You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள்
நாம் உண்ணும் உணவிற்கும் நைஜீரியாவில் வெட்டப்படும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். அதற்கான எண்ணற்ற ஆதரங்களையும் அடுக்குகிறது.
பார்பிக்யூ உணவும், நைஜீரிய காடும்
காடுகள் அதிவேகமாக அழிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நைஜீரியா இருக்கிறது. பார்பிக்யூ உணவுகளால்தான் இந்த காடழிப்பு நிகழ்கிறது. குறிப்பாக பிரிட்டனில் நுகரப்படும் பார்பிக்யூ உணவுகளால் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
பார்பிக்யூ உணவு சமைக்க அதிகளவிலான கரி தேவை. இந்த கரி தேவைக்காகதான் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதை தட்டையாக புரிந்து கொண்டால் சாதாரணமாக தெரியலாம். ஆனால், உண்மை நிலவரம் அசாதரணமானதாக இருக்கிறது.
கடந்த ஆண்டு பிரிட்டன் மட்டும் 90,000 டன் கரியை இறக்குமதி செய்து இருக்கிறது.
அதெல்லாம் சரி, இதை எப்படி நைஜீரியா மரங்களின் கரி என்று சொல்கிறீர்கள்? என்ற சந்தேகத்திற்கான விடையை சொல்கிறது பிபிசி மேற்கொண்ட ஆய்வு.
ஆய்வு சொல்லும் உண்மை
பிபிசி பல சூப்பர் மார்க்கெட்டுகளில் கரி பைகளை (Charcoal Bags) வாங்கியது. அதனை ஜெர்மனியில் உள்ள ஓர் ஆய்வகத்திற்கு அனுப்பியது.
மரங்கள் தொடர்பான ஆய்வகமான துணின் நிறுவனத்தில் ஆய்வாளர் வோல்கர் ஹாக் இந்த ஆய்வினை மேற்கொண்டார்.
அவர், "நாங்கள் ஆய்வு செய்த மரத்துண்டுகள் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல காடுகளை சேர்ந்தவை" என்கிறார்.
அழிந்து வரும் பல உயிரினங்களுக்கு புகலிடமாக வெப்ப மண்டல காடுகள் திகழ்கின்றன. பருவநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ள வேண்டுமானால் இந்த வெப்ப மண்டல காடுகளை காக்க வேண்டும்.
சந்தையில் விற்பனையில் இருக்கும் கரி பைகளில், அவை எந்த பகுதியிலிருந்து வெட்டப்பட்ட மரங்கள் என்ற குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், பெரும்பாலான பைகள் எஃப்.எஸ்.சி லோகோவை தாங்கி நிற்கின்றன.
எஃப்.எஸ்.சி என்பது ஃபாரஸ்ட் ஸ்டிவெர்ட் கவுன்சில் என்பதை குறிக்கும். இந்த நிறுவனமானது உலகளவில் மரசாமான்களுக்கு சான்றிதழ் தரும் மிகப் பெரிய நிறுவனம்.
அந்த நிறுவனத்தின் தலைவர் கிம் சார்ஸ்டென்சென், "பிரிட்டன் சந்தைக்கு வெப்ப மண்டல காடுகளின் மரக்கரி வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த மர கரிகள் பைகளில் நிச்சயம் எங்கள் நிறுவனத்தின் இலச்சினை இருக்காது. ஆனால், அதே நேரம் நாங்கள் சான்றிதழ் அளித்தவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது" என்கிறார்.
அஞ்சதக்க வகையில்
கடந்த ஆண்டு நைஜீரியாவும், பராகுவேவும் பத்தாயிரம் டன்கள் அளவிற்கு மரக்கரியை ஏற்றுமதி செய்துள்ளன.
நைஜீரியன் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஸ்டீஃபன், "அஞ்சதக்க வகையில் நைஜீரியா காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன." என்கிறார்.
மேற்கு நைஜீரியாவில் இருக்கும் க்வாரா மாகாணம்தான் கரி உற்பத்திக்கான முக்கியமான மையம்.
ஐ,நா அமைப்பு உலகளவில் இந்த கரி தேவை வரும் தசாப்தங்களில் அதிக அளவில் அதிகரிக்கும் என்று கணிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்