You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எச்.ஐ.வி தொற்றைப் 10 மாதங்கள் தடுத்த நோய் எதிர்ப்பொருள்
பரிசோதனை முயற்சியாக அளிக்கப்பட்ட சிகிச்சை ஒரு நபரின் எச்.ஐ.வி தொற்றை பத்து மாதங்கள் கட்டுக்குள் வைத்திருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இயற்கையாகச் சுரக்கும், "விரிவாக நோய்க்களைத் தடுக்கும் எதிர்ப்பொருட்களை," ஊசி மூலம் செலுத்தும் சிறிய பரிசோதனை முயற்சிக்கு உள்ளான 18 நபர்களில் அவரும் ஒருவர்.
அந்த நோய் எதிர்ப்பொருட்கள் , எச்.ஐ.வி கிருமியானது, பரிசோதனையில் பங்கேற்ற பிற நோயாளிகளின் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துவதை சுமார் இரண்டு வார காலம் தாமதப்படுத்தின.
இந்த ஆய்வின் முடிவுகள் பிரான்ஸ் தலைநகர் பாரியில் நடைபெறவுள்ள ஒன்பதாவது சர்வதேச எய்ட்ஸ் கழகத்தின் மாநாட்டில் ( International Aids Society Conference) சமர்பிக்கப்படவுள்ளன.
எச்.ஐ.வி வைரஸ் கிருமியைச் செயலிழக்கச் செய்யும் எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்வதில் மனித உடல் திறனற்றதாக இருந்தது.
எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளான ஐவரில் ஒருவராலேயே அந்த நோய் எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்தது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகள் ஆனதுடன், அவர்களின் உடலில் கட்டுப்படுத்தப்படாத வைரஸ்கள் அதிக அளவில் இருக்கவேண்டியிருந்தது.
ஆனால் எச்.ஐ.வி தொற்றைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் உதவும் என்று மருத்துவர்கள் நம்பக்கூடிய, 200-க்கும் மேற்பட்ட விரிவாக நோய்க்களைத் தடுக்கும் எதிர்ப்பொருட்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நோய் எதிர்ப்பொருட்களை உடலில் செலுத்துதல்
தாய்லாந்தில், நிலையான மருத்துவ சிகிச்சை மூலம் தங்கள் உடலின் எச்.ஐ.வி தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நபர்களைக்கொண்டு, அமெரிக்க ராணுவத்தின் எச்.ஐ.வி ஆய்வுத் திட்டத்தின் (US Military HIV Research Program (MHRP)) தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் சிலருக்கு சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை. சிலரின் ரத்த ஓட்டத்தில் VRC01 என்று பெயரிடப்பட்ட நோய் எதிர்ப்பொருள் செலுத்தப்பட்டது.
சிகிச்சை பெறாதவர்கள் உடலில் எச்.ஐ.வி வைரஸ் தவிர்க்க முடியாமல் திரும்பவும் தோன்றியது. சராசரியாக 14 நாட்களுக்குப் பின் அவர்களுக்கு மீண்டும் சிகிச்சை தொடரப்பட்டது.
ஆனால் அந்த நோய் எதிர்ப்பொருளை உடலில் செலுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் சிகிச்சையைத் தொடங்கும் தேவை 26 நாட்களுக்குப் பிறகே ஏற்பட்டது.
அந்த ஆய்வில் பங்கேற்ற MHRP ஆய்வாளரான மருத்துவர் ஜிண்டானட் அனன்வோனாரிக், அதில் ஒரு விதிவிலக்கான சம்பவமும் இருந்தாதாகக் கூறினார்.
"அந்த நோய் எதிர்ப்பொருள் செலுத்தப்பட்ட நோயாளிகளில் ஒருவர் 10 மாதம் எச்.ஐ.வி-க்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தார். அவரின் உடலில் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டு மிகவும் குறைந்த அளவே இருந்தது," என்று அவர் பிபிசி நியூஸ் இணையதளத்திடம் கூறினார்.
