
பெருந்தொற்றுகள் எப்படி முடிவுக்கு வரும்?
நாம் ஒரு பெருநோய்த் தொற்றின் பிடியில் சிக்கி இருக்கிறோம். நாம் வாழும் காலத்தில் இதேபோன்ற வேறு பாதிப்பு எதுவும் நம் நினைவில் இல்லை. தடுப்பூசி மருந்து வந்தால் இந்த நோய் அழிந்துவிடும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், நம் முன்னோர்கள் எதிர்கொண்ட பெரும்பாலான தொற்று நோய்கள் இன்னமும் நம்மிடையே உள்ளன.
சில பெருநோய்த் தொற்றுகள் எப்படி முடிவுக்கு வந்தன என்பதை அறிய கீழே ஸ்குரோல் ↓ செய்து பார்க்கவும். நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதன் அறிகுறிகளை இது காட்டும்.

இவரது பெயர் ஜாஸ்மின்.
நம்மைப் போலவே, இவரது முன்னோரும் பல பெருந்தொற்றுகளில் இருந்து மீண்டனர்.
அவர்கள் எதிர்கொண்ட நோய்களை அறிய, காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் செல்வோம்.
60 தலைமுறைகளுக்கு முன்பு இருண்ட காலத்தில், புபோனிக் பிளேக் நோயின் தொடர் பரவலுடன் ஜாஸ்மினின் உறவினர்கள் வாழ்ந்தனர்.
எலிகள் மீதான உண்ணிகளின் பாக்டீரியாக்கள் வழியாகவும், நோய் பாதித்தவர்களின் சுவாச நீர்த்துளிகள் மூலமாகவும் ஏற்படும் நோய் பேரழிவை ஏற்படுத்தியது.
எர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா குறிப்பிட்ட எலி கூட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும்.

2,000 ஆண்டுகளில் பல கோடிக்கணக்கானோரை இது கொன்றது.
1346-1353 கால கறுப்பு மரணம், பெருந்தொற்று மரணங்களிலேயே மிகவும் மோசமானது.
பிளேக் நோய் லட்சக்கணக்கானோரை கொன்றது. ஆனால் இன்றைய உயிரிழப்புகள் குறைவு.
நிணநீர்க் கட்டிகளில் தொற்று மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், புபோயஸ் நோய், கடுமையான தனிமைப்படுத்தல், கழிவு நீக்க வசதி மேம்பாடு மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால் நோய்த் தொற்று எப்படி பரவுகிறது என்ற புரிதல் இல்லாமல் இவை எதுவுமே சாத்தியமாகி இருக்காது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தொற்று நோய் டைனமிக்ஸ் துறை பேராசிரியர் ஸ்டீவன் ரிலே கூறியுள்ளார். இது இன்றைக்கும் பொருத்தமானதாக உள்ளது.
``அதுபற்றிய அறிவு உங்களுக்குக் கிடைத்துவிட்டால், அதை நீங்கள் பகிர்ந்து கொண்டால், பிறகு நோய் பரவுதலை மிகவும் குறைவான அளவுக்கு உங்களால் கட்டுப்படுத்த முடியும்'' என்று அவர் கூறியுள்ளார்.
இருந்தாலும் இன்னும் பிளேக் பாதிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் மங்கோலியாவின் உள்புறத்தில், ஜாஸ்மினுக்கு அந்த நோய்க்கான வாய்ப்பு இருந்தது.
பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்றாலும், எதிர்ப்பு மருந்துகள் மூலம் அதற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும்.
பல நூறு ஆண்டுகள் கழித்து, ஜாஸ்மினின் முன்னோர்கள் பெரியம்மை அச்சத்தை எதிர்கொண்டனர்.
வேரியோலா மைனர் என்ற வைரஸ் நோய், மனிதர்கள் அறிந்த உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று.
உடல் முழுக்க சீழ்க் கட்டிகளை அது உருவாக்கும். அதன் உச்சமாக, 10-ல் 3 பேர் இறந்து போனார்கள்.
பாதிக்கப்பட்டவரின் மூக்கு அல்லது வாய் அல்லது புண்களில் இருந்து வெளியாகும் திவலைகள் மூலம் இந்த நோய் பரவியது.
வேரியோலா மைனர் வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவவில்லை.

பிளேக் நோயைப் போல, பெரியம்மையும் பல நூறு மில்லியன் பேரை சாகடித்தது - 20வது நூற்றாண்டில் மட்டும் 300 மில்லியன் பேர் இறந்தனர்.
பெரியம்மையால் குறைந்தது 350 மில்லியன் பேர் இறந்துள்ளனர் - இன்று ஒருவரும் உயிரிழப்பதில்லை.
ஆனால், பிரிட்டிஷ் டாக்டர் எட்வர்டு ஜென்னர் 1796ல் தடுப்பூசி மருந்து தயாரித்ததாலும், அறிவியலாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது - அதற்கு இரு நூற்றாண்டுகள் தேவைப்பட்டன.
இந்த வகையில் அழிக்கப்பட்ட ஒரே நோய் பெரியம்மை மட்டுமே. மனிதகுலத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாக இது எனும் பேராசிரியர் ரிலே, நிலவில் மனிதன் காலடி வைத்ததற்கு இணையானது இது என்கிறார்.
``அரசு செலவிட்டதற்கு மிகப் பெரிய பலன் கிடைத்திருப்பதை இதன் மூலம் காணலாம்'' என்கிறார் அவர். இந்த நோய் பாதிப்பு இல்லாததால் உலக நாடுகள் அடைந்த வருடாந்திர சேமிப்பை அவர் குறிப்பிடுகிறார்.
அறிவியலின் இந்தச் சாதனை காரணமாக, நாமும் ஜாஸ்மினும் இனிமேலும் அந்த ஆபத்தை எதிர்நோக்க மாட்டோம்.
எட்டு தலைமுறைகளுக்கு முன்னதாக, ஜாஸ்மினின் முன்னோர்கள் காலரா அச்சுறுத்தலை எதிர்கொண்டனர்.
அசுத்தமான உணவு அல்லது குடிநீர் மூலமாக இந்த நோய் ஏற்படுகிறது. ஏழு முறை நோய் பரவியதில் பல மில்லியன் பேர் இறந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அசுத்தமான உணவு அல்லது குடிநீரில் விப்ரியோ காலரே என்ற பாக்டீரியா இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஆனால் மேற்கத்திய நாடுகளில் சுகாதாரம் மற்றும் கழிவுநீக்க வசதிகளை மேம்படுத்தியதால், இந்த நோய் அச்சுறுத்தல் மறைந்தது. குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் இந்த நோய் பரவல் இப்போதும் வழக்கமானது. ஆண்டுதோறும் ஒரு லட்சம் முதல் 1.40 லட்சம் பேர் வரை இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
காலராவால் கோடிக்கணக்கானோர் இறந்துள்ளனர். இப்போதும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர்.
``காலராவில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். அதில் ஏதும் தவறு ஏற்பட்டால் மிக வேகமாக பரவக்கூடும்'' என்று பேராசிரியர் ரிலே கூறியுள்ளார்.
இதன் காரணமாக, தடுப்பு மருந்து இருந்தும், எளிதான சிகிச்சை வசதி இருந்தும், ஜாஸ்மின் எங்கு வாழ்கிறார் என்பதைப் பொருத்து இந்த நோய்க்கு ஆளாகி அவர் உயிரிழப்பதற்கான ஆபத்தின் அளவு இருக்கும்.
ஜாஸ்மினின் குடும்பமும் பல்வேறு ப்ளூ தொற்று நோய்களைக் கடந்து வந்திருக்கும். மிக மோசமான பாதிப்பாக அவரது எள்ளத்தாத்தாவுக்கு முந்தைய தலைமறை வாழ்ந்த 20 ஆம் நூற்றாண்டில் நிகழந்த பாதிப்பு வரலாறில் பதிவாகியுள்ளது.
1918ல் ஏற்பட்ட இன்புளூயன்ஸா தொற்று, சில சமயம் ஸ்பானிஷ் ப்ளூ என்றழைக்கப்படுகிறது. சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான நோய்த் தொற்றாக இது உள்ளது. உலக அளவில் 50 - 100 மில்லியன் பேர் இதனால் இறந்தனர்.
இன்றைய கொரோனா வைரஸ் போலவே, அப்போது தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நோய் பரவலைக் குறைத்தன.
H1N1 வைரஸ் ஸ்பானிஷ் ப்ளூ நோய்த் தொற்றுக்குக் காரணமாக இருந்தது.

1918 முதல் 1920 வரையிலான காலத்தில் இரண்டு முறை தாக்கிய H1N1 வைரஸ் பின்னர் படிப்படியாகக் குறைந்து போனது. இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் அதன் சுழற்சிப் பரவல் காணப்படுகிறது.
ஸ்பானிஷ் ப்ளூவால் மில்லியன் கணக்கானோர் இறக்கின்றனர். பருவகால ப்ளூ காய்ச்சல் இப்போதும் உள்ளது.
ஆனால் மற்ற நோய்த் தொற்று ஃப்ளூ பாதிப்புகள் தொடர்ந்தன.
1968ல் தாக்கிய ஹாங்காங் ஃப்ளூ பாதிப்பில் ஒரு மில்லியன் பேர் இறந்தனர். அந்த ப்ளூ இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. H1N1-ன் ஒரு வகையான பறவைக் காய்ச்சல் 2009ல் உலக மக்கள்தொகையில் 21 சதவீதம் பேரைப் பாதித்தது.
ப்ளூ இன்னும் ``தொற்று நோய் அச்சுறுத்தலாக'' நீடித்துக் கொண்டிருக்கிறது என்று பேராசிரியர் ரிலே கூறுகிறார். இதுபோன்ற வைரஸ்களால் நோய்த் தொற்றை நாமும், ஜாஸ்மினும் எதிர்கொள்ளும் அபாயம் இருக்கிறது என்கிறார் அவர்.
பருவகால ப்ளூ காய்ச்சல் நம்மை தாக்கும் அபாயம் இன்னும் உள்ளது. இந்த நோயால் ஆண்டுதோறும் சில லட்சக்கணக்கானோர் சாகின்றனர்.
சுமார் 4 தசாப்தங்களுக்கு முன்பு, ஜாஸ்மினின் பெற்றோர் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் என்ற நோய் பரவிய காலத்தில் வாழ்ந்தனர். அந்த நோய் ``உலகளாவிய தொற்று நோய்'' என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு வைரஸ் (எச்.ஐ.வி) - உடல் திரவங்கள் மூலம் பரவக் கூடியது. இதுவரையில் உலகில் 32 மில்லியன் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை எச்.ஐ.வி தாக்குகிறது.

``மிக மோசமான வைரஸ்'' என்று எச்.ஐ.வி.யைக் கூறலாம் என்கிறார் பேராசிரியர் ரிலே. இப்படி அவர் கூறக் காரணம், அது அறிகுறிகளைக் காட்டுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலமும், அதிக உயிரிழப்பு விகிதமும்தான். எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், அது வேகமாக வளர்கிறது.
இருந்தபோதிலும், நோய் கண்டறிதலில் நவீன வசதிகள் வந்துவிட்டன. உலக அளவில் சுகாதார பிரச்சார இயக்கங்கள் நடைபெறுகின்றன. அதனால் மக்களின் பாலியல் உறவு நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போதை மருந்து பயன்படுத்துபவர்களுக்குப் பாதுகாப்பான ஊசி மருந்துகள் அதிகம் கிடைக்கின்றன. இதனால் நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இவ்வளவு இருந்தும், 2019 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயால் 690,000 பேர் இறந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் பல மில்லியன் பேரைக் கொன்றிருக்கிறது - இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர்.
எச்.ஐ.வி.யை குணமாக்க மருந்து கிடையாது என்றாலும், நல்ல சுகாதார வசதி உள்ள ஒரு நாட்டில் ஜாஸ்மின் வாழ்வதாக இருந்தால், போதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் அவருக்குக் கிடைத்து, அவரால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
அதுவே அவர் குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் வாழ்பவராக இருந்தால், போதிய வசதியின்றி அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பார்.
ஜாஸ்மினின் வாழ்காலத்தில் இருபது மற்றும் முப்பது ஆண்டுகளை கடந்தபோது, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வடிவில் ஆபத்துகள் வந்தன.
அதி தீவிர சுவாசக் கோளாறு குறைபாடு (சார்ஸ்) - கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட முதலாவது உயிர்க்கொல்லி நோய் - 2002 மற்றும் 2003க்கு இடைப்பட்ட காலத்தில் 800க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சார்ஸ் கொரோனா வைரஸ் (சார்ஸ்-சி.ஓ.வி. எனப்படுகிறது) 2003 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் 2003 ஜூலையில் புதிய பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை. உலகளாவிய அந்த உயிர்க்கொல்லி நோய் பாதிப்பு முடிந்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
அதன்பிறகு சில காலம் கழித்து மெர்ஸ் பாதிப்பு வந்தது. இதுவும் கொரோனா வைரஸ் மூலம் ஏற்படக் கூடியது. இதனால் 912 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலான பாதிப்புகள் அரேபிய தீபகற்பத்தில் இருந்தன.
பிரிட்டனில் மெர்ஸ்-சிஓவி பாதிப்புக்கான ஆபத்து மிகவும் குறைவு என்ற நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் இதன் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. அங்கு ஓட்டகங்கள் மூலம் மனிதர்களுக்கு மெர்ஸ் பரவியது.
சார்ஸ் நோய் 800க்கும் சற்று அதிகமானோரை பலி வாங்கியது.
ஜாஸ்மினுக்கு மெர்ஸ் பாதிப்பு ஏற்பட இப்போதும் வாய்ப்பு உள்ளது என்றாலும், பெரும்பாலான நாடுகளில் இதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
இப்போது ஜாஸ்மின் மற்றும் நமது வாழ்நாளில், சார்ஸ் கொரோனா வைரஸின் புதிய வடிவத்தைக் காண்கிறோம். இது சுவாசமண்டலத்தைப் பாதிக்கும் கோவிட்-19 எனப்படுகிறது.
சார்ஸ் சிஓவி-2 எனப்படும் இந்த நோய் 2003ல் உருவான சார்ஸ் வைரஸின் பரிணாம வளர்ச்சி பெற்ற வடிவமாகக் கருதப்படுகிறது. இது தனித்துவமானது என நோய் சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் பல வகையான அறிகுறிகள் தென்படும் என்பதால், எதுவும் அற்றது என்பதில் இருந்து உயிர் போகும் நிலை வரை பல அறிகுறிகளைக் காட்டுகிறது. அறிகுறிகள் தென்படாத நிலையிலேயே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது பரவுகிறது.
``அதனால், பல பகுதிகளில் இதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது'' என்று பேராசிரியர் ரிலே கூறினார்.
சார்ஸ் சிஓவி-2 வைரஸ், 2003ல் உருவான சார்ஸ் வைரஸ் உடன் தொடர்புள்ளது.

இதுவரையில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் - ஆனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு இன்னும் அதிதமாக இருக்கலாம்.
புதிய கொரோனா வைரஸ் இதுவரையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பு மருந்து மற்றும் செயல்திறன் மிகுந்த சிகிச்சைக்கான தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், உலகம் முழுக்க பெரும் பகுதியினருக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அப்படியே உள்ளது. நம்மைப் போல ஜாஸ்மினும் நோய் பாதிக்கும் ஆபத்து சூழலில் இருக்கிறார்.
அடுத்தது என்ன?
வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் போன்ற நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய் பாதிப்பு நீண்டகாலமாக நம் சமுதாயத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கும் நோயாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.
இப்போதைய நோய்த் தொற்று இந்த நாட்களில் பல நூறு மில்லியன் பேர் உயிரைப் பறித்திருக்கிறது.

நோய் பரவல், பொது சுகாதார பிரசாரம், புதிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் பற்றி அதிக தகவல்களை அறிந்திருப்பது, முந்தைய நோய்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது.
இப்போதைய நோய்த் தொற்றுக்கான இறுதிக் கட்டமும், அதேபோன்ற நடவடிக்கைகளின் கூட்டு செயல்பாட்டால் தான் ஏற்படப் போகிறது.

``பாதுகாப்பான, உயர்-செயல்திறன்மிக்க'' தடுப்பு மருந்து இதற்கு முடிவு கட்டும் என்றாலும் ``அதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல'' என்று பேராசிரியர் ரிலே கூறுகிறார்.
மாறாக, நோய்க்கு எதிரான எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்வதுடன், அந்த நோயுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
``நிச்சயமாக ஐந்து ஆண்டுகளில், அல்லது அதற்கும் முன்னதாக, உலகெங்கும் பயன்படுத்தக் கூடிய நல்லதொரு தடுப்பு மருந்து நமக்குக் கிடைக்கலாம். அல்லது நமக்குப் போதிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு, சிறிய அளவில் மீண்டும் நோய்த் தாக்குதல் ஏற்படும் நிலையில் அதனுடன் வாழக் கற்றுக் கொள்ளக்கூடும்'' என்று அவர் கூறுகிறார்.
உலக அறிவியல் நிபுணர்கள் ஒன்று சேர்ந்ததை அடுத்து பெரியம்மை ஒழிக்கப்பட்டதைப் போல, அபாரமான விஷயங்கள் நடப்பது சாத்தியமே.
புதிய கொரோனா வைரஸ் சிக்கலான சவாலை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், அறிகுறி தென்படுவதற்கு முன்னதாகவே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும் என்பதால், இதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற உலக அளவிலான முயற்சிக்கு ``அபார வெற்றி கிடைக்கும்'' என்று பேராசிரியர் ரிலே நம்பிக்கை தெரிவிக்கிறார்.
``இதுபோன்ற ஒரு பணியை உலகம் ஒருபோதும் பகிர்ந்து கொண்டது இல்லை'' என்கிறார் அவர். ``ஒரு கட்டத்தில் இதில் கூட்டு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று அவர் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும், கடந்த காலத்தில் நோய்த் தொற்றுகளில் மக்களை பேரழிவுக்கு ஆட்படுத்திய கிருமிகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன என்பதை நினைவு கொள்ள வைப்பதாகவும் இருக்கும். நெருக்கடி முடிந்துவிட்டாலும் - வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள், அவற்றால் ஏற்படும் நோய்த் தொற்றுகள் - அப்படியே இருக்கின்றன.
