You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

    மகாராஷ்டிரா மற்றும் கேரள ஆகிய மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டுவருவதை எதிர்க்கின்றன.

    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இரண்டு மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களின் அறிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்திற்கு முன்பு வெளிவந்துள்ளன.

    "மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர விரும்புவதாக பேசப்படுகிறது. அது பற்றி எந்த தகவலும் வரவில்லை. தற்போது வரை 30 -32 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி,மகாராஷ்டிரா அரசுக்கு கிடைக்கவில்லை.

    பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரியை குறைக்கலாம். மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீது எந்த தாக்கமும் ஏற்படக்கூடாது," என்று மகாராஷ்டிர மாநில நிதியமைச்சர் அஜீத் பவார் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிராவுக்குப் பிறகு, கேரள அரசும் இந்தப் பிரச்னையில் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

  3. அனபெல் சேதுபதி - விமர்சனம்

    பேயையும் நகைச்சுவையையும் கலந்து Horror - Comedy என்ற பாணியில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த பாணியில் வெளிவந்திருக்கும் ஒரு படம்தான் 'அனபெல் சேதுபதி'.

    இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுவார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகியும் அவளது குடும்பமும் வந்து தங்குகிறார்கள். அங்கே வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அந்த அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதுதான் 'அனபெல் சேதுபதி' படத்தின் கதை.

  4. முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்ப

    முக்கியமான ஆசியா பசிபிக் வணிக உடன்படிக்கையில் சேர விண்ணப்பித்துள்ளது சீனா.

    அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான மறு நாள் இந்த விண்ணப்பத்தை செய்துள்ளது சீனா.

    Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் 'பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டாண்மை ஒப்பந்தம்' அமெரிக்காவால் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.

    ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2017ல் வெளியேறியது அமெரிக்கா. அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கான முடிவை எடுத்தார்.

    இந்த தாராள வணிக ஒப்பந்தத்தில் சேர்வதற்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் விண்ணப்பித்துள்ளது என்று சீன வணிகத்துறை அமைச்சர் வாங் வென்டாவ் தெரிவித்தார். இதற்கான கடிதம் நியூசிலாந்து வணிக அமைச்சர் டேமியன் ஓ கொன்னோருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

  5. இந்தியாவில் ஒரே நாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்தநாளையொட்டி இன்று ஒரே நாளில் 2 கோடி பேருக்கு இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    இதற்கு முன்பு இந்தியாவில் 1.3 கோடி பேருக்குதான் அதிகபட்சமாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

    இந்தியாவில் 2021ஆம் ஆண்டு முடிவுக்குள் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆனால் தடுப்பூசி இயக்கம் ஒரே சீரான வேகத்தில் சென்றால் மட்டுமே இது நிறைவேறும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவில் தடுப்பூசி பெற தகுதியானவர்களில் பாதிபேருக்கும் மேல் அதாவது 588 மில்லியன் மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் தகுதி பெற்றவர்களில் வெறும் 20 சதவீதம் பேருக்கே இரு டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் - கிரிக்கெட் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து

    நியூசிலாந்து அரசு வழங்கிய பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் திட்டத்தை ரத்து செய்துள்ளனர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.

    பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவிருந்தன.

    ராவல்பிண்டியில் வெள்ளியன்று ஒரு போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அடுத்த மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்து அணி வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதால் அந்நாட்டு அரசு மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

  7. ஆப்கன் மக்களை நோக்கி வரும் அடுத்த துயரம்

    மக்களிடம் உணவு கேட்கும் தாலிபன்கள், ஆப்கன் மக்களை தாக்க காத்திருக்கும் கடும் பஞ்சம்.

  8. அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன.

    தற்போது 7ம்கட்ட அகழாய்வுப் மணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது 8அடி ஆழத்தில் ஒரே குழியில் 2அடுக்கு மற்றும் 3அடுக்குகள்கொண்ட அருகே அருகே 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‌ இவ்வாறு கிடைப்பது இதுவே முதன் முறை ஆகும்.இது ஆராய்ச்சியாளர்களிடம் மிகுந்த ‌ஆர்வத்தை‌ ஏற்படுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து அகழாய்வுப் நடத்தும் பட்சத்தில் இதன் அகலம் உயரம் மற்றும் முழு பயன்பாடும் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் அகரத்தில் கிடைத்துள்ள உறை கிணுறுகளை பற்றி ‌தொல்லியல்‌ துறை‌ அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அகரம் இப்போ சிகரம் ஆச்சு என‌ பதிவு செய்துள்ளார்.

    மேலும் தொடர்ந்து கீழடி,கொந்தகை மணலூர் அகரம் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  9. தீவிரமயம் அதிகரிப்பது பல பிரச்சனைகளுக்கு காரணம்: நரேந்திர மோதி பேச்சு

    தீவிரமயம் அதிகரிப்பது பல பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமாகிறது. ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துகொண்டிருப்பது இந்த சவாலை தெளிவாகக் காட்டுகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

    ஷாங்காய் கூட்டுறவு நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மோதி, நிலம் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடுகள் இந்திய சந்தையோடு தொடர்பு கொள்வதன் மூலம் பலன் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

    நரேந்திர மோதி இந்த மாநாட்டில் இணைய வழியில் பங்கேற்றார். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே சென்றுள்ளார். மாநாட்டுக்கு முன்னதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் சந்தித்து எல்லைப் பிரச்சனை உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசினார் ஜெய்சங்கர்.

  10. மனித உரிமை செயற்பாட்டாளர் வீடு, அலுவலகத்தில் ரெய்டு - பெருகும் எதிர்ப்பு

    மனித உரிமை செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் வீடு, அலுவலகம் அவர் தொடர்புடைய ஓர் அமைப்பு ஆகிய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கையை பலரும் கண்டிக்கின்றனர்.

    அவர் மீதான மணி லாண்டரிங் எனப்படும் பணப் பரிவர்த்தனை முறைகேடு புகார் தொடர்பான விசாரணைக்காக சோதனை நடத்தியதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால் விமர்சகர்களை மிரட்டவும், அமைதியாக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்களும், வழக்குரைஞர்கள் சிலரும் குறிப்பிடுகின்றனர்.

    "ஒரு முன்னணி மனித உரிமை மற்றும் அமைதிக்கான செயற்பாட்டாளரை மிரட்டவும், துன்புறுத்தவும் செய்யப்பட்ட இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் நேர்மையையும், உயர்ந்த அற விழுமியங்களையும் கடைபிடித்து அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் வேலை செய்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை," என்று கையெழுத்திட்ட அறிக்கையில் 600க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

    பொருளியலாளர் ஜீன் ட்ரஜே, பெண்ணுரிமை செயற்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன், சினிமா துறையை சேர்ந்த ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்டோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள சிலர்.

    இந்தியத் தலைநகர் டெல்லியில் ஹர்ஷ் மந்தரின் வீடு, அலுவலகம், சமத்துவ ஆராய்ச்சிக்கான மையம், அவரது நிறுவனம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் இல்லம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

  11. காட்டுத் தீயில் இருந்து உலகின் பெரிய மரங்களைக் காக்க போர்வைகளைச் சுற்றிய வீரர்கள்

    கலிபோர்னியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயால் உலகிலேயே மிகப் பெரிய மரங்கள் எரிந்து விடக்கூடாது என்பதற்காக அவற்றின் மீது போர்வைகளைச் சுற்றும் பணியில் தீயணைப்புப் பணியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    தற்போது கலிபோர்னியாவின் சீக்கோயா தேசியப் பூங்காவில் எரிந்துவரும் காட்டுத் தீ அருகேயிருக்கும் பெருங் காட்டைத் தாக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

    இந்தக்காட்டில் 275 அடி உயரம் கொண்ட ஜெனரல் ஷெர்மன் உள்ளிட்ட சுமார் 2,000 சீக்கோயா மரங்கள் இருக்கின்றன.

    தீயை அணைப்பதற்காக ஹெலிகாப்டர்கள், விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன் சுமார் 350 வீரர்கள் போராடி வருகின்றனர். தீயில் இருந்து காப்பதற்காக அலுமினியம் தாள்களைக் கொண்ட போர்வைகளை ஷெர்மன் உள்ளிட்ட முக்கியமான மரங்களில் சுற்றியுள்ளனர்.

    உலகத்தில் இப்போதிருக்கும் மரங்களில் மிகப்பெரிய மரமாக ஜெனரல் ஷெர்மன் கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 2,700.

  12. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்