அந்த நபர் மூன்று வாரத்திற்கு ஒரு முறை என ஆறு மாத காலம் அந்த நோய் எதிர்ப்பொருளை அவரின் உடலில் செலுத்தப்பெற்றார்.
இந்தத் துறையின் ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையிலேயே இருக்கின்றன. ஆனால் அதன் முடிவுகள் நோய் எதிர்ப்பொருட்களை அடிப்படையாகக்கொண்ட சிகிச்சைகள் மூலம் எச்.ஐ.வி தொற்றைக் குணப்படுத்தும் சாத்தியத்தை வெளிப்படுத்துகின்றன.
"நோய் எதிர்ப்பொருட்களைக்கொண்டு சிகிச்சை அளிப்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், வருங்காலத்தில், அவற்றை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே செலுத்தக்கூடிய சூழ்நிலை வரலாம்," என்று அவர் கூறுகிறார்.
அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி
விலங்குகளைக்கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகள் நோய் எதிர்ப்பொருட்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை, வழக்கமாக வழங்கப்படும் சிகிச்சைகளை விட, தாக்கம் நிறைந்ததாக இருப்பதையும், அக்கிருமிகளைத் தாக்குவதற்கு உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைப் பழக்கப்படுத்துவதையும் வெளிப்படுத்தின.
குரங்குகளின் உடலில் அந்த நோய் எதிர்ப்பொருள் செலுத்தப்பட்டபோது, அவற்றின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பால் அறிந்துகொள்ளக்கூடிய ஒரு "நோய் எதிர்ப்புக் கட்டமைப்பை" உருவாக்கின.
"அந்த நோய் எதிர்ப்பொருட்கள் செலுத்தப்பட்டது, 'டி' அணுக்கள் (T-cells) உள்ளிட்ட நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ளனவற்றை எச்.ஐ.வி தொற்றுக்கு இன்னும் சிறப்பாக எதிர்வினையாற்றத் தூண்டியிருக்கலாம். குரங்குகளைக்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அந்தக் குரங்குகளின் உடல்கள் அவற்றை மீண்டும் சுரந்தன," என்று பிபிசியிடம் மருத்துவர் அனன்வோனாரிக் கூறினார்.
இந்த ஆய்வின் அடுத்தகட்டமாக, பரிசோதனையின்போது சேகரிக்கப்பட்ட அனைத்து ரத்த மாதிரிகளையும் சோதித்து, அந்த சிகிச்சை நோய் எதிர்ப்பு அமைப்பையும், அந்த வைரஸ் கிருமிகளையும் எவ்வாறு பாதித்தன என்பதை அறிவதாகும்.
எச்.ஐ.வி வைரஸ் தொடர்ந்து உயிரியல் மாற்றங்களுக்கு உள்ளாவதால், வருங்காலத்தில் வழங்கப்படும் சிகிச்சைகள் விரிவாக நோய்க்களைத் தடுக்கும் எதிர்பொருட்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஆனால் நோய் எதிர்ப்பொருட்கள் சாதாரண வேதிப்பொருட்கள் அல்ல. அவை நோய் எதிர்ப்பு உயிரியலில் சிக்கலான கூறுகளைக் கொண்டிருப்பதால் அவற்றை உற்பத்தி செய்வது மிகவும் செலவு பிடிக்கும்.
"உயிரியல் கூறுகளைக் கொண்டைவையாகவும், சிறிய மூலக்கூறுகளை உருவாக்குவதைவிட சிக்கல் நிறைந்ததாகவும் இருப்பதால், நோய் எதிர்ப்பொருட்களைத் தயாரிக்க இயல்பாகவே அதிகம் செலவாகும்," என்று அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலர்ஜி அண்ட் இன்ஃபெக்ட்டிஷியஸ் டிசீசஸின் ( US National Institute of Allergy and Infectious Diseases) இயக்குனர் மருத்துவர் ஆண்டனி ஃபாசி கூறுகிறார்.
"ஆனால் சிறப்பாக வேலை செய்யக்கூடிய நோய் எதிர்ப்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டால், அவற்றை தயாரித்து, எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதையும் நான் உத்திரவாதமாகக் கூறுவேன்," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்