விண்வெளி அறிவியல்: பால்வெளி மண்டலத்தில் விசித்திரமான சுழலும் பொருளை கண்டறிந்த ஆஸ்திரேலிய மாணவர்

    • எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே
    • பதவி, பிபிசி உலகச் சேவை

ஆஸ்திரேலியாவின் கதிர்வீச்சு வானியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் (ICRAR - International Centre for Radio Astronomy Research), தைரோன் ஓ'டோஹெர்தி என்பவர் இளங்கலை மாணவராக சேர்ந்தார். அப்போது, பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சு அலைகளை ( Radio Waves) ஆராய உதவும் கணினி நிரலை வடிவமைப்பதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது.

அதற்கு பதிலாக, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நம் பால்வெளி மண்டலத்தில் ஓர் அறியப்படாத சுழலும் பொருளை அவர் கண்டறிந்தார். பல மாத பரிசோதனைகளை தொடர்ந்து, இறுதியாக இந்த ஜனவரியில் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, 22 வயதான ஓ'டோஹெர்தி பிபிசியிடம் கூறுகையில், "நான் சில கணினி குறியீடுகளை எழுத முயற்சி செய்துக்கொண்டிருந்தேன்." என்கிறார். "வானத்தில் நடப்பவை எதுவும் ஏன் நடக்கிறது என்று நமக்கு தெரியாது. "மேலும் இது நான் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற உதவியது. அதனால், எந்த புகாரும் இல்லை," என்று கூறி அவர் சிரிக்கிறார்.

நிலையற்ற பொருள்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் இருந்து பேசுகையில், ஓ'டோஹெர்தி, "மாற்றுநிலைகள்" என்று வானியலாளர்களால் அழைக்கப்படுபவை பற்றி கண்டறிவதற்கான ஒரு நுட்பத்தை உருவாக்கத் தொடங்கியதாக அவர் விளக்கினார். விண்வெளியில் உள்ள பொருட்கள் இயங்குவதும், நிற்பதுமாக தோன்றும்.

கண்டறியப்படக்கூடிய பொருட்களின் நீண்ட பட்டியல் அவரிடம் இருந்தது. ஆனால், அதிலுள்ள ஒன்றைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போது, "முன்பு எப்போதும் பார்க்காது" என்று ஐ.சி.ஆர்.ஏ.ஆரில் உள்ள குழு கூறும் ஒன்றை கண்டுபிடித்த பெருமைக்குரியவர் இவரே. மேலும் , ஒரு வானியல் நிபுணருக்கு "அச்சறுத்தும் உருவம்" கொண்ட கண்டுபிடிப்பாகும்.

புதிராக சுழலும் பொருளைப் பற்றி இதுவரை தமக்குத் தெரிந்ததை, இந்த ஆஸ்திரேலிய இளைஞர் பிபிசியிடம் கூறுகிறார்.

அது என்ன?

இதனை கண்டுபிடித்த சமயத்தில், 20 வயதாக இருந்த ஓ'டோஹெர்தி, இப்பொருள் என்னவாக இருக்கும் என்பது குறித்து இரண்டு கோட்பாடுகள் உள்ளன என்கிறார்.

அவற்றில் ஒன்று, இது ஒரு வெள்ளை குறு நட்சத்திரமாக (White Dwarf) இருக்கலாம். மற்றொன்று, இது ஒரு காந்தமாக இருக்கலாம். இது மிகவும் சக்திவாய்ந்த காந்தப்புலம் கொண்டதாக நம்பப்படுகிற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம்.

ஆனால், அந்த கண்டுப்பிடிப்பு நடத்தும் துடிப்பின் விதம், வானியலாளர்களை குழப்பமடைய வைக்கிறது என்று ஓ'டோஹெர்தி கூறுகிறார்.

இது ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும், கதிர்வீச்சலை ஆற்றலின் வெடிப்புகளை ஒரு நிமிடம் முழுவதும் அவ்வப்போது வெளியிடுகிறது.

பிரபஞ்சத்தில் ஆற்றலை உருவாக்கும் பொருள்கள் ஒப்பீட்டளவில் பொதுவானவை. ஆனால், ஒரு நிமிடம் இயங்கும் ஒன்று என்பது மிகவும் அசாதாரணமானது.

"ஒவ்வொரு துடிப்புக்கும் (pulse) இடையிலான நேரமும் மிகவும் விசித்திரமாக உள்ளது," ஓ'டோஹெர்தி மேலும் கூறுகிறார்.

