ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் மகளிர் ஹாக்கி அணி

ஆசியாவிலேயே சிறந்த மகளிர் ஹாக்கி அணியாக இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம், 2004, 2017 என இரு முறை ஆசிய கோப்பை, 2016-ல் ஆசிய சாம்பியன் கோப்பை ஆகியவற்றைத் தன்வசப்படுத்தியது இவ்வணி. மேலும் 2002 காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வென்றது. தற்சமயம் டோக்யோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் இவ்வணியினர் யார் யார்? அவர்கள் எந்த நிலையில் விளையாடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்

1980 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது தான் முதன்முதலில் மகளிர் ஹாக்கி போட்டி, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது

எனினும் 36 ஆண்டுகள் கழித்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் தான் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதன்முதலில் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. அப்போது குழு நிலையில் தகுதி இழந்தது. இப்போது 2020 டோக்யோ ஒலிம்பிக்கில் சிறப்பான நிலையில் உள்ளது. இந்த வீராங்கனைகள் யார்? தொடர்ந்து படிக்கவும்

கோல் கீப்பர்

சவிதா

கோல் கீப்பர்
சவிதா

30 வயதான சவிதா இந்திய அணியின் கோல் கீப்பர். அவர் தனது 18 ஆவது வயதில் இந்திய அணியில் இடம் பெற்றார். நூறு போட்டிகளுக்கு மேல் பங்கு பெற்றுள்ள சவிதா, அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களில் ஒருவராவார்.

தனது அணியில் உள்ள பலரைப் போல, இவரும் ஹரியாணா(ஹிசார்) மாநிலத்தைச் சேர்ந்தவர். 2018 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது பெற்றவர். தொடக்க காலத்தில் விளையாட்டில் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்த இவரை இவரது தாத்தா தான் ஊக்குவித்து வந்துள்ளார்.

2017-ல், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உலக மகளிர்ப் போட்டியின் இரண்டாவது சுற்றில் போட்டித்தொடரின் சிறந்த கோல்கீப்பர் என்ற விருதைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில் ஆசியப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வாங்கியதைத் தனது முக்கிய தருணமாக இவர் கருதுகிறார்.

"ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரியோவில் நாங்கள் கற்ற பாடங்களைப் பயன்படுத்தி அடுத்த அடி எடுத்து வைக்கிறோம். இந்திய மகளிர் ஹாக்கியில் ஒரு வரலாறு படைப்போம்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சவிதா

டிஃபென்டர்

தீப் கிரேஸ் இக்கா

டிஃபென்டர்
தீப் கிரேஸ் இக்கா

27 வயதான தீப் கிரேஸ் இக்கா, ஒடிஷாவில் பிறந்தவர். அணியின் துணைத் தலைவியான இவர், டோக்யோவில் விளையாடுவது இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாகும். இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் முதல் ஒடிஷா பெண் வீராங்கனை இவர்.

2013-ல் நடந்த மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டு இவர் சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார். இந்தியாவிற்காக 200-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

கோர் மற்றும் ரன்னிங் இவரது பயிற்சியின் சிறப்பம்சங்களாகும். "என் மனதுக்கு நெருக்கமான இந்த ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் முழு மூச்சுடன் திறமையை வெளிப்படுத்தித் தங்கப்பதக்கத்தை மீட்டெடுக்க முயல்வேன்"

நிக்கி பிரதான்

டிஃபென்டர்
நிக்கி பிரதான்

ஜார்க்கண்டில் பிறந்த 27 வயதான நிக்கி பிரதான், 2016 ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கிக்கு அறிமுகமானார். அதிலிருந்து தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார். ஜார்க்கண்டைச் சேர்ந்த பல ஆண் ஹாக்கி ஆட்டக்காரர்கள் ஒலிம்பிக்கில் விளையாடியிருந்தாலும், அந்த மாநிலத்திலிருந்து(குந்தி மாவட்டம்) ஒலிம்பிக்கிற்குச் சென்ற முதல் பெண் இவர் தான். 2016 ரியோ ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்றிருக்கிறார். காவல் துறையைச் சேர்ந்தவரின் மகளாகப் பிறந்த இவர், தனது கிராமத்திலேயே ஹாக்கி விளையாடத் தொடங்கி, இப்போது இந்தியாவிற்காக 100-க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். "ஒலிம்பிக்ஸ் என்பது எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் முக்கியமான தருணம். அதில் மீண்டும் பங்கு பெறுவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். களத்தில் இறங்கி ஒவ்வொரு ஆட்டத்திலும் என் நூறு சதவிகித முயற்சிய வழங்க நான் காத்திருக்கிறேன்" என்கிறார் அவர்.

குர்ஜித் கௌர்

டிஃபென்டர்
குர்ஜித் கௌர்

இந்த டோக்யோ ஒலிம்பிக்ஸ் குர்ஜித் கௌர்-க்கு முதல் ஒலிம்பிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு டெஃபென்டராகவும் டிராக் ஃப்லிக்கராகவும் இரு பொறுப்புகளில் உள்ளார். பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள பஞ்சாபின் ஒரு கிராமத்தில் பிறந்த இவர், பள்ளிக்காலத்தில் ஹாக்கிக்கு அறிமுகமாகி, மெதுவாக அதை விரும்பத் தொடங்கிவிட்டார்.

தொடக்கத்தில் டிராக் ஃப்லிக்கிங்க் பற்றி அதிக பரிச்சயம் இல்லாத அவர், தொடர்ந்த பயிற்சியினாலும் சிறந்த வழிகாட்டலாலும் இப்போது அவர், சிறந்த பெண் டிராக் ஃப்லிக்கராக விளங்குகிறார். 2019-ல் ஜப்பானில் நடந்த சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் மகளிர் தொடர்ப் போட்டியின் இறுதியாட்டத்தில் அதிக கோல் போட்டு தங்கப்பதக்கம் வெல்ல உதவினார்.

ஒலிம்பிக்கில் மகளிர் அணி பதக்கம் வென்றால், அது அனைத்துப் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஒரு ஊக்கமாகவும் வரலாற்று நிகழ்வாகவும் இருக்கும் என்று பி பி சி-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

உதிதா

டிஃபென்டர்
உதிதா

இந்தியாவுக்காக 32 போட்டிகளில் விளையாடியிருக்கிறார், ஹரியாணாவைச் சேர்ந்த உதிதா.2017-ல் சீனியர் அணியில் இடம் பெற்றார். 2018 ஆசியப் போட்டியில் வெள்ளி வென்ற அணியில் இவர் பங்களித்துள்ளார். ஆரம்ப காலத்தில் கைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த இவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாக்கிக்கு மாற எடுத்த முடிவு, அவரது வாழ்வையே மாற்றியுள்ளது.

"சிறிது காலமாக இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறேன். டோக்யோவில் அணியின் வெற்றிக்குப் பங்களிக்க விரும்புகிறேன்" என்று இவர் கூறுகிறார்.

நிஷா

மிட்ஃபீல்டர்
நிஷா

2019-ல் தனது சர்வதேச அறிமுக ஆட்டத்தைத் தொடங்கிய நிஷா, அணிக்குப் புதிதானவர் தான். அதற்குப் பிறகு கொரொனா பெருந்தொற்று காரணமாக அதிகப் போட்டிகள் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ல் அணியுடன் அர்ஜென்டினா சென்றிருந்தார். தனது துறை ரீதியான பயணத்தைத் தொடங்கிவைத்த முதல் அனுமதிக் கடிதம் பெற்ற தருணத்தை நினைவு கூருகிறார். இவரது தந்தை ஒரு தையல்காரர். தனது மகள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டவர் அவர்.

தனது அணித் தோழியான நேஹாவின் தாயாரும் இவரது தாயாரும் ஒரே தொழிற்சாலையில் தான் பணி புரிகிறார்கள். இவர்கள் இருவரும் பயிற்சியும் ஒன்றாகவே மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நவ்ஜோத் குமார்

மிட்ஃபீல்டர்
நவ்ஜோத் குமார்

ஹரியாணாவின் குருக்ஷேத்ராவில் பிறந்த இவர், இந்திய அணியில் மிட்ஃபீல்டர் ஆவார். 2012-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை போட்டியில் இவர் அறிமுகமானார். கொரியாவில் நடந்த 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

தனது ஒவ்வொரு முடிவுக்கும் தனது பெற்றோர் ஆதரவளித்ததாகக் கூறும் இவரைப் பள்ளியில் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுக்க இவரது தந்தை பெரிதும் ஊக்குவித்ததாகக் கூறுகிறார். இது நவ்ஜோத் பங்கு பெறும் இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாகும்

மோனிகா

மிட்ஃபீல்டர்
மோனிகா

ஹரியாணாவைச் சேர்ந்த 27 வயது மிட்ஃபீல்டரான இவர், இந்திய அணியின் முக்கிய தருணங்களில் பங்கெடுத்துள்ளார். 2016-ல் ஆசிய சாம்பியன் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கிய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்துள்ளார்.

"எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக் என்பது மிக முக்கிய தருணம். அந்தப் பெரிய மன்றத்தில் இந்தியாவின் சார்பில் பங்கெடுப்பது கௌரவத்துக்குரியது. ஒரு மூத்த வீராங்கனையாக, இளம் வீராங்கனைகளை ஊக்குவித்துச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தச் செய்யும் பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்கிறேன்." என்கிறார் இவர்.

முதன்முதலாக இந்திய அணிக்காக விளையாடிய நாளை மறக்க முடியாது என்று கூறுகிறார் இவர்.

சுஷீலா சானு புக்ரபம்

மிட்ஃபீல்டர்
சுஷீலா சானு புக்ரபம்

36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ரியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற போது அந்த அணியைத் தலைமை தாங்கிச் சென்றவர் இந்த சுஷீலா சானு தான். ஒரு ஜூனியர் டிக்கெட் பரிசோதகராக இருந்த இவர், இந்திய ஹாக்கி அணியைத் தலைமை தாங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். இந்தப் பயணம் எத்தனை சுவாரஸ்யமானதாக இருந்திருக்கும்!

வடகிழக்கு மாநிலமான மணிபூரைச் சேர்ந்த இவர், 2013-ல் வெண்கலப் பதக்கம் வாங்கிய இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கும் இவர் தலைமை தாங்கி வழி நடத்தியுள்ளார். 29 வயதான சுஷீலா, அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த மிட்ஃபீல்டர் ஆவார். 2014 ஆசியப் போட்டிகள், தங்கம் வென்ற 2017 ஆசிய கோப்பை என கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மிக முக்கிய தருணங்களில் இவர் பங்களித்துள்ளார்.

சலீமா டெடெ

மிட்ஃபீல்டர்
சலீமா டெடெ

19 வயதுக்குள் இவர் 29 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார். நிக்கி பிரதானுக்கு அடுத்த படியாக ஜார்க்கண்டிலிருந்து ஒலிம்பிக் செல்லும் இரண்டாவது வீராங்கனை இவர். 2018-ல் இளைஞர் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு இவர் தான் தலைமை தாங்கினார். அது தன்னுடைய மறக்க முடியாத தருணம் என்று இவர் நினைவு கூருகிறார்.

"ஒலிம்பிக்கில் இந்தியாவின் தரப்பில் விளையாடப்போவது ஒரு கனவு போலத் தோன்றினாலும், எங்கள் முன் இருக்கும் சவால்களையும் நான் உணர்ந்திருக்கிறேன். ஹாக்கியின் உச்ச கட்ட நிலைக்கு வந்துள்ளோம். இதில் என் மனம் முழுக் கவனம் செலுத்துகிறது" என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இவர்.

நேஹா

மிட்ஃபீல்டர்
நேஹா

நேஹா கோயல் (24) ஜூனியர் அணியில் 2011இல் இணைந்தார். 2014இல் சீனியர் அணியில் அறிமுகமானார்.

2017இல் நடந்த மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவுக்கு எதிராகத் தமது முதல் கோலை பதிவு செய்தார்.

"என் அப்பா ஒரு குடி நோயாளி. வீட்டுச் சூழல் நன்றாக இருக்காது. இலவசமாக ஆடைகளும் ஷூக்களும் கிடைக்கும் என்று என்னிடம் கூறப்பட்டதால் நான் ஹாக்கி விளையாடச் சேர்ந்தேன். என் பயிற்சியாளர் என்னை ஊக்குவித்து, நிதியுதவி செய்தார். என் தந்தை இறந்த பிறகு, என் தாய் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றினார். எனது சகோதரிகளும் நானும் குடும்பத் தேவைகளைச் சமாளிக்க உதவினோம்."

இது நேஹாவின் முதல் ஒலிம்பிக் போட்டி. "ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அணியில் ஓர் அங்கமாக இருப்பது எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்காகத்தான் நாங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தோம். இறுதியாக நாங்கள் இங்கு வந்தடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களிடம் திட்டம் உள்ளது. எங்களால் இயன்ற அளவுக்கு அதை நிறைவேற்றுவதுதான் நாங்கள் செய்ய வேண்டியது."

ஃபார்வேர்ட்

ராணி

ஃபார்வேர்ட்
ராணி

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவி ராணி. 2020-ல் "வேர்ல்ட் கேம்ஸ் அத்லீட் ஆஃப் த இயர்" என்ற பெருமைக்குரிய விருதை வாங்கிய முதல் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றார். தனது 15 ஆவது வயதில் இருந்து இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

2010 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய இளம் வீராங்கனை இவர் தான். வறுமையான குடும்பப் பின்னணியில் ஒரு வண்டி இழுப்பவரின் மகளாகப் பிறந்த இவர், ஹாக்கி விளையாட விரும்பிய போது அதிக எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

ஆனால் தனது திறமையால் நினைத்தை நடத்திக்காட்டினார். விரைவில் ஹாக்கி அணியில் இடம் பெற்றார்.2020-ல் பி பி சி இந்திய விளையாட்டு வீராங்கனைப் போட்டிக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 2019-ல் இந்தியா, அமெரிக்காவை வீழ்த்தி ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற போட்டியில், இறுதி கோல் எடுத்தவரும் இவர் தான்.

ஷர்மிளா தேவி

ஃபார்வேர்ட்
ஷர்மிளா தேவி

இரண்டாண்டுகளுக்கு முன்னர், 2019-ல் தான் டோக்யோ ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டியில் முதல் முதலில் அணியில் அறிமுகமாகி, ஒன்பதே போட்டிகளில் டோக்யோ ஒலிம்பிக்கில் தனது முதல் ஆட்டத்தை வெளிப்படுத்த இவர் தயாராகிவிட்டார். ஹரியாணாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த 19 வயதேயான ஷர்மிளா, இந்திய அணியில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறார்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய அணியில் ஒருவராக இருந்த இவர், 2019 தகுதிப் போட்டியில் அமெரிக்காவுடனான முதல் ஆட்டத்தில் ஒரு கோல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இது வரை அவர் இந்தியாவுக்காக ஒன்பது போட்டிகளில் ஆடியுள்ளார்.

"டோக்யோ ஒலிம்பிக்ஸ் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். இந்தியாவின் தரப்பில் பெரிய மன்றத்தில் களமிறங்கக் காத்திருக்கிறேன்" என்று ஆர்வம் மிகக் கூறினார் இவர்.

வந்தனா கட்டாரியா

ஃபார்வேர்ட்
வந்தனா கட்டாரியா

தன்னை ஒரு ஃபெடரரின் ரசிகை என்று கூறிக்கொள்ளும் இந்த 29 வயது வந்தனா, இந்திய அணியின் அட்டாக்கிங்க் லைன் குழுவின் ஓர் அங்கம். 2013 ஜூனியர் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக கோல் எடுத்தவர் இவர். அதற்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து ரியோ ஒலிம்பிக்கிற்குச் சென்றவர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் இவர். 200போட்டிகளுக்கும் மேல் விளையாடியுள்ள இவர், மிகவும் அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரராக அறியப்படுபவர். 2016-ல் ஆசிய சாம்பியன் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். 2013 ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை வெற்றித் தருணமே தமது மனதில் அழியாமல் இருப்பதாக இவர் கூறுகிறார்.

லால் ரெம்சியாமி

ஃபார்வார்டு
லால் ரெம்சியாமி

ஒலிம்பிக்கில் விளையாடும் முதல் மிசோரம் வீராங்கனை லால்ரெம்சியாமி. மிசோரமின் கோலசிப்பில் பிறந்த வளர்ந்த 21 வயதான இவர், 2019-ல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் வளரும் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டவர் இவர். 2018 ஆசியப் போட்டிகளில் வெள்ளி வென்ற அணியில் இவர் ஓர் அங்கம். சியாமி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் இவர்.

2019-ல் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் ஒரு முக்கியமான அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னர், இவரது தந்தை இறந்த செய்தி கிட்டியும் இவர் கலங்காமல் இருந்து விளையாடி, இந்திய அணியை வெற்றி பெறச் செய்து, ஒலிம்பிக் செல்லத் தகுதி பெறச் செய்தார்.

ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் மிசோரம் வீராங்கனை என்ற பெருமையை மாநிலத்துக்கும் பெற்றுத் தந்தவர். "ஒலிம்பிக் எப்போதுமே என் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு விஷயம். இப்போது நான் அதில் விளையாடும் வாய்ப்பையும் பெற்று விட்டேன்" என்று பெருமை கொள்கிறார் இவர்.

நன்நீத் கௌர்

ஃபார்வேர்ட்
நன்நீத் கௌர்

25 வயதான நன்நீத் கௌர் இந்தியாவுக்காக 79 போட்டிகளில் ஆடியிருக்கிறார். அணியின் மிகவும் தாக்கம் வாய்ந்த ஆட்டக்காரராக அறியப்படுபவர். ஹரியாணாவைச் சேர்ந்த இவர், 2013 ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருந்தவர்.
2019-ல் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்திலும் ஆடி, இந்தியாவை ஒலிம்பிக் செல்ல தகுதிபெற்றுத் தந்த அணியிலும் இவர் இருந்துள்ளார். "நாங்கள் நெடுநாட்களாகக் காத்திருந்த அந்த டோக்யோ ஒலிம்பிக் தருணம் இப்போது வந்து விட்டது. இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்" என்று இவர் கூறுகிறார்.