You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றம்: நேசமணி கீச்சுகளும், பசியால் கொத்து கொத்தாக சாகும் பறவைகளும் - பெருஞ்சோக நிகழ்வு
நேசமணி குறித்த கீச்சுகளில் (ட்வீட்டுகளில்), கொத்து கொத்தாக சாகும் பறவைகளின் கீச்சொலிகள் பலரின் செவிகளை அடையாமல் போகலாம்.
ஆம். தமிழ்ச் சமூகம் நேசமணி குறித்த கீச்சுகளை ட்விட்டரில் சர்வதேச அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கும் நாளில் அமெரிக்க ஆய்வாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.
அலாஸ்காவில் கொத்து கொத்தாக பஃபின் பறவைகள் இறப்பதற்கு பருவநிலை மாற்றம் காரணம் என்கிறது ஓர் ஆய்வு.
பருவநிலையும் பசியும்
கடலின் வெப்பநிலை உயர்ந்ததால் இந்த பஃபின் பறவைகள் உண்ணும் மீன்கள் வடக்கு நோக்கி இடம் பெயர்ந்திருக்கின்றன. இதன் காரணமாக இந்த பஃபின் பறவைகள் பசியில் வாடி இறந்திருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
2016ம் ஆண்டு புனித பவுல் தீவில் உள்ள கடற்கரையில் பஃபின் பறவைகள் செத்து கிடந்தன.
அமெரிக்க ஆய்வாளர் ஒருவர், "கடந்த சில மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 9,000 பஃபின் மற்றும் சில வகை கடல் பறவைகள் இறந்துள்ளன" என்று தெரிவிக்கிறார்.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் டிமோதி ஜோன்ஸ், "இப்படி கொத்து கொத்தாக இறப்பது அதிகளவிலும், அடிக்கடியும் நடக்கிறது. இதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது" என்று ப்ளோஸ் ஒன் சஞ்சிகையில் குறிப்பிடுகிறார்.
கண்டங்கள் எங்கும்
உயரும் வெப்பமானது பறவைகள், வெளவால் மற்றும் பிற காட்டுயிர்கள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
ஆர்க்டிக்கில் கூடு கட்டும் பறவைகள் வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்தன. அதன் கூடுகள் பிற விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கும் பருவநிலை மாற்றம்தான் காரணம் என சுட்டிக்காட்டியிருக்கிறது மற்றோர் ஆய்வு.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா வடக்கு பகுதியில் பதிவான அதிக வெப்பம் காரணமாக, மூன்றில் ஒரு பங்கு ஸ்பெக்டாகில்ட் ஃப்ளியிங் பாக்ஸஸ் பறவைகள் இல்லாமல் போயின என்று விவரிக்கிறது மற்றொரு ஆய்வு.
அண்மையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுதான் பஃபின் பறவைகளின் மரணம் குறித்து எச்சரிக்கிறது.
அறுபடும் உணவுச் சங்கிலி
மீனும், முதுகெலும்பற்ற கடல் உயிரிகளும்தான் இந்த பஃபின் பறவைகளின் உணவு.
கடல் வெப்பநிலை உயர்வு இந்த உணவு சங்கிலியில் தாக்கம் செலுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பஃபின் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்