மெகலடான் சுறா 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தது எப்படி?

    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, சூழலியல் செய்தியாளர்

இதுவரை இந்த உலகில் வாழ்ந்த மிக நீளமான சுறா இனமான மெகலடானின் முடிவுக்கு மற்றொரு மிகப்பெரிய உயிரினத்துடன் ஏற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய உணவுச்சண்டை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பெருங்கடலில் வாழ்ந்த இந்த மிகப்பெரிய கடல் உயிரினத்தின் புதைபடிவ பற்களை ஆய்வுசெய்ததில், அந்த உயிரினம், மூர்க்கத்தனமாக வேட்டையாடும் மற்றொரு உயிரினமான வெள்ளை சுறாக்களுடன் உணவுக்காக போட்டியிட வேண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

திமிங்கலங்கள் மற்றும் மற்ற இரைகளின் இருப்பு குறைந்து வருவதற்கான போர், 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மெகலடான் சுறாவை அழிவுக்குத் தள்ளியது.

கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட சூழலியல் அழுத்தங்களும் இதில் பங்கு வகித்திருக்கலாம். மெகலடானின் அழிவு என்பது நிரந்தரமான மர்மமாகவே உள்ளது.

அவற்றின் அழிவுக்குக் காரணமாக, கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் நிகழும் வாழ்விட இழப்பு முதல் குறைந்துவரும் இரைகள் வரை பல வேறுபட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துபோன விலங்குகளின் உணவை புரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக, வாழும் மற்றும் அழிந்துபோன சுறாக்களின் பற்களில் உள்ள துத்தநாக ஓரகத் தனிமங்களை (ஐசோடோப்புகளை) சமீபத்திய ஆய்வொன்றில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

தற்போதும் உள்ள வெள்ளை சுறாக்களின் பற்கள் மற்றும் அழிந்துபோன மெகலடானின் புதைபடிவ பற்களில் உள்ள வேதியியல் தடயங்களின் மூலம் மிகப்பெரிய வெள்ளை சுறாக்கள் மற்றும் மெகலடான் இரண்டும் முன்னொரு காலத்தில் உணவு சங்கிலியில் ஒரே மாதிரியான நிலையை வகித்துள்ளதும் திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் கடற்பன்றிகள் உள்ளிட்ட ஒரே உணவுக்காக இரண்டும் போட்டியிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் மற்ற சூழலியல் அழுத்தங்களுடன் இந்த உணவுப் போட்டியும் மெகலடானின் அழிவுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

"தற்காலத்தில் வாழும் மிகப்பெரிய வெள்ளை சுறாக்களுக்கும் மெகலடானுக்கும் கடல்வாழ் உணவு ஆதாரங்களுக்காக போட்டி இருந்திருக்கும் என்பது புதிருக்கான ஒரு ஆதாரமாக உள்ளது" என, ஜெர்மனியின் மெயின்ஸில் உள்ள ஜோஹன்னஸ் குட்டென்பெர்க் பல்கலைக்கழக பேராசிரியரும் இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான தாமஸ் டுட்கென் தெரிவிக்கிறார்.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் அறிவியல் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஸ்வன்சீ பல்கலைக்கழகத்தின் கேட்டலினா பிமியென்டோ, மெகலடானுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்ற மர்மம் குறித்த விடைக்கு இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

கடந்த தசாப்தமாக இந்த உயிரினத்தின் அழிவுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுவருவதாக தெரிவித்த அவர், அந்த ஆய்வுகள் பல்வேறு காரணங்களை பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.

"மெகலடான் என்ன உண்டது மற்றும் வெள்ளை சுறாக்களுடன் எந்த எல்லை வரை அவை போட்டியிட்டன என்பன இன்னும் மர்மமாகவே நீடிக்கின்றன", என அவர் தெரிவித்தார்.

மெகலடான் சுறாக்கள் எவ்வளவு பெரியவை?

மெகலடான் (இதன் அறிவியல் பெயர் ஒடோடஸ் மெகலடான்) மிகப்பெரிய பற்கள் கொண்ட சுறா. சுமார் 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வரை சுற்றித்திரிந்துள்ளது. அதன் பெயருக்கு "பெரிய பற்கள்" என்று அர்த்தம்.

மிகப்பெரிய வெள்ளை சுறாக்களை விட மூன்று மடங்கு பெரிய உயிரினம் மெகலடான். அவை 18 மீட்டர் நீளம் வரையும் 60 டன்கள் எடை வரையும் வளரக்கூடியவை.

சமீபத்தில் சஃபோல்க் பகுதியில் ஆறு வயது சிறுவன் ஒருவன் மெகலடான் சுறாவின் பற்களை கண்டறிந்த நிலையில் அந்த உயிரினம் செய்திகளில் இடம்பிடித்தது.

ஷம்மி ஷெல்டன் என்ற அந்த சிறுவன் 10 செ.மீ. நீளம் கொண்ட (4 இன்ச்) பற்களை பாவ்ட்ஸே கடற்கரையில், விடுமுறை நாளொன்றில் கண்டுபிடித்தான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: