You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2020 `ஒரு சுட்டெரித்த ஆண்டு` - வெப்பநிலை அதிகரிப்பும், விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும்
- எழுதியவர், மேட் மெக்ராத்
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்
சர்வதேச வானிலை முகமைகள் 2020ஆம் ஆண்டு ஒரு சுட்டெரித்த ஆண்டாக இருந்தது என்று ஒப்புக் கொண்டன. ஆனால் மிக வெப்பமான இருந்த ஆண்டுகளின் பட்டியலில் 2020 எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதில் அவை வேறுபடுகின்றன.
நாசாவின் தரவுகள், 2020ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டைப் போல ஒரு மோசமான கொளுத்தும் ஆண்டாக அமைந்ததாகக் கூறுகிறது.
வெப்பநிலை அளவில் இந்த முகமைகள் வேறுபட்டாலும் கடந்த 12 மாதங்கள் ஒரு வெப்பமான தசாப்தத்தின் பகுதி என ஒப்புக் கொள்கின்றன.
மேலும் ஐந்து முக்கிய முகமைகள் 2020 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளதாக கூறுகின்றன.
நாசாவின் தரவு 2020ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டைப் போல வெப்பமானது என்கிறது. அமெரிக்க நேஷனல் ஓஷனிக் அண்ட் அட்மாஸ்பெரிக் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் பிரிட்டனின் வானிலை அலுவலகம் 2020ஆம் ஆண்டு பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கின்றன.
ஜப்பான் வானிலை முகமை 2020ஆம் ஆண்டு மூன்றாவது வெப்பமான ஆண்டு என்று தெரிவிக்கிறது.
ஆனால் இதெல்லாம் கணக்கீட்டுப் பிழையால் நிகழ்கிறது என்கிறது இந்த தரவுகளை ஒன்றிணைத்த உலக வானிலை நிறுவனம்.
தற்போது சர்வதேச வெப்பநிலை 1850-1900 காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையைவிட 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. 1850-1900 காலகட்டம் "தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டம்" என்று அழைக்கப்படுகிறது.
மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவின் காரணமாக வெப்பநிலை உயர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக உலகம் முழுவதும் பசுமைக்குடில் வாயுவின் வெளியேற்றம் 7 சதவீதம் அளவிற்கு குறைந்தது. இருப்பினும் அது போதாது என்கிறார்கள் நிபுணர்கள்.
"பெருந்தொற்று காலத்திலும் நாம் பருவநிலை மாற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக அதை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருந்தோம்." என்கிறார் நியூயார்க்கில் உள்ள நாசா காட்டார்ட் இன்ஸ்டியூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடிஸின் இயக்குநர் காவின் ஷிமிட்.
இயற்கையாக வெப்பநிலை குறைக்கப்படும் நடவடிக்கைகளைக் காட்டிலும் மனிதர்களின் செயல்பாடுகள் அதி வேகமாக இருப்பதால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
சர்வதேச வெப்பநிலை 1.2 டிகிரி செல்ஷியஸ் அளவில் உயர்ந்திருப்பது ஒரு கவலை தரும் விஷயமாகக் கருதப்படுகிறது.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தப்படி உலக நாடுகள் இந்த நூற்றாண்டில் சர்வதேச வெப்பநிலை அதிகரிப்பை 1.5டிகிரி செல்ஷியஸிற்குள் கட்டுப்படுத்த உறுதியளித்துள்ளன.
ஆனால் 2020ஆம் ஆண்டில் வெப்பநிலை நிர்ணயிக்கப்பட்ட எல்லையைக் கடந்துவிட்டது.
அமெரிக்காவின் தேசிய முகமையான நேஷனல் ஓஷனிக் அண்ட் அட்மாஸ்பெரிக் அட்மினிஸ்ட்ரேஷன் தகவல்படி, தரைப் பகுதியில் சர்வதேச வெப்பநிலையின் சராசரி 1.59 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்து இருந்தது. இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியைவிட அதிகம். நேஷனல் ஓஷனிக் அண்ட் அட்மாஸ்பெரிக் தரவுகள் இது 141 வருடங்களில் இல்லாத உயர்வு என்கிறது. இது 2016ஆம் ஆண்டைக்காட்டிலும் 0.05டிகிரி செல்ஷியஸ் அதிகமாகும்.
"எனவே 2020ஆம் ஆண்டு சர்வதேச பருவநிலை தரவுகளில் ஒரு முக்கிய ஆண்டு" என்கிறார் பிரிட்டனின் வானிலை அலுவலகத்தின் பருவநிலை கண்காணிப்புக் குழுவின் மூத்த விஞ்ஞானி காலின் மோரிஸ்.
"அனைத்து தகவல்களும் சர்வதேச சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதாக காட்டுகின்றன. அதுவும் சமீபத்திய தகவல் அதில் ஒருபடி முன்னேறியுள்ளது. இது பாரிஸ் ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மிக நெருக்கமாக உள்ளது," என்கிறார் அவர்.
மேலும் 2020ஆம் ஆண்டு வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் காற்று மாசு அல்லது அது இல்லாமை.
ஆம், பொது முடக்கத்தால் விமானங்களும், கார்களும் இயங்காமல் இருந்த நிலையில் காற்று மாசு குறைந்து காணப்பட்டது.
எனவே அழுக்கான காற்று இல்லாத காரணத்தால் சூரியனின் வெளிச்சம் நேரடியாக பூமியின் மீது பட்டு வெப்பநிலை அதிகமாக இருந்தது.
2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெப்பநிலை குறித்த சில முக்கிய தகவல்கள்
கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 14.9 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இது 1850 -1900ஆம் ஆண்டுகளின் சராசரியைக் காட்டிலும் 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகும்.
2011 - 2020 ஆம் ஆண்டுதான் வெப்பம் மிகுந்த தசாப்தமாக உள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு பிறகு மிக வெப்பமான அறு ஆண்டுகள் அமைந்தன.
அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளான 2020, 2019 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான வித்தியாசம் மிகவும் குறைவே.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: