உலகம் முதல் உள்ளூர் வரை இன்று
சமீபத்திய நிலவரம் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கத்துக்கு செல்லுங்கள்.
கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் ஏழ்மை நிலை அதிகரிக்கப் போவது இதுவே முதல்முறை என ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.
சமீபத்திய நிலவரம் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கத்துக்கு செல்லுங்கள்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
மியான்மரில் அதிக நெரிசலாக இருக்கும் சிறைகளில் கொரோனா தொற்று பரவலாம் என்றஅச்சத்தால் விசாரணைக்காகக் காத்திருந்த 124 ரோஹிஞ்சாமுஸ்லிம்களை விடுவிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர்.
மியான்மரில் நூற்றுக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் குடியமர்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நலம் தேறி வருவதாக பிரதமர் அலுவகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மருத்துவ பணியாளர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால் அவரின் உடல்நலத்தில் இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இப்போது அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த விதமான மருந்தையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சம் பேரைக் கடந்தது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ்பல்கலைக்கழகத் தகவலின்படி இதுவரை கிட்டத்தட்ட 90000 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் 3,37,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 4,32,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக்கொண்ட நாடு அமெரிக்கா. அதன்பின் ஸ்பெயின். இத்தாலி மற்றும் ஜெர்மனி அதற்கு அடுத்த இடங்களில்உள்ளன.
இத்தாலியில்17000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதுவே அதிகப்படியாக உயிரிழந்தவர்களைக் கொண்டநாடு. அதற்கு அடுத்த இடத்தில் 15,000 பேர் ஸ்பெயினில் உயிரிழந்துள்ளனர். ஃபிரான்ஸில்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொட்டது.
மார்ச் மாதம் 12ஆம்தேதி முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல்முறையாக இன்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டவுள்ளார்.
ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின் ட்ரூடோ 14 நாட்கள் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. எனவே அவர் வீட்டிலிருந்தே பணிபுரிய தொடங்கினார்.
அவர் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிவார் ஆனால் ஏதாவது முக்கியமான அரசு கூட்டம் என்றால் தான் நேரில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தொற்றைக் கையாளுவதற்கான அடுத்த கட்டம் குறித்தும், பொருளாதார தாக்கங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,238ஆக அதிகரித்துள்ளது. எனினும் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்பெயின் அரசு, நேற்று (புதன்கிழமை) புதிதாக 6,180 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த சூழ்நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 5,756ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்பெயினில் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று ஸ்பெயினில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஸ்பெயினில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை நீட்டிப்பது தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஸ்பெயினில் நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வர தொடங்கியுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
தற்போது உலகம் முழுவதையும் புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.
பல மாத முடக்க நிலைக்குப் பிறகு அந்த நகரத்திலிருந்து மக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தருணத்தை உள்ளூர் அதிகாரிகள் மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடி வரும் சூழ்நிலையில், மனித குலத்தின் வரலாற்றில் மிகப்பெரிய இந்த முடக்க நிலையை எதிர்கொண்ட மக்கள் வேறுபட்ட பார்வைகளை கொண்டுள்ளனர்.
இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: முடக்கநிலையிலிருந்து மீண்டெழுந்த வுஹான் நகர மக்கள் கூறுவதென்ன?
இந்திய நரேந்திர மோதி இன்று (வியாழக்கிழமை) தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் தொலைபேசி வாயிலாக பேசியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இருநாட்டு தலைவர்களும் கோவிட்-19 நோய்த்தொற்றால் உலகளாவிய சுகாதார அமைப்புகளுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விவாதித்தனர். பெருந்தொற்றுநோயை சமாளிக்க தங்கள் நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 549 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மொத்தம் 166 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 473ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 1,36,000 பேருக்கு கொரோனா வைரஸை உறுதிப்படுத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவல் தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்து மிகவும் அதிகமான பாதிப்பு, நேற்று (புதன்கிழமை) பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் நேற்று மட்டும் புதிதாக 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக நாட்டின் தலைநகர் டோக்கியோவில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் தலைநகர் டோக்கியோ உள்பட பல நகரங்களில் அவசரநிலை உத்தரவு அமலில் உள்ள சூழலில் இந்த தரவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிலிருந்து பைக்கோனூர் காஸ்மோட்ரோம் விண்வெளி மையத்திலிருந்து மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இவர்களில் இருவர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள், ஒருவர் நாசா சார்பாக சென்றுள்ளார்.
உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பால் மிரண்டு போயிருக்கும் நிலையில், “நாங்கள் பூமியின் பாதுகாப்பான இடத்திற்கு செல்கிறோம்” என்று அந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான இவனிஷ் கூறியுள்ளார்.
“அடுத்த மூன்று மாதங்களுக்கு உலகிலே வாழ்வதற்கு பாதுகாப்பான இடமாக சர்வதேச விண்வெளி மையம் இருக்கும்” என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாரா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழப்பது இதுதான் முதல்முறை.
இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மருத்துவர் மரணம்
சர்வதேச வர்த்தகத்தில் இந்த ஆண்டு மிகப்பெரிய சரிவு ஏற்படக்கூடும் என்று உலக வர்த்தக நிறுவனம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக உலக வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த ஆண்டு சர்வதேச வர்த்தகத்தில் 13 முதல் 32 சதவீதம் வரை சரிவு ஏற்படக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில், சர்வதேச வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மையை இது பிரதிபலிப்பதாக உள்ளது.
2008-2009 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலையை விட மிகப்பெரிய அளவில் சர்வதேச வர்த்தகம் இந்த ஆண்டு பாதிக்கப்படக்கூடும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்திருந்த ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும், ரேஷன் பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து இதுவரை 96% பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு குறையாததால் மே மாதம் ரேஷன் பொருட்கள் வழங்கும் போதும், கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பின்னர், தமிழக விவசாயிகள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்தார்.
மேலும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் விளை பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்குகிறது.
கோவிட்-19 நோய்த்தொற்றை உறுதிப்படுத்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் நாட்டுக்கு நாடு வேறுபாடு இருப்பதால், பல நாடுகளின் அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட உண்மையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்றே கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகள்:
அமெரிக்கா 432,132
ஸ்பெயின் 148,220
இத்தாலி 139,422
ஜெர்மனி 113,296
பிரான்ஸ் 83,080
சீனா 82,867
இரான் 64,586
பிரிட்டன் 61,474
துருக்கி 38,226
பெல்ஜியம் 23,403
இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 14,84,811 பேரில் கிட்டத்தட்ட 3,30,000 பேர் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் இதுவரை 88,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் கால்பகுதி மக்கள் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் அடைந்த சில நன்மைகள் என்ன தெரியுமா? - ஒரு நம்பிக்கை பதிவு
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் நடந்த போர் காரணமாக அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இரானுக்கு பல்லாயிரம் மக்கள் தஞ்சமாக நுழைந்தனர்.
இப்போது பாகிஸ்தான், இரான் ஆகிய இரு நாடுகளுமே கோவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதைத்த தொடர்ந்து ஆஃப்கன் மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர்.
எல்லைக் சாவடிகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் இருப்பதால், ஆவணங்களைக் கூட சோதனை செய்ய முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
"கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் 'மரியாதை காப்பு அணிவகுப்பு' அளிக்கப்பட்டது. ஊழியர்கள் சார்பில் மாநகர சுகாதார அலுவலர் சதீஷ் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.