You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அறிவியல் அதிசயம்: உலகை மாற்றிய தோல்வியடைந்த 4 முக்கிய கண்டுபிடிப்புகள்
உலகளவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இதயமுடுக்கி (Pacemaker) ஒரு தோல்வியுற்ற கண்டுபிடிப்பின் விளைவு என்பது உங்களுக்குத் தெரியுமா?
மின்விளக்கு, அச்சு இயந்திரம் போன்ற வெற்றிகரமான யோசனை உலகை மாற்றியது என்று கூறப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் தோல்வியடைந்த சிந்தனைகள் கூட உலகை மாற்றும்.
இது ஒருமுறை மட்டும் நடந்ததில்லை. இத்தகைய சிந்தனைகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வெற்றிபெறவில்லை. ஆனால், பின்னர் உலகை மாற்றிய தருணங்கள் உண்டு.
'மவுஸை' உருவாக்கியவர் யார்?
1960 ஆம் ஆண்டு, ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் மின் பொறியியல் படித்த டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர், மக்கள் புதிய கணினிகளைப் பயன்படுத்தும் விதம் பயனுள்ள வழியில் இல்லை என்பதை உணர்ந்தார்.
அந்த சமயத்தில், வீடியோ கேம்களின் இன்றைய கால ஜாய்ஸ்டிக் போன்ற சாதனமாக 'மவுஸ்' பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவது எளிதாக இருந்தது.
கணினியில் காட்டப்படும் 'கர்சரை'க் கட்டுப்படுத்தும் இரண்டு வட்ட சக்கரங்களைக் கொண்ட 'பக்' (Bug) என்ற சாதனத்தை ஏங்கல்பார்ட் உருவாக்கினார்.
இது ஓர் அற்புதமான யோசனையாக இருந்தது.
1966 ஆம் ஆண்டில், நாசா ஏங்கல்பார்ட்டின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தியது. இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏங்கல்பார்ட், சக கண்டுபிடிப்பாளரான பில் இங்கிலீஷுடன் சேர்ந்து, சான் பிரான்சிஸ்கோவில் ஆயிரம் பேர் முன்னிலையில் ஒரு சாதனத்தை 'டெமோ' செய்து காட்டினார். இது 'மவுஸ்' என்று அழைக்கப்பட்டது. தொழில்நுட்ப உலகில் இந்த கண்டுப்பிடிப்பு பற்றி நிறைய விவாதங்கள் நடந்தன.
ஏங்கல்பார்ட் மற்றும் பில் இங்கீலிஷ் ஒரு புதையலை கண்டுப்பிடித்தது போல் உணர்ந்தார்கள்.
ஆனால், சிறிது காலத்தில் அவர்களின் மகிழ்ச்சி மறைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்குள் ஏங்கல்பார்ட் முதலீடு பெறுவது நின்றுவிட்டது.
அவரது குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஸ்டான்போர்டை விட்டு வெளியேறினர். அவர்களில் பில் இங்கிலீஷ் ஜெராக்ஸில் வேலை செய்யத் தொடங்கினார்.
1979-ம் ஆண்டு, ஒருவர் ஜெராக்ஸ் ஆராய்ச்சி மையத்தை உருவாக்க, தன்னிடம் இருந்த ஜெராக்ஸ் பங்குகளைக் கொடுத்தார்.
அந்த மனிதர் வேறு யாருமல்ல ஸ்டீவ் ஜாப்ஸ். அவரது நிறுவனத்தின் பெயர் ஆப்பிள். இது மட்டுமின்றி, ஜெராக்ஸின் ஆய்வு மையத்தில் இருந்தே 'மவுஸ்' மீண்டும் அறிமுகமானது.
ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த யோசனையை மிகவும் விரும்பினார் என்று கூறப்படுகிறது. அதனால் அவர் தனது பொறியியல் குழுவை அவர்கள் என்ன செய்தாலும் உடனடியாக நிறுத்திவிட்டு, மவுஸை ஆப்பிள் தயாரிப்பாக மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
'மவுஸ்'-ன் அசல் காப்புரிமை ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்திடம் இருந்தது. அதாவது ஏங்கல்பார்ட்டிற்கு 'மவுஸ்'-ன் கண்டுபிடிப்பிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை.
ஏங்கல்பார்ட்டின் சிந்தனை அவரது காலத்திலிருந்து முன்னோக்கி இருந்தப்போதிலும், , நிஜ உலகில் 'மவுஸ்'- ஐ வீடு வீடாக கொண்டு சேர்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஒரு நபர் தேவைப்பட்டு இருக்கலாம்.
குண்டு துளைக்காத பொருளை உருவாக்கியவர்
ஒரு வன்முறையின் போது, ஆயுதப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடுக்கு ஆளாகாமல் இருக்க குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை அணிவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
இந்தக் குறிப்பிட்ட ஜாக்கெட்டைத் தயாரிக்க என்ன பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கும், யார் அதைச் செய்திருப்பார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அதை கண்டுபிடித்தவர் ஸ்டீஃபனி கோவலேக் என்பவர். துணிகள் மற்றும் நூல்களில் பேரார்வமுள்ள மிகவும் திறமையான வேதியியலாளர்.
ஸ்டெபானி செயற்கை இழைகள் துறையில் தனது ஆராய்ச்சியையும் செய்து வந்தார். அவர் எஃகை விட வலிமையானதையும், கண்ணாடியிழையை விட இலகுவானதையும் போல ஒரு திரவத்தைக் கண்டுபிடித்தார்.
அவருடைய கண்டுபிடிப்பு 'கெவ்லர்' என்று நமக்குத் தெரியும். இன்றைய உலகில், இது டயர்கள், கையுறைகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், விண்வெளி உடைகள் மற்றும் விண்கலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் ஸ்டெபானி இந்த படிக வடிவ திரவத்தை உருவாக்கியபோது, அவரது சக ஊழியர்கள் அதை உருவாக்கும் பணியில் அவருடன் சேர மறுத்துவிட்டனர்.
இந்த திரவத்தை ஓர் இயந்திரத்தில் சுழற்ற வேண்டும். இதனால் அதன் வலிமையை அறிந்துக்கொள்ள முடியும். ஆனால் அவரது நண்பர்கள் அவ்வாறு செய்வதால் இந்த திரவம் தங்கள் இயந்திரங்களில் சிக்கிவிடும் என்று கருதினர்.
3டி வீடியோ 'ஹெட்செட்'டை உருவாக்கியவர் யார்?
தொழில்நுட்ப உலகில், ஆக்மென்ட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்றவை குறித்து இன்று நாம் பேசுகிறோம். ஆனால் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் ஹெட்செட் இல்லாமல் கற்பனை செய்ய முடியுமா?
சினிமா உலகை மாற்ற ஓரிரு கண்டுபிடிப்புகளை செய்த ஒருவரிடமிருந்து தொடங்கியதுதான் இந்த 3டி வீடியோ ஹெட்செட். அதில் அவர் வெற்றிபெறவில்லை.
1957 ஆம் ஆண்டு திரைப்படம் பார்ப்பவர்களுக்கு நேரடி அனுபவத்தை அளிக்க 'சென்சோரமா' (Sensorama) என்ற சாதனத்தை உருவாக்கியவர் மார்டன் ஹெலிக். அது நகரும் இருக்கைகள் மற்றும் காற்றோட்டத்திற்கான இயந்திரங்கள் கொண்ட 3D வீடியோ இயந்திரம். திரைப்படம் பார்ப்பவர்கள் அவர்கள் இருக்கையில் திரையில் பார்க்கும் காட்சிகளின் அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது.
உதாரணமாக, ஒரு திரைப்படக் காட்சியில் ஒருவர் பைக்கில் செல்வதைக் கண்டால், பார்க்கும் நபர் அவரை நகரும் இருக்கை மற்றும் அவரது முகத்தில் வீசும் காற்று மூலம் உணர முடியும்.
இந்த கண்டுபிடிப்பு மீது ஹெலிக் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். கார் உற்பத்தியாளரான ஹென்றி ஃபோர்டுக்கு இந்த இயந்திரத்தை விற்கவும் அவர் முன்வந்தார். ஆனால் ஃபோர்டு, எல்லோரையும் போல இயந்திரத்தை வாங்க மறுத்தது. சென்சோரோமா இறுதியாக ஹெலிக்கின் தோட்டத்தில் கிடந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஹெலிக் டெலிஸ்பியர் மாஸ்க் என்ற 3டி வீடியோ ஹெட்செட்டிற்கு காப்புரிமை பெற்றார். இன்றைய காலகட்டத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி துறை 170 பில்லியன் டாலர் மதிப்புள்ள துறையாக வளர்ந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஹெலிக் இத்துறையில் ஒரு பகுதியாக இருக்க முடியவில்லை. அவர் 1997ஆம் ஆண்டு மறைந்தார்.
இதயமுடுக்கி (பேஸ்மேக்கர்)
இன்றைய காலத்தில், பேஸ்மேக்கர் எனப்படும் இதயமுடுக்கி என்பது மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரு சாதனமாகும். ஆனால், அந்த கண்டுபிடிப்பு பற்றிய கதை மிகவும் சுவாரஸ்சியமானது.
இதயத் துடிப்பைக் கேட்க விரும்பிய வில்சன் கிரேட்பீச் என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த முயற்சியில் அவர் படுதோல்வி அடைந்தார்.
அவர் இதயத்தின் மின் அலைகளைக் கேட்க முயன்றபோது, இந்த முயற்சியில் அவர் தவறுதலாக மின்தடை உபகரணத்தைப் பயன்படுத்தினார். இதனால், இந்த இயந்திரத்தில் இருந்து மின் அலைகளைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, அதிலிருந்து மின் அலைகள் வெளிவரத் தொடங்கியது.
இந்த வழியில் அவர் தற்செயலாக இதயமுடுக்கியைக் கண்டுபிடித்தார். இந்த சாதனம் கடந்த அறுபது ஆண்டுகளில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் 90 சதவீத இதயமுடுக்கி சாதனங்களுக்கான பேட்டரிகளை கிரேட்பேட்ச் நிறுவனம் தயாரித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தனது ஒரு தவறின் மூலம் நீண்ட ஆயுளைக் கொடுத்த கிரேட் பேட்ச் அவர்களும் 92 வயது வரை வாழ்ந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்