பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் பதவி விலகினார்
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தமது அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து பதவி விலகினார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலை தகவல்களை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை துரைமுருகன், ஏ.வ.வேலுவுடன் கேரள அமைச்சர் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு ஆகியோருடன் கேரள அமைச்சர் அஹமது தேவர் கோவில் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
அமரிந்தர் சிங் பதவி விலகல்: காங்கிரசில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, நவ்ஜோத் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்
பஞ்சாப் மாநில அரசியலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த உள்கட்சி மோதலின் உச்சமாக இன்று முதல்வர் பதவியை கேப்டன் அமரிந்தர் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.
அந்த கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சேர்ந்த நான்கரை ஆண்டுகளில் ஆளும் முதல்வரையே பதவியில் இருந்து விலக வைத்திருக்கிறது சித்துவின் சாதுர்யமான அரசியல் ஆட்டம் என்கிறார்களஅ ஆய்வாளர்கள். இது தொடர்பான சுவாரஸ்யமான பின்னணியை அறிய இங்கே சொடுக்கவும்.
ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியில் ஒரு மாதம்: மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது?
படக்குறிப்பு, ஹைரட்டானில் காவல் பணியில் தாலிபன் போராளிகள்
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி சரியாக ஒரு மாதம் ஆகிறது. இப்போது அங்கு நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், தீவிர பொருளாதார நெருக்கடியையும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.
அங்குள்ள பலதரப்பட்ட மக்களுடன் பேசினார் பிபிசியின் சிக்கந்தர் கெர்மானி. அவர் வழங்கும் களத்தகவலை இந்த செய்தியில் விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பதவி விலகினார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கேப்டன் அமரீந்தர் சிங்.
பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பதவி விலகினார். தமது அமைச்சரவை சகாக்களுடன் அவர் பதவி விலகியதாக முதல்வர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
தமது காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய அதிகாரப் போட்டியை அடுத்து அவர் இந்த முடிவினை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த முடிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பஞ்சாப் காங்கிரசில் இத்தகைய கொந்தளிப்புகள் எழுந்துள்ளன என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை, பிரபுராவ் ஆனந்தன்
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி போடு ரெட்டியபட்டி சேர்ந்தவர் நடராஜன் (57). இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனக்குச் சொந்தமான காலி இடத்தில் அறை அமைத்து இருந்துள்ளார்..
2016ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி, தனது இருப்பிடத்துக்கு அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6 மற்றும் 7 வயதுள்ள 2ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளுக்கு நடராஜ் ஆசை வார்த்தை கூறி இருவருக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் கூறினால் உங்களை கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.இருந்தபோதும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை தங்களுடைய பெற்றோரிடம் சிறுமிகள் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடராஜுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் கைதான நடராஜுக்கு எதிரான வழக்கு சுமார் ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி கே.தனசேகரன் தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் நடராஜுக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கு தலா ரூ. 14 லட்சத்தை நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
ஆளுநர் பதவியேற்பில் பங்கேற்காதது ஏன்? திருமா
தமிழ்நாடு ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
நீட் தேர்வு தமிழக மாணவர்களை பழிவாங்கி கொண்டிருக்கிறது.
எனவே நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டத்திற்கு எதிரான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 20ஆம் தேதி அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது . தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.
நாகலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.
எனவேதான் அவரது நியமனத்தை திரும்பபெற வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்தது. ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது,ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் நான் பங்கேற்கவில்லை அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்து ஆடியது.
இன்றைக்கு அது வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அதிமுகவே அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்ப்பே, விமர்சனமே அவர்களிடம் இருந்து வரவில்லை. கடமையை செய்யும் ஊடகவியலாளர்களை தாக்குவது கண்டத்திற்குரியது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் திமுக உடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . தமிழகத்தில் திமுகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது.
திமுக அரசு என்பதைவிட சமூக நீதி அரசு என்பதே பொருத்தமானது என்று கூறினார்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்: வானதி சீனிவாசன்
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகள் அருகே கோவிட் தடுப்பூசி முகாம்கள் அமைக்கவேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியது:
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் முதன்மையாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, மதுப் பழக்கம் உடைய ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு
பட மூலாதாரம், R.N.Ravi
படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியுடன் ஆர்.என்.ரவி - கோப்புப் படம்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக்கொண்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மத்திய அமைச்சர் எல். முருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்,
பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார்.
இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார்.
உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவல். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது. 2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அல்ஜீரிய முன்னாள் அதிபர் அப்தெலாசீஸ் பொதெஃப்லிகா காலமானார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அப்தெலாசீஸ் பொதெஃப்லிகா
அல்ஜீரியாவின் அரசியலில் ஆறு தசாப்தங்களாக பல பொறுப்புகளில் செயல்பட்டு வந்த மற்றும் நீண்ட காலம் அல்ஜீரிய அதிபராக இருந்த அப்தெலாசீஸ் பொதெஃப்லிகா காலமானார்.1999ஆம் ஆண்டு முதல் 2019 வரை 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவின் அதிபராக இருந்தவர் அப்தெலாசீஸ். 1937 மார்ச் 2ஆம் தேதி மொராக்கோவில் அல்ஜீரிய பெற்றோர்களுக்குப் பிறந்த அப்தெலாசீஸ், சிறு வயதிலேயே நன்கு படிக்கக் கூடியவராக இருந்தார். 19 வயதில் தேசிய விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார்.
அது பிரான்சிடமிருந்து அல்ஜீரியாவை சுதந்திரமடையச் செய்ய போராடி வந்த தேசிய விடுதலை முன்னணி என்கிற அமைப்பின் ராணுவ பிரிவு. 1962ஆம் ஆண்டு வரை ராணுவத்தில் உயர் பொறுப்புகளை வகித்தார்.
1963ஆம் ஆண்டு உலகிலேயே மிக இளம் வயது வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. இன்றுவரை இந்த சாதனை எந்த நாடாலும் முறியடிக்கப்படவில்லை.
1974 - 75 காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராகவும் பதவியிலிருந்தார். இவர் பதவியில் இருந்த போது தான், பாலத்தீன தலைவர் யாசர் அராஃபத் ஐநாவில் பேச அழைக்கப்பட்டார். 1978ஆம் ஆண்டு ஹொரி பொமெடின் நோய்வாய்ப்பட்டு இறந்த பின், அப்தெலாசீஸ் தன் அரசியல் தளத்தை இழந்து தனிமைப்படுத்தப்பட்டார்.பல்வேறு அரசியல் பிரச்சனைகள், உள்நாட்டுப் போர் எல்லாம் கடந்து 1999ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரம் அவர் கைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2008ஆம் ஆண்டு ஒரு நபர் இருமுறை மட்டுமே அதிபர் பதவிக்கு வரமுடியும் என்கிற அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினார். அப்தெலாசீஸின் கடைசி இரு ஆட்சிக் காலங்கள் அவருக்கு அத்தனை இனிதாக அமையவில்லை. நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள், உடல் ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொண்டார். 2013ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தத் தொடங்கினார். 2019ஆம் ஆண்டு மீண்டும் ஐந்தாவது முறையாக அதிபர் தேர்தலில் நிற்க விரும்பினார். அல்ஜீரிய வரலாற்றில் இல்லாத அளவுக்கு அப்தெலாசீஸுக்கு எதிர்ப்பு வந்தது.கடுமையான போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக 2019 ஏப்ரல் 2ஆம் தேதி அப்தெலாசீஸ் தன் அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன் பிறகு பெரும்பாலும் உடல் நலக்கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் அல்ஜீரிய தலைவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் எல் அலியா கல்லறையில் புதைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆப்கன் பெண்கள் விவகார அமைச்சகத்துக்கு பதில் மத கோட்பாடுகளை வலியுறுத்தும் அமைப்பு
ஆப்கானிஸ்தானில் பெண்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் பலகையை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மத கோட்பாடுகளை வலியுறுத்தும் அமைப்பின் பலகையை தாலிபன்கள் வைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இந்த பெயர் பலகை மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில், அவ்வமைச்சகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களை வேலை பார்க்க விடும்படி தாலிபன்களிடம் கோரும் காணொளிகளைக் காணமுடிகிறது.
1990களில் கடுமையான இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் பெண்கள் மீதான கட்டுபாடுகளை இதே அமைச்சகம் தான் செயல்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பெண்கள் போராடி பல அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளனர். தற்போது அதிகாரத்தைக் கைப்பாற்றி இருக்கும் தாலிபன்களின் ஆட்சியில் தங்களின் உரிமைகள் பாதிக்கப்படுமோ என பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆப்கன் மாறிவிட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என உறுதியளித்தனர், ஆனால் கொள்கைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது என பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளர் லைஸ் டாசெட் கூறுகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வணக்கம் நேயர்களே!
தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் தொடர்புடைய இன்றைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.