அணைக்கப்படுகிறது அமர் ஜவான் ஜோதி - இனி போர் நினைவுச்சின்னத்தில் புதிய ஜோதி

50 ஆண்டுகளாக அமர்ஜவான் ஜோதி எரிவதை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தி வந்தனர். அதன் அருகே கட்டப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னத்தில் இனி புதிய ஜோதி ஏற்றப்படவிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

மணிகண்டன் மற்றும் ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. டெல்லி இந்தியா கேட் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டு, போர் நினைவுச்சின்னத்தில் புதிய ஜோதி ஏற்றப்படுகிறது

    அமர் ஜவான் ஜோதி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, 2018இல் இந்திய ராணுவ தலைமை தளபதியாக பிபின் ராவத் இருந்தபோது, அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

    டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள பணியில் உயிர்த்தியாகம் செய்த முப்படையினரின் நினைவாக எழுப்பப்பட்ட அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் இடைவிடாமல் எரியூட்டப்பட்டு வந்த நெருப்பு, வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) அணைக்கப்படுகிறது.

    அந்த நெருப்பு அணைக்கப்படும் அதேவேளை, அந்த நினைவிடம் அருகே உயிர்த்தியாகம் செய்த முப்படையினர், துணை ராணுவப்படையினரின் நினைவாக கட்டப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னத்தில் நிறுவப்பட்டுள்ள ஜோதி எரியூட்டப்படும்.

    இந்த நிகழ்வு ஜனவரி 21ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    அமர்ஜவான் ஜோதி நினைவிடம், 1972ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அப்போதைய இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் திறக்கப்பட்டது.

    அப்போது முதல் தொடர்ச்சியாக 50 வருடங்களாக இந்த நினைவு ஜோதி அணையாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

    நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளான சுதந்திர தினம், குடியரசு தினம், முப்படைகளின் தினம் , வெளிநாட்டுத் தலைவர்களின் வருகை போன்றவற்றின்போது இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்துக்கு தலைவர்களும் அதிகாரிகளும் வந்து இங்கே முதல் மரியாதை செலுத்தி வருவது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த அமர் ஜவான் ஜோதியில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் தேசிய போர் நினைவுச்சின்னம் உள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அந்த இடம் பிரதமர் நரேந்திர மோதியால் திறக்கப்பட்டது.

    அங்கு இதுவரை 25 ஆயிரத்து 942 வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் பொன்னிறத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.

  3. டோங்கோ: எரிமலை வெடிப்பால் புரட்டிப்போடப்பட்ட டோங்கோ மக்களின் வாழ்க்கை

    காணொளிக் குறிப்பு, டோங்கோ மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட கடல் சுனாமியும் எரிமலை வெடிப்பும்
  4. இலங்கை என்ன இந்தியாவின் பகுதியா? ஆவேசம் அடையும் இலங்கை அமைச்சர்

    இலங்கை

    பட மூலாதாரம், FACEBOOK.COM/UDAYAGAMMANPILAFANPAGE

    படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் எரிசக்தி அமைச்சர் ஆக இருக்கும் உதய கம்மனபில

    இலங்கை என்ன இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா என்று கோபத்துடன் எதிர்வினையாற்றியிருக்கிறார் இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மனபில.

    இந்தியா தற்போதைக்கு தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடாக இருக்கும் இலங்கைக்கு உதவக்கூடும்.

    ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு காலங்காலமாக பின்னிப்பிணைந்து உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தமிழர் பிரச்னை மிகவும் உணர்வுபூர்வமானது, ஆனால், அதுவே இரு தரப்பிலும் கசப்புணர்வை தூண்டவும் காரணமாகலாம் என்ற வகையில் ஒரு நிகழ்வு இலங்கையில் நடந்திருக்கிறது.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  5. இந்தியா-சீனா எல்லை தகராறு: காணாமல் போன அருணாச்சல பிரதேச சிறாரை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய ராணுவம்

    இந்தியா

    பட மூலாதாரம், TWITTER@TapirGao

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள இந்திய-சீனா சர்வதேச எல்லையில் இருந்து காணாமல் போன 17 வயது சிறாரை கண்டுபிடிக்கும் பணியை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

    அசாம் மாநிலம் தேஜ்பூரில் உள்ள ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் இது குறித்து ஊடகங்களிடம் கூறுகையில், “அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மிராம் தரோம், மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (எல்எஸ்சி) வழியாக சீன ராணுவத்தால் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது," என்றார்.

    இந்திய ராணுவம் உடனடியாக பிஎல்ஏவை ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டது. அவரைக் கண்டுபிடித்து நெறிமுறைப்படி திருப்பி அனுப்ப வேண்டும் என சீன ராணுவத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, அருணாச்சலப் பிரதேசத்தின் முந்தைய பாஜக எம்பி தபீர் காவ், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைந்து இந்திய சீனாவின் சீன ராணுவம் கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது.

  6. பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: யதி நரசிங்கானந்தாவை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

    இந்தியா

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, யதி நரசிங்கானந்த்

    பெண்களை இழிவாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள மத தலைவர் யதி நரசிங்கானந்தாவை ஜாமீனில் விடுதலை செய்ய ஹரித்வார் நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

    அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை, எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட முடியாது என்று தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தெரிவித்தது.

    நரசிங்கானந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    முஸ்லிம் பெண்களுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துகள் அடங்கிய இரண்டு காணொளிகளை ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் வெளியிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    ஹரித்வார் மாவட்ட காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஆய்வாளர் விபின் பதக் கூறுகையில், "சுவாமி யதி நரசிங்கானந்த் பெண்களை அநாகரிகமாகப் பேசியதற்காக ஜனவரி 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் 'தர்ம சன்சாத்' நிகழ்ச்சியின் போது வன்முறை தூண்டும் வகையில் பேசியதாகவும் அவர் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது," என்று தெரிவித்தார்.

  7. மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சருக்கு நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

    IAS

    மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) அவர் கைது செய்யப்பட்டார். பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 19ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இயக்குநர புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    மும்பையில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஆர்தர் ரோடு சிறையில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

    என்ன வழக்கு?

    முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிகுண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஜேவின் பங்கு மற்றும் அவரது குற்றச்சாட்டுகள் காரணமாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

    இந்த வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி உதவியாளர்கள் சஞ்சய் பலாண்டே மற்றும் குந்தன் ஷிண்டே ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் சஞ்சீவ் பலாண்டே மற்றும் குந்தன் ஷிண்டே ஆகியோரை காவலில் வைக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் கோரியது.

    அனில் தேஷ்முக் தான் இந்த சதித்திட்டத்தின் முக்கிய நபராக இருந்ததாக அதன் விசாரணை அதிகாரிகள் கூறினர்.

    மேலும், விசாரணையின் போது சஞ்சீவ் பலாண்டே, ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தின் பின்னணியில் அனில் தேஷ்முக் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

    அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக லஞ்சம் பெற்றதாக தேஷ்முக் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    அனில் தேஷ்முக்கிடம் இருந்து தான் நேரடியாக ஆர்டர் பெறுவதாகவும், தேஷ்முக்கின் விருப்பப்படியே குந்தன் ஷிண்டேவுக்கு ரூ.4.70 கோடி கொடுத்ததாகவும் சச்சின் வாஜே கூறியிருந்தார்.

    தேஷ்முக் மீது மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர் பரம்பீர் சிங்கும் இதேபோல குற்றம்சாட்டினார்.

  8. செக் பாடகி ஹனா ஹோர்கா: வலிய கொரோனா தொற்றை வரவைத்துக்கொண்டவர் உயிரிழப்பு

    Singer

    பட மூலாதாரம், Getty Images

    செக் குடியரசைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி ஒருவர் வலிய தனக்கு கோவிட் தொற்று வரவைத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளார் என்று அவருடைய மகன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

    57 வயதான ஹனா ஹோர்கா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மேலும் அவர் கோவிட் பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்த பிறகு, குணமடைந்து வருவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால், பதிவிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.

    சில இடங்களுக்குச் செல்வதற்கு, ஏற்கெனவே கோவிட் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்ற வகையில் அனுமதி பெறமுடியும் என்பதால், ஜான் ரெக் மற்றும் அவருடைய தந்தைக்கு தொற்று பாதிப்பு இருந்தபோது, அவர் வேண்டுமென்றே நோய்த்தொற்றை வரவைத்துக்கொண்டார் என்று அவருடைய மகன், ஜான் ரெக் கூறினார்.

    செக் குடியரசில் புதன்கிழமை கணிசமான அளவில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

  9. முதுகுளத்தூர் அருகே கடன் தொல்லை காரணமாக வீடியோ பதிவு செய்த பின் விவசாயி ஒருவர் தற்கொலை

    Farmers

    முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தில் கடன் பிரச்னையால் விவசாயி வீடியோ பதிவு செய்து வெளியிட்ட பின்பு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (58) .

    விவசாயியான இவர் அதே பகுதியை சேர்ந்த கூட்டுறவு கடன் சங்க காசாளரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் பிரச்னையால் சிரமப்பட்ட தங்கவேல் வயலுக்குச் சென்றார்.

    தனது கடன் பிரச்னை குறித்தும் அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவரது அலைபேசியில் வீடியோ எடுத்து அதனை கிராம உதவியாளர் உள்ளிட்ட சிலருக்கு அனுப்பினார்.

    இதைத்தொடர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது வீடியோவை பார்த்தவர்கள் உடனடியாக வயலுக்கு சென்று அவரை மீட்டு மேலச்சிறுபோது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக விவசாயி தங்கவேல் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

    அதில் அவர் பேசும்போது நண்பர் ஒருவருக்கு மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் 3 லட்சம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கி கொடுத்ததாகவும் அதனை கட்டாமல் நண்பர் தலைமறைவாகிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 3.50 லட்சம் வட்டி மட்டும் கட்டி உள்ளதாகவும் ஆனால் 6 லட்சம் கடன் வாங்கியதாக நோட்டுகளில் எழுதி வாங்கிக்கொண்டு இன்னும் அதிகமாக வட்டி கட்ட வேண்டும் என்றும் கேட்கின்றனர். இல்லையென்றால் ஊர் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள் என தங்கவேல் பேசுகிறார்.

    இதையடுத்து விவசாயி தங்கவேல் அவரது விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் பிறகு அவர் இறந்ததாகவும் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  10. சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் தரவுகள் ஹோக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ICRC

    பட மூலாதாரம், Getty Images

    சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இலக்கு வைக்கும் ஹேக்கர்கள், அதிகம் பாதிக்கப்படக் கூடிய ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்களை திருடியுள்ளனர். உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் போன்றோருக்காக மனிதாபிமான உதவிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வழங்கி வருகிறது.

    அந்த அமைப்பு, மிகவும் நேர்த்தியாக நடந்த சைபர் தாக்குதலால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இந்த தகவல் திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெளிவற்று உள்ளது. சுமார் ஐந்து லட்சத்து 15 ஆயிரம் பேரின் தனி நபர் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

    அந்த தரவுகள், உலக அளவில் இயங்கி வரும் 60க்கும் அதிகமான செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை தேசிய சங்கங்கள் மூலம் சர்வதேச அமைப்புக்கு வந்தவை.

    ஜெனீவாவில் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு, வியன்னாவில் உள்ள வெளி நிறுவன சர்வரில் இந்த தரவுகளை சேமித்து வந்ததாகவும் அதையே ஹேக்கர்கள் இலக்கு வைத்ததாகவும் கூறியுள்ளது.

    அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் மார்டினி, இந்த திருட்டு சம்பவம், பாதிக்கப்பட்ட மக்களை பேராபத்துக்கு தள்ளியிருக்கிறது என்று தெரிவித்தார். அவர், “இதில் தொடர்புடையவர்கள் ஒன்றை சரியாக செய்யுங்கள் – யாரிடமும் தரவுகளை பகிராதீர்கள், விற்காதீர்கள், கசியவோ அவற்றை பயன்படுத்தவோ செய்யாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  11. திமுக ஐடி அணி: 'பி.டி.ஆர் அமைதியாகவில்லை, பிஸி ஆகி விட்டார்!' - டி.ஆர்.பி. ராஜா பேட்டி

    DMK

    `பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஸ்டைல் வேறு, என்னுடைய ஸ்டைல் வேறு. என்னுடைய அரசியல் என்பது பழையகால தி.மு.கவாக இருக்கும்' என்கிறார் டி.ஆர்.பி.ராஜா.

    தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விலகிவிட்டார். அவரது இடத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு நிதியமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக, சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இயங்கிவந்தார். லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தைப் புறக்கணித்தது, ஈஷா யோக மையத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்த பி.டி.ஆரின் டுவிட்டர் பதிவுகள் விவாதப் பொருளாக மாறியது.

    தொடர்ந்து பி.டி.ஆரின் பதிவுகள் அரசியல்ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தவே, ஒருகட்டத்தில் அரசியல் பதிவுகளை அவர் தவிர்த்து வந்தார். தி.மு.க தலைமையின் அறிவுறுத்தலின்பேரிலேயே அவர் அமைதியாகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக கட்சிப் பதவியில் இருந்து அவர் விலகலாம் எனவும் கூறப்பட்டது.

  12. லாகூர் சந்தையில் குண்டுவெடிப்பு - குழந்தை உள்பட இருவர் பலி

    பாகிஸ்தான்

    பட மூலாதாரம்,

    பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

    லாகூரில் உள்ள லஹோரி கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பலியான இருவரில் ஒரு குழந்தை அடங்கும். மேலும் காயமடைந்த 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    குண்டுவெடிப்பின் தாக்கத்தால் சாலையில் அரை மீட்டர் பள்ளம் ஏற்பட்டு அருகே உள்ள கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறின.

    லாகூர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராணா ஆரிப், மோட்டார் பைக்கில் பொருத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட குண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    லாகூர் துணை ஆணையர் உமர் ஷேர் சாத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், அனார்கலி பஜாரில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    சம்பவத்திற்கு காரணமானவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

  13. கள் மீதான தடையை நீக்கும் அறவழி போராட்டத்திற்கு சீமான் ஆதரவு

    Seeman

    பட மூலாதாரம், Twitter SeemanOfficial

    தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில் கள் மீதான தடையை நீக்கக் கோரி நாளை முதல் அறவழிப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த அறவழிப் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பிருந்தே பனைப் பொருட்கள் மக்களிடம் புழக்கத்தில் இருந்துள்ளது. அந்த வகையில் தமிழர்களின் வாழ்வியலில் மிக நெருங்கிய உணவாக இருந்தது பனங்கள் தான்.

    இதனால் அதை இறக்குவதற்கான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கள் மீதான தடையை நீக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை டேக் செய்திருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. சீனாவில் பிறப்புகள் குறைவதால் மக்கள்தொகை வளர்ச்சி பூஜ்ஜியம் – எச்சரிக்கும் நிபுணர்கள்

    China

    பட மூலாதாரம், Getty Images

    ஜனவரி 17ஆம் தேதியன்று, தேசிய புள்ளியியல் துறை (NBS), சமீபத்திய மக்கள்தொகை தரவுகளுடைய உண்மை அறிக்கைகளை சீன ஊடகங்கள் வெளியிட்டன. "சீனாவின் மக்கள்தொகை 2021-இல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது," என்ற தலைப்பின் கீழ் ஆங்கில மொழியில் அரசு நடத்தும் சைனா டெய்லி செய்தி வெளியிட்டது. இருப்பினும், தனியாரால் நடத்தப்படும் வணிக செய்தித் தளமான யிகாய் (Yicai), சினாவின் மக்கள் தொகை 480,000 மட்டுமே அதிகரித்து 2021-இல் 1.41 பில்லியனை எட்டியுள்ளதாகக் கூறியது.

    மேலும் கடந்த 60 ஆண்டுகளில் இது மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம்என்றும் குறிப்பிட்டது. தேசிய பிறப்பு விகிதம் 2021-இல் ஆயிரத்திற்கு 7.18 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும் 1950-க்குப் பிறகு மிகக் குறைவாகவும் உள்ளது.

  15. "பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதில் ரூபாய் 500 கோடி ஊழல்" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    Former CM

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதில் ரூபாய் 500 கோடி ஊழல் நடந்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியிருக்கிறார்.

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்

    அப்போது திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூபாய் 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. என்றும் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

    மேலும், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால் தமிழ் நாட்டில் 600 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைஅதிகரித்து உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    இப்படி பல தவறுகளை திசைதிருப்பவே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலரை இலக்கு வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகங்களை திமுக அரங்கேற்றி வருகிறது என்று அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெறும் சோதனை திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த எட்டு மாத காலத்தில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தொடங்கி வைக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  16. ஹிட்லர், நாஜி மருத்துவர் வரலாறு: மருந்துகளுக்கு அடிமையாகி, மனைவி ஈவா பிரானுடன் உறவு கொள்ளவும் போதைமருந்து சாப்பிட்ட கதை

    HIT

    பட மூலாதாரம், Getty Images

    சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலுக்கு உத்தரவிட்டபோது ஜெர்மனியின் ஹிட்லர் கொகைன் போதைமருந்துக்கு அடிமையாகி இருந்ததாகவும், அது தவிர 80 விதமான போதைமருந்துகளை பயன்படுத்தி வந்ததாகவும் வரலாற்று ஆசிரியர் கில்ஸ் மில்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    காலை உணவுக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே அடால்ஃப் ஹிட்லர் போதை ஊசிகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி விடுவார் என்கிறார் கில்ஸ் மில்டன்.

    இதற்காக ஒரு கிண்ணம் ஓட்ஸ் சாப்பிட்டதும் தனது தனி மருத்துவரான தியோடர் கில்பர்ட் மோரெலை வரவழைப்பாராம்.

    அசாதாரண காக்டெய்ல் மருந்துகளை உட்செலுத்துவதற்காக மருத்துவர் மோரெல் ஹில்டரின் சட்டையின் கைப்பகுதியைச் சுருட்டுவார். அந்த மருந்துகளில் பல இப்போது போதைப் பொருள் என்றும் சட்ட விரோதமானவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று தனது புத்தகத்தில் மில்டன் குறிப்பிடுகிறார்.

  17. டோங்கா: நியூஸிலாந்தில் இருந்து முதல் வெளிநாட்டு உதவி விமானம் தரையிறங்கியது

    டோங்கா நியூஸிலாந்து

    பட மூலாதாரம், NZ DEFENCE FORCE

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கா நாட்டிற்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதலாவது வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை வந்தடைந்துள்ளது.

    அந்த விமான நிலைய ஓடுபாதையில் இருந்து சாம்பலை ஊழியர்கள் அகற்றிய பிறகு, நியூஸிலாந்தின் ராணுவ விமானம் தரையிறங்கியதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அனுப்பிய பிற விமானங்கள் மற்றும் கப்பல்கள் டோங்காவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

    பசிபிக் பிராந்தியத்தில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி அலையால் அந்த தீவின் பல பகுதிகள் சாம்பலால் மூழ்கின.

    அந்த காட்சிகள் கடுமையான சுகாதார அபாயத்தை ஏற்படுத்தியது. சாம்பல் மற்றும் கடல் நீர் புகுந்ததால் தீவுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. எங்கும் அசுத்தமான நீர் நிறைந்திருக்கிறது.

    அங்கு இதுவரை குறைந்தபட்சமாக மூன்று பேர் இறந்துள்ளனர். தகவல் தொடர்புகள் முடங்கியுள்ளன,

    உலகின் பிற பகுதிகளிலிருந்து ஐந்து நாட்களுக்குத் துண்டிக்கப்பட்டிருந்த டோங்கா தற்போதுதான் அதன் உலகளாவிய தொடர்பை மீண்டும் நிறுவத் தொடங்கியுள்ளது.

    முன்னதாக, தலைநகர் நுகுஅலோபாவில் உள்ள விமான நிலைய ஓடுபாதையை அடர்த்தியான சாம்பல் படலம் மூடியதால் விமானங்கள் தரையிறங்குவது தடைபட்டிருந்தது. அந்த நிலை இன்று சீர்படுத்தப்பட்டிருக்கிறது.

  18. விழுப்புரம் அருகே பெரியார் சிலை மீது லாரி மோதியதில் சிலை கீழே விழுந்து சேதம்

    Truck

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, பெரியார் சிலை மீது லாரி மோதியதில் சிலை கீழே விழுந்து சேதம்.

    மகாராஷ்டிராவின் புனே நகரை நோக்கிச் செல்வதற்கு கூகுள் மேப்பை பார்த்து கனரக வாகனத்தை ஓட்டுநர் இயக்கியபோது வழிதவறி தவறான பாதையில் சென்ற லாரி சாலை சந்திப்பு பக்கவாட்டில் இருந்த பெரியார் சிலையின் மீது மோதியதில் அந்த சிலை கீழே விழுந்து முழுவதுமாக சேதமடைந்தது.

    இந்த சம்பவம் காரணமாக லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

    இது குறித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தை தொடர் கொண்டு பிபிசி தமிழ் பேசியபோது, "நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கனரக வாகன ஓட்டுநர் கூகுள் மேப்பில் வழியை ஆராய்ந்து கொண்டே தவறான வழியில் வந்துவிட்டார். நீண்ட கனரக வாகனம் என்பதால் குறுகிய சாலையில் திரும்பும்போது, வாகனத்தின் பின்புறம் தடுத்துள்ளது. இதில் பெரியார் சிலை முழுவதுமாக சேதமடைந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து கை செய்யப்பட்டுள்ளார்," என தெரிவித்தனர்.

  19. பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர்: 'குற்றவாளிகளை மன்னிக்க மாட்டேன்' - கொல்லப்பட்ட இலங்கையரின் மனைவி

    பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

    இந்த விவகாரத்தில் பாகிஸ்தானில் இனவாத கும்பலால் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவரின் சம்பளத் தொகை மற்றும் நிவாரணத் தொகையை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

    இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  20. ஆளுங்கட்சிக்கு எதிராக அன்பழகன் ஆதரவாளர்கள் முழக்கம்

    AIADMK

    அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள், உறவினர் வீடுகள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், அருகேயுள்ள கெரகோடஅள்ளி கிராமத்தில் உள்ள கே.பி. அன்பழகனின் வீட்டில் இன்று காலை 6 மணியிலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் கே.பி. அன்பழகனின் வீட்டிற்கு அருகே உள்ள அன்பழகனின் உறவினர் மாதேஸ் வீடு, இலக்கியம்பட்டியில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் என தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது .

    இதை தவிர சென்னை, சேலம், தெலுங்கானா, உள்ளி்ட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி. அன்பழகன் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்பது இவர் மீதான புகாராகும்.

    மேலும் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி உள்ளிட்ட அவரது குடும்பத்தார் ஐந்து பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்யும் தகவலை கேள்விப்பட்டு கே.பி. அன்பழகன் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

    அங்கே கூடியிருப்பவர்கள் அவ்வப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக கோசமிட்டு ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.