மேற்கு பல்கேரியாவின் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென்று ஏற்பட்ட தீயில் குறைந்தபட்சம் 45 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நேயர்களுக்கு நன்றி!
இத்துடன் இன்றைய நேரலை முடிவடைந்தது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாசை விட்டு பிரிகிறாரா? நெட்டிசன்களின் சந்தேகம்
பட மூலாதாரம், @PRIYANKACHOPR
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தமது சமூக ஊடக கணக்கில் தமது பெயருடன் சேர்க்கப்பட்டிருந்த கணவர் நிக் ஜோனாசின் பெயரை நீக்கியிருப்பது, அவர் விவாகரத்துக்கு தயாராகி வருவதாக ஒரு சந்தேகத்தை சமூக ஊடகங்களில் எழுப்பியிருக்கிறது.
பிரியங்காவின் இந்த செயல், சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் பட்டியலில் அவரது பெயரை சில மணி நேரம் இடம்பெற வைத்தது. இன்று காலையில் தமது இன்ஸ்டாகிராம் கணக்கில் இடம்பெற்ற தமது அழைப்புப் பெயரில் இருந்த கணவர் நிக் ஜோனாசை திடீரென நீக்கி விட்டு 'பிரியங்கா சோப்ரா' என்று மட்டும் அவர் வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் "என்ன உங்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா?" என்று கேள்வி எழுப்பினர். சிலர் அதை ஒரு சந்தேகமாகவே எழுப்பி இடுகைகளை பதிவு செய்திருந்தனர்.
சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு; 4 வீடுகள் தரைமட்டம்
சேலத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு அலுவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான தனியார் குடியிருப்புகள் உள்ளன.
இதில் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜன் என்பவரின் கட்டிடத்தில் கணேசன், பத்மநாபன், கோபி மற்றும் முருகன் ஆகிய நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோபி வீட்டில் அவரது மனைவி ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பத்த வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது .
இதனால் அருகில் இருந்த வீடும், மேல்தளத்தில் இருந்த இரண்டு வீடும் என நான்கு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது .
மேலும் வெடித்து சிதறியதில் சாலையில் இருந்த பால்காரர் மற்றும் அருகில் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீது கற்கள் விழுந்ததில் பலத்த காயமடைந்தனர்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உள்ளிட்ட 12 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து மீட்பு போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜாஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மேலும் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் பூஜாஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர்.
அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 6 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்புத்துறை சிறப்பு அலுவலர் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் கார்த்திக் ராம், எல்லம்மாள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர் .
மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு இருப்பதாகவும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் முடிவிலேயே விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
சிறப்பு எஸ்ஐ பூமிநாதனுக்கு டிஜிபி, ஐஜி, டிஐஜி அஜ்சலி செலுத்தினர்
படக்குறிப்பு, சைலேந்திர பாபு ஐபிஎஸ்
ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டில் அவரது படத்திற்க்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ஐஜி, டிஐஜி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல் துறை இயக்குனர் பூமிநாதனின் இழப்பு பெரிழப்பாக இருக்கிறது. சிறப்பாக காமன்டட் பயிற்சி எடுத்துள்ளார். வீரத்தோடும் விவேகத்தோடும் பணிபுரிந்துள்ளார். 15 கிலோமீட்டர் தூரத்தில் சென்று ஆடு திருடர்களை பிடித்து ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளார்.
திடீரென ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதால் பூமிநாதன் இறந்துள்ளார். தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்குவதாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
1856 ஆண்டிலிருந்து காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம், இறந்த பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து கடமையை காப்பாற்றியுள்ளார். ரோந்து பணியில் செல்பவர்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்லுமாறு அறிவித்துள்ளோம். உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று தெரிவித்துள்ளோம்.
விரைவில் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கும் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். சிறுவர்கள் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பல முயற்சிகள் நடக்கிறது, 52 சிறார் கிளப்புகள் ஆரம்பிப்பதற்கான பண்கள் நடந்து கொண்டிருக்கிறது. கொலையாளி மணிகண்டன் மது அருந்தி இருந்துள்ளார்.
இந்த கொலைக் குற்றத்தில் மூன்று பேர் தான் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை குற்றத்தை ஆதாரத்தின் அடிப்படையில் முழுமையாக புலன் விசாரணை செய்து அதனடிப்படையி உண்மை குற்றவாளிகளை பிடித்துள்ளோம். எனவே சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை. இதில் சந்தேகத்திற்கு இடமின்றி இவர்கள் தான் கொலை செய்துள்ளனர் என தெரிவித்தார்.
இலங்கை கிண்ணியா பகுதியில் படகு விபத்து - மாணவர்கள் உட்பட ஆறு பேர் பலி
பட மூலாதாரம், SL NAVY MEDIA
படக்குறிப்பு, மீட்புப் பணியில் அதிகாரிகள்
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (நவம்பர் 23) காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குறிஞ்சாக்கேணி பகுதியிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். குறித்த படகில் 25 முதல் 30 பேர் வரை பயணித்துள்ளமை, போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், 17 பேர் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் மீட்புப் பணிகளுக்காக 8 கடற்படை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், மீட்புப் பணிகளில் போலீஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்துள்ளனர். குறிஞ்சாக்கேணியையும், கிண்ணியாவையும் இணைக்கும் பகுதியானது, முகத்துவார பகுதியாக காணப்படுகின்றது.
குறிஞ்சாக்கேணி பகுதிக்கும், கிண்ணியா பகுதிக்கும் இடையில் சுமார் 100 மீட்டர் தொலைவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதிகளுக்கு இடையில் பாதை வசதிகள் இல்லாமை காரணமாக, மக்கள் படகு மூலமே தமது நாளாந்தம் நடவடிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே, இந்த படகு கவிழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
பல்கேரியா பேருந்தில் திடீர் தீ - குறைந்தது 45 பேர் பலி
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, பல்கேரியாவின் போஸ்னெக் கிராமம் அருகே பேருந்தில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை
மேற்கு பல்கேரியாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்குப் பிறகு போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோஃப் பிடீவி தனியார் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
நடந்த சம்பவத்தில் ஏழு பேர் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
திங்கட்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியை காவல்துறையினர் சீல் வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாசிடோனியாவின் பிரதமர் ஜோரன் சேவ் ஏற்கெனவே பல்கேரிய பிரதமரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் பற்றி விவாதித்ததாக பிடீவி கூறுகிறது.
வெனிசுவேலா மாகாண தேர்தலில் வென்ற நிகோலஸ் மடுரோ கட்சி - வாழ்த்திய கியூபா, விமர்சித்த அமெரிக்கா
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, தேர்தல் முடிவு, சிறந்த வெற்றி, சிறந்த அறுவடை என்று கூறியிருக்கிறார் அதிபர் மடூரோ
வெனிசுவேலா நாட்டில் மாகாண ஆளுநர்களுக்கான தேர்தலில் அந்நாட்டின் ஆளுங்கட்சியான யுனைடெட் சோசியலிஸ்ட் பார்ட்டி ஆஃப் வெனிசுவேலா, 23 மாகாணங்களில் 20 இடங்களில் வென்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இத்தேர்தலில் 41.8% வாக்குகள் மட்டுமே பதிவானது.
கடந்த நான்கு ஆண்டுகளில் முக்கிய எதிர்கட்சியினர் தேர்தலை புறக்கணிக்காமல் பங்கெடுத்த முதல் தேர்தல் இது ஆகும்.
நிகோலஸ் மடுரோவை ஆதரிக்கும் கியூபா, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவரை வாழ்த்தியது. அமெரிக்காவோ தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடக்கவில்லை என விமர்சித்துள்ளது.
2018ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மடுரோ மீண்டும் அதிபராக தேர்வான போது தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அவரை அதிபராக அங்கீகரிக்க மறுத்தது நினைவுகூரத்தக்கது.
இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி, மணிகண்டன்.