You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொதிக்கும் பூமி: 142 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணா வெப்ப நிலை
இந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் தான் இதுவரை உலகம் பதிவு செய்த மிக வெப்பமான மாதம் என அமெரிக்க மத்திய அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை முகமை கூறியுள்ளது.
நிலம் மற்றும் கடல் பரப்பின் ஒருங்கிணைந்த வெப்பநிலை கடந்த 20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்ப நிலையான 15.8 டிகிரி செல்சியஸை விட 0.93 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்ததாக தரவுகள் கூறுகின்றன.
142 ஆண்டுகளாகத் தான் உலகில் வெப்பநிலை விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எனவே தட்ப வெப்பநிலைகளை பதிவு செய்யத் தொடங்கிய காலம் முதல் 2021 ஜூலை தான் வரலாறு காணாத அதிகபட்ச வெப்ப நிலை.
இதற்கு முன்பு 2016 ஜூலைதான் அதிக வெப்பமான மாதமாகப் பதிவானது. அது 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் சமன் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இது பருவநிலை மாற்றத்தின் நீண்ட கால தாக்கம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த விரும்பத்தகாத ஜூலை மாத வெப்பநிலை நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது.
"ஏற்கனவே பருவநிலை மாற்றம் பூமிக்கு ஏற்படுத்தி இருக்கும் சிக்கலை, இன்னும் தீவிரமாக்குகிறது இந்த புதிய அதிகபட்ச வெப்பநிலை"
கடந்த 2016ஆம் ஆண்டு இருந்த வெப்ப நிலையை விட இந்த 2021 ஜூலை மாதத்தில் நிலம் மற்றும் கடல் பரப்பின் வெப்ப நிலை 0.01 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகியுள்ளது.
புவியின் வட அரைகோளத்தின் நில பரப்பின் வெப்பநிலை சராசரியாக பதிவாவதை விட 1.54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக பதிவாகியுள்ளது. இது 2012ஆம் ஆண்டில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஜூலை தான் ஆசிய கண்டத்தின் மிக வெப்பமான மாதமாகவும், ஐரோப்பிய கண்டத்துக்கு இரண்டாவது அதிகபட்ச வெப்பம் பதிவான மாதமாகவும் இருக்கிறது. ஜூலை 2018 தான் ஐரோப்பிய கண்டத்தில் அதிகபட்ச வெப்பமாக பதிவாகியுள்ளது என்பது நினைகூரத்தக்கது.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு வெளியிட்ட செய்தி அறிக்கையில், கடந்த 2021 ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வானிலை மாறுபாடுகளை குறிப்பிடும் வரைபடம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அதில் இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட புயல்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பருவநிலை மாற்றம் பூமியின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்துவதாக சமீபத்தில் தான் ஐ.நா அமைப்பின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சில மாற்றங்களை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது அல்லது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மனித இனத்துக்கான அபாய சங்கு" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டரஸ் கூறினார்
"நாம் இப்போது ஒருங்கிணைந்து செயல்பட்டால், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் அழிவை தவிர்க்கலாம். நாம் தாமதப்படுத்தவோ, குறைகூறிக் கொண்டிருப்பதற்கோ நேரமில்லை என்பதை இன்றைய அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது" என கூறினார்.
கடந்த 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் (1970-களிலிருந்து) பூமியின் நிலப் பரப்பு வெப்பநிலை அதிவேகமாக உயர்ந்திருக்கிறது என அவ்வறிக்கையை எழுதியவர்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
- உலகத்தால் கைவிடப்படும் ஆப்கானிஸ்தான் - போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை
- நயன்தாராவின் நெற்றிக்கண் படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
- முக்கிய சீனத் துறைமுகத்தில் கோவிட்-19 தொற்று கண்டுபிடிப்பு: உலக வணிகத்துக்கு அச்சுறுத்தல்
- இது செல்போனா? கீ செயினா? மடக்கும் வசதி ஸ்மார்ட்ஃபோன்களோடு களமிறங்கும் சாம்சங்
- இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல முடியாது: அரசு அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்