மனித உரிமை செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் வீடு, அலுவலகம் அவர் தொடர்புடைய ஓர் அமைப்பு ஆகிய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கையை பலரும் கண்டிக்கின்றனர்.
அவர் மீதான மணி லாண்டரிங் எனப்படும் பணப் பரிவர்த்தனை முறைகேடு புகார் தொடர்பான விசாரணைக்காக சோதனை நடத்தியதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் விமர்சகர்களை மிரட்டவும், அமைதியாக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்களும், வழக்குரைஞர்கள் சிலரும் குறிப்பிடுகின்றனர்.
"ஒரு முன்னணி மனித உரிமை மற்றும் அமைதிக்கான செயற்பாட்டாளரை மிரட்டவும், துன்புறுத்தவும் செய்யப்பட்ட இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் நேர்மையையும், உயர்ந்த அற விழுமியங்களையும் கடைபிடித்து அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் வேலை செய்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை," என்று கையெழுத்திட்ட அறிக்கையில் 600க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பொருளியலாளர் ஜீன் ட்ரஜே, பெண்ணுரிமை செயற்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன், சினிமா துறையை சேர்ந்த ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்டோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள சிலர்.
இந்தியத் தலைநகர் டெல்லியில் ஹர்ஷ் மந்தரின் வீடு, அலுவலகம், சமத்துவ ஆராய்ச்சிக்கான மையம், அவரது நிறுவனம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் இல்லம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.