செயலற்ற கணக்குகளை முடக்கும் முடிவை நிறுத்தியது ட்விட்டர் - காரணம் என்ன?

ட்விட்டர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆறு மாதமாக பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்த முடிவை நிறுத்தி வைப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்த கவலைகளின் காரணமாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குவது காலத்தின் கட்டாயம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தங்களது நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இதுதொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் ட்விட்டர் நேற்று (புதன்கிழமை) விளக்கம் அளித்துள்ளது.

"ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜிடிபிஆர்) உள்ளிட்ட உள்ளூர் சட்டத் திட்டங்களுக்கு உட்படும் வகையிலேயே இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன்னர் பயனர்களுடன் கலந்துரையாடுவோம்" என்று ட்விட்டர் நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகளின் உரிமையாளர்களை ட்விட்டர் நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளும் பணியை கடந்த திங்கட்கிழமை தொடங்கியிருந்தது. அப்போது, கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக ட்விட்டரை பயன்படுத்தாமலும், எங்களது சமீபத்திய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவிக்காமலும் இருக்கும் உங்களது கணக்கு நீக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

ட்விட்டரின் திட்டம் என்ன?

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் தாங்கள் உயிரிழந்த பிறகு, தங்களது கணக்கை பயன்படுத்தும் உரிமையை மற்றவர்களுக்கு அளிக்கும் தெரிவை வழங்குகிறது.

அது போன்றதொரு தெரிவை ட்விட்டரில் உருவாக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற மாற்றங்களுக்கு பயனர்கள் ஒப்புக்கொள்ளும் வகையிலேயே தங்களது புதிய கொள்கை மாற்றங்களை செய்துள்ளதாக ட்விட்டர் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: