You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி: விடை சொல்லும் அறிவியல் ஆய்வாளர்கள்
மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் (Global Council on Brain Health) என்னும் அமைப்பின் அறிக்கை பரிந்துரைக்கிறது.
எவ்வளவு இளம் வயதில் இந்த செயல்களில் ஒரு நபர் ஈடுபடத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு முதுமையில் அவர்களின் மூளை நன்றாக செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள, தாமதம் என்று எதுவுமில்லை என்று ஏஜ் யூ.கே (Age UK) அமைப்பு கூறியுள்ளது.
சர்வேதேச அறிவியலாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசாங்கங்களின் கொள்கை முடிவு வல்லுநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அந்த அமைப்பு, மூளைத் திறனைத் தூண்டுவதற்கும், அறிவாற்றல் குறைவதைத் தடுக்கவும் ஆகச் சிறந்த வழிமுறைகளைப் பற்றி அந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
மூளைத் திறனை அதிகரிக்க, புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை இணையத்தளத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமானது என்று பலரும் நம்பினாலும், அவற்றால் உண்டாகும் பலன்கள் மிகவும் வலுவற்றவையாக உள்ளன அல்லது பலன்களே இல்லாமலும் உள்ளன.
"அந்த மூளை விளையாட்டுகளை மனிதர்கள் விளையாடினால், அந்த விளையாட்டில் அவர்கள் முன்னேறலாம். ஆனால் அந்த விளையாட்டில் உண்டாகும் முன்னேற்றத்தால் அவர்களின் தினசரி அறிவுசார் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான தீர்க்கமான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை, " என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உதாரணமாக, சுடோக்கு விளையாடுவதால் உங்களின் நிதி மேலாண்மைத் திறன் அதிகரித்துள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னவெல்லாம் செய்யலாம்?
அந்த அறிக்கை நாம் சிந்தனை செய்யும் முறைகளை கேள்விக்கு உள்ளாக்கும் புதிய செயல்களைச் செய்யப் பரிந்துரைப்பதுடன் சமூகத்தோடு இணைந்து செயல்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றச் சொல்கிறது.
உதாரணங்களில் சில
- டாய்-செய் பயிற்சி செய்வது
- உங்கள் முந்தைய தலைமுறைகள் பற்றி ஆய்வு செய்வது
- புகைப்பட பயிற்சி
- சமையல் செய்வது
- தோட்டக் கலை
- புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது
- படைப்புத்திறனுடன் எழுதுவது
- கலைத் திட்டங்களில் ஈடுபதுவது
- தன்னார்வலர் ஆவது
குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் அமைப்பை நிறுவ உதவிய ஏஜ் யூ.கே-வின், தலைமை விஞ்ஞானி, ஜேம்ஸ் குட்வின், மூளைத்திறன் குறைவது தடுக்கக்கூடிய ஒன்றே என்று கூறுகிறார்.
"உங்களுக்குத் புதிதாகவும், உங்களின் கவனக் குவிப்பையும் கோரும், மூளையின் நலனுக்குப் பலனளிக்கக்கூடிய, ஏராளமான செயல்களை இன்றே நாம் தொடங்கலாம்," என்று கூறும் அவர் "நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்றட வாழ்வில் செய்யக்கூடிய, பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது, தோட்டத்தைப் பராமரிப்பது, சீட்டு விளையாடுவது உள்ளிட்டவையாகவும் அந்தச் செயல்கள் இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
"புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வ கால தாமதம் என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி, உங்களின் மூளையின் நலனைப் பாதுகாப்பதற்கு உங்கள் கடைசி காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதே," என்கிறார் ஜேம்ஸ் குட்வின்.
(ஆகஸ்டு 2017இல் பிபிசி தமிழில் வெளியான கட்டுரை மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது.)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்