இந்த பொருள் நமக்கு ஆபத்தானதாக இருக்குமா?

சமீபத்தில், நெட்ஃபிளிக்சில் வெளியான திரைப்படமான 'டோன்ட் லுக்' என்ற திரைப்படத்துடன், இந்த கண்டுபிடிப்பின் சூழ்நிலைகள் ஒப்பிடப்படலாம் என்று ஓ'டோஹெர்தி ஒப்புக்கொள்கிறார்.

இத்திரைப்படம், ஓர் இளம் வானியலாளர் நமது புவியுடன் மோதவிருந்த ஒரு வால்மீனைக் கண்டுபிடிக்கும் கதைக்களம் கொண்டது.

ஆனால், இந்த ஒப்பீடு அத்துடன் முடிந்துவிடுகிறது என்கிறார் இந்த இளைஞர்.

"இந்தப் பொருள் நம்மைத் தாக்குவதற்கான சாத்தியம் இல்லை, நாம் கவலைப்பட எந்த காரணமும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.

இந்த மர்மமான பொருள் சுமார் 4,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று ஓ'டோஹெர்தி விளக்குகிறார்.

"ஓர் ஒளி ஆண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தூரம். மேலும் பிரபஞ்சத்தில் பயணிக்கக்கூடிய அதிவிரைவான வேகம் கொண்டது ஒளியின் வேகம் ", என்று ஓ'டோஹெர்தி விளக்குகிறார்.

"இந்த பொருள் ஒளியின் வேகத்தில் பயணிக்காது." என்று அவர் கூறுகிறார்.

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா?

"தொடக்கத்தில் , அது வேற்றுகிரகவாசிகளின் செயலாக இருக்கக்கூடுமா என்பது மிகவும் சரியான கேள்வியாக இருந்தது" என்கிறார் ஓ'டோஹெர்தி.

அதே அலைவரிசையில் குறிப்பிட்ட அதே நேரத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் வரும், கதிர்வீச்சு சமிக்ஞை "வேற்றுகிரகவாசிகளிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை நினைவூட்டுவதாக இருக்கிறது" என்று இந்த வானியலாளர் கூறுகிறார்.

உண்மையில், இந்த இளம் ஆஸ்திரேலியர், சர்ச் எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் இன்டலிஜென்ஸ் திட்டம் (SETI - Search for Extra-Terrestrial Intelligence project) என்ற வேற்றுக்கிரகவாசிகளை குறித்து தேடும் பிரபல திட்டம், இந்த வகையான சமிக்ஞையையே தேடியது என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், ஓ'டோஹெர்டி கூறுகையில், பூமிக்கு அப்பாற்பட்ட வாழ்வில் ஆர்வமுள்ளவர்களுக்கு, பால்வெளிப் பொருள் பற்றிய கூடுதல் பகுப்பாய்வு நாம் வேற்றுகிரகவாசிகளைக் காணவில்லை என்பதை "தெளிவுபடுத்தியுள்ளது". என்பது சோகமான தகவல்.

"தொடக்கத்தில், பரந்த அளவிலான அலைவரிசைகளின் சமிக்ஞை கண்டறியப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.

, ஓ'டோஹெர்டியின் கூற்றுப்படி, மர்மமான பொருளிலிருந்து கண்டறியப்பட்டதைப் போன்ற ஒரு சமிக்ஞையை உருவாக்கத் தேவையான ஆற்றல் "ஓர் இயற்கை மூலப்பொருளால் மட்டுமே உருவாக்க முடியும்" என்பது மற்றொரு ஆதாரம்.

"நாங்கள் பெறும் சமிக்ஞையில் எந்த உள்ளடக்கமும் இல்லை.

"எனவே, இந்த சமிக்ஞை வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து வரவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.", அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

வானியலாளர்கள் ஏன் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்?

எதிர்பாராத எதுவும் வானியலாளர்களை உற்சாகப்படுத்தும் என்கிறார் ஓ'டோஹெர்தி.

இந்த பொருள் நிச்சயமாக அத்தகைய ஒன்றில் அடங்கும்.

"உதாரணமாக, இது வழக்கமான நியூட்ரான் நட்சத்திரங்களை விட மிக மெதுவாக சுழல்கிறது," என்று அவர் விளக்குகிறார்.

"அது என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியாது. அதுதான் எதிர்பார்ப்பை தூண்டும் விஷயமும் கூட,"என்று முடிகிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: