கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகள், குடியிருப்பு பகுதிகள், விவசாயநிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை பார்வையிட மத்திய நிதித்துறை ஆலோசனை குழு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய நீர்வள ஆராய்ச்சி இயக்குநர் ஆர். தங்கமணி, மற்றும் மத்திய எரிசக்திதுறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, மற்றும் ஒருங்கிணைப்பாளராக மத்திய வருவாய் துறை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் கொண்ட மத்திய குழு கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தனர்.
இவர்களின் வருகையையொட்டி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட கண்காட்சியை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்உள்ளிட்ட அதிகாரிகளிடம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
பின்னர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் ஆறுகள் குளங்கள் பயிர்சேதங்கள், உடைப்புகள் போன்றவற்றின் விவரங்களை புகைப்படங்களுடன் மத்திய குழுவினருக்கு விளக்கினார்.
மேலும் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதே போன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர் நேரில் சந்தித்து மனுக்கள் அளித்தார்.
இதனை தொடர்ந்து வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள பிள்ளைபெத்தான் அணைக்கட்டு, நுள்ளிவிளை மற்றும் குமாரகோவில் சானல் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு, வைக்கலூர், பார்த்திப புரம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள பாதிப்பு என 10 இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.