You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா?
கடல்நீரைக் குடிநீராக்கும் கிராபீன் வடிகட்டி. செலவும் குறைவு; சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கிராபீன் வடிகட்டி கோடிக்கணக்கானவர்களின் குடிநீர் தேவையை, குறைந்த செலவில், சுற்றுச்சூழல் பாதிப்பின்றி தீர்க்கவல்லது என அதை உருவாக்கிய ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் உலகில் கோடிக்கணக்கானவர்களின் வாழ்வில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தவல்லது.
கடல்நீரிலிருந்து உப்பை பிரித்தெடுக்கக்கூடிய வடிகட்டி ஒன்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உலகின் மிக மெல்லிய பொருளாக அறியப்படும் கிராபீன் இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
எஃகைவிட மூன்று மடங்கு உறுதியானது; அதேசமயம் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மை உடையது; ஒரே ஒரு அணுவின் அளவு தடிமன் அளவுக்கு மெல்லிய தகடாக மாற்றவல்லது. அதனாலேயே கிராபீன் அதிசய பொருள் என்று வர்ணிக்கப்படுகிறது.
மேன்சஸ்டரில் கிராபீன் ஆக்ஸைடை பயன்படுத்தி நீர் வடிகட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது நீரில் கரைந்திருக்கும் உப்பை அகற்றவல்லது. இதன் மூலம் கடல்நீரை குடிநீராக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
"உலக அளவில் பல லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீரை கொடுப்பதை இந்த தொழில்நுட்பம் சாத்தியமாக்கும். இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் இதை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியுமென்று நம்புகிறோம்", என்றார் இந்த ஆய்வை மேற்கொண்ட மேன்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஹுல் நாயர்.
மற்ற வடிகட்டிகளைப்போலவே கிராபீன் தாளிலும் தண்ணீரை வடிகட்டி அனுப்பும் அளவுக்கு சின்னஞ்சிறு துளைகள் உள்ளன.
முன்பு இந்த கிராபீன் தாள் நாள்பட நாள்பட பலவீனமடைந்து அதிலிருக்கும் துளைகள் பெரிதாகும் என்பதால் அதன் வடிகட்டும் திறன் பாதிக்கப்பட்டது.
தற்போது மேன்செஸ்டர் ஆய்வாளர்கள் இந்த துளைகள் விரிவடைவதை தடுக்கும் வேதிப்பூச்சை கண்டுபிடித்து இந்த தாளில் பூசியிருப்பதால் இதன் துளைகள் விரிவடைவது தடுக்கப்பட்டு, உப்புநீர் நல்ல குடிநீராக வடிகட்டப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு 120 கோடி பேருக்கு நீரிருக்காது: ஐநா
2025 ஆம் ஆண்டு வாக்கில் உலகில் சுமார் 120 கோடி மக்கள் சுத்தமான குடிநீரின்றி தவிப்பார்கள் என்று ஐநா தெரிவித்துள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலையில் உலகில் பத்துசதவீதமானவர்களுக்கு சுத்தமான தண்ணீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் வாட்டர் எயிட் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ரெமி காவ்ப்.
குடிநீர் என்பது மிகப்பெரிய பிரச்சனை என்பதை வலியுறுத்தும் அவர், "தண்ணீர் இல்லாமை உங்கள் ஒவ்வொரு செயலையும் பாதிக்கும். சுகாதாரம், குழந்தைகளின் கல்வி என பல விஷயங்கள் தண்ணீர் என்கிற அடிப்படை மனித உரிமையை பொறுத்தே அமையும். அதனாலேயே இதில் இவ்வளவு தூரம் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்", என்கிறார்.
லண்டனில் தற்போது செயற்பட்டுவரும் கடல்நீர் சுத்திகரிப்பு மையத்தை உருவாக்க 340 மில்லியன் அமெரிக்க டாலர் செலவானது. மேலும் அதை இயக்க ஏராளமான மின்சாரம் தேவை. இதற்கு மாற்றாக கிராபீன் வடிகட்டிகள் செலவு குறைந்த சுற்றுச்சூழலை பாதிக்காதவைகளாக அமையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சோதனைச்சாலையில் வெற்றிகரமாக செயற்படும் கிராபீன் வடிகட்டி சோதனைச்சாலைக்கு வெளியிலும் அதே அளவு சிறப்பாக செயற்படுமா என்பது தான் விடை காண வேண்டிய கேள்வி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்