்கள், முழு தானியங்கள் கொண்ட உணவுகள் அல்லது கரையாத நார்ச்சத்து கொண்ட உணவுகள் (உதாரணமாக பீன்ஸ் மற்றும் முழு கோதுமை) ஆகியவற்றை வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உணவில் சேர்க்கக்கூடாது.

தொற்று, வீக்கம், உணவு நஞ்சாதல் , உணவு ஒவ்வாமை, சமநிலையற்ற உணவுப்பழக்கம், கோவிட், மருந்துகளின் பக்க விளைவுகள், மன அழுத்தம் அல்லது புற்றுநோய், குரோன் நோய் (Crohn's disease), குடற்புண்கள் மற்றும் குடலில் எரிச்சல் ஏற்படுத்தும் நோய்க்கான அறிகுறி போன்றவை என வயிற்றுப்போக்கிற்கு பல காரணங்கள் உள்ளன.

வயிற்றுப்போக்கு ஏற்படுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இது முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால், இதனால், உயிரிழப்புக்கும் வாய்ப்பு உண்டு.

ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் வயிற்றுப்போக்கில் ரத்தம், சீழ் ஏற்படுவது, தொடர்ந்து வாந்தி, தொடர்ந்து அல்லது கடுமையான வயிற்று வலி, எடை இழப்பு, படபடப்பு, நீரிழப்பு அறிகுறிகள் அல்லது மலத்தின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றிற்கு மருத்துவ உதவியை நாடுமாறு நிபுணர்களும் சுகாதார அதிகாரிகளும் பரிந்துரைக்கின்றனர்.

வயிற்றுப்போக்கை நிறுத்த உதவுவது மருந்தா? உணவா?

வயிற்றுப்போக்கை நிறுத்த முயற்சி செய்ய வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது மற்ற ஏதோ ஒரு தீவிரமான நோயில் இருந்து உடலை பாதுகாக்க நடக்கும் முயற்சியின் வெளிப்பாடு. அதை நிறுத்த முயற்சிப்பது குடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவிலிருந்து வரும் நச்சுக்கு எதிரான போராட்டத்தை பாதிக்கலாம்.

ஆனால் கொழுப்பு இல்லாத கோழி, மீன், இறைச்சி, வெள்ளை அரிசி, தோல் உரிக்கப்படாத ஆப்பிள்கள், கேரட் மற்றும் வாழைப்பழங்கள் போன்றவை வயிற்றுப்போக்கை போக்க அல்லது மேலும் மோசமாக்காமல் இருக்க அனைவருக்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படும் உணவுகளாக உள்ளன.

இவை மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை வயிற்றுப்போக்கு அறிகுறிகளைப் போக்க உதவும் என்றும், எடை இழப்பு போன்ற சிக்கல்களைத் தடுக்க உதவும் எனவும் ட்ரையாங்குலோ மினிரா பெடரல் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டி விளக்குகிறது.

அதே போல், குரோன் நோய் (Crohn's disease) போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் உண்ணும் உணவுகள் மற்றும் குடலில் இந்த உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களின் நிலையை மிகவும் துல்லியமாக கண்டறிய முடியும்.

வயிற்றுப்போக்கு நோய்க்கான உணவைப் பற்றி சிந்திக்கும்போது, அது எப்படி சேமிக்கப்படுகிறது, தயாரிக்கப்படுகிறது, பரிமாறப்படுகிறது என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்ன சாப்பிட கூடாது?

ஒவ்வொருவரின் உடல்நலமும் தனித்துவமானது. ஆனால் பொதுவாக, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன.

இந்த உணவுகள் வயிற்றுப்போக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவை குடலின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.

வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் பின்வரும் உணவுகளை தவிர்க்கலாம்

  • மது, காஃபின் மிகுந்த அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்கள்
  • வறுத்த உணவுகள்
  • சர்க்கரை மற்றும் இனிப்புகள்
  • பருப்பு வகைகள்
  • எண்ணெய்கள்
  • மிளகு
  • விதைகள் கொண்ட ரொட்டி
  • மிளகாய் தூள் போன்ற மசாலா
  • இனிப்புகள் மற்றும் மிட்டாய்கள்
  • நார்ச்சத்து கொண்ட உணவுகள்
  • சாசேஜ்கள் (sausages)
  • அக்ரூட் பருப்பு
  • தோல் கொண்ட பழங்கள்
  • அவகேடோ
  • விதைகள்
  • கொழுப்பு நிறைந்த பாலாடைக்கட்டிகள்
  • பார்லி மற்றும் கம்பு
  • பதப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்
  • அதிக கொழுப்புள்ள உணவுகள்
  • மலமிளக்கிய (laxative) விளைவைக் கொண்ட உணவுகள்
  • பழச்சாறுகளில் அதிக அளவு பிரக்டோஸ் உள்ளது. இது குடல் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. ஆகவே அவை தவிர்க்கப்பட வேண்டும்.
  • பால் பொருட்கள்

"பால் பொருட்கள் பெருங்குடலை எரிச்சலூட்டி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்" என்று பிரேசிலிய நியூட்ராலஜி சங்கத்தின் தலைவரான ஊட்டச்சத்து நிபுணர் டர்வால் ரிபாஸ் ஃபில்ஹோ பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.

"மேலும், முட்டை, பால், சோயா, மீன் போன்ற சில உணவுகள் நோயெதிர்ப்பு எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. அதாவது அவை ஒவ்வாமை ஊக்கியை (allergens) எதிர்க்கின்றன. இவை வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, மூச்சுத் திணறல், உதடு வீக்கம் மற்றும் உதடுகளின் சிவப்பது ஆகியவற்றை ஏற்படுத்தும்," என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: