You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் ஜெயின்: அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் இவர் யார்? அவரது அமெரிக்க நிறுவனம் என்ன செய்கிறது?
- ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் பங்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டு, அந்த நிறுவனம் கோடிக் கணக்கில் நஷ்டத்தைச் சந்தித்தது.
- ஹிண்டன்பர்க் நிறுவனம், 88 கேள்விகளை எழுப்பியது.
- அதானி குழுமம் இந்தக் கேள்விகளுக்கு 413 பக்கங்களில் பதிலளித்து இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
- இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணையைக் கோரின.
- அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
அமெரிக்க சொத்து மேலாண்மை நிறுவனமான GQG பார்ட்னர்ஸ், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. GQG பார்ட்னர்ஸ் நிறுவனம், நான்கு அதானி குழும நிறுவனங்களில் 1.87 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது.
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை வெளிவந்ததையடுத்து அதானி குழுமம் கடந்த ஒரு மாதமாக கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
ஜனவரி 24 அன்று, அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.
இருப்பினும், இதற்குப் பிறகும், அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவைப் பதிவு செய்தன, சில நாட்களிலேயே, அந்நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 135 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை சந்தித்தது.
சனிக்கிழமையன்று, மதிப்பீடு அமைப்பான மூடிஸ்-இன் ஒரு பிரிவான ஐசிஆர்ஏ, கௌதம் அதானி குழுமத்தின் துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி வணிகத்தின் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. ஐசிஆர்ஏ , அதானி குழுமத்தின் மதிப்பீட்டை 'நிலையானது' என்பதில் இருந்து 'எதிர்மறை' என மாற்றியுள்ளது.
இருப்பினும், அதானி குழுமத்திற்கு இந்த முதலீட்டின் பலன்கள் நிதி மட்டத்தில் மட்டுமல்ல, நிறுவனத்தின் நற்பெயரை பெறுவதிலும் பங்கு வகிக்கின்றன. அதானி நிறுவனம் மீண்டும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க விரும்புகிறது.
அதானியின் எந்த நிறுவனங்களில் முதலீடு
ஜிக்யூஜி(GQG) பார்ட்னர்ஸ், அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் - 662 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 54 பில்லியன் ரூபாய்) 3.4 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன் லிமிடெட் - 640 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 52 பில்லியன் ரூபாய்) 4.1 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் - 230 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 18 பில்லியன் ரூபாய்) 2.5 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி - 340 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 27 பில்லியன் ரூபாய்) 3.5 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் முதலீடு பற்றிய தகவலையும் பகிரங்கப்படுத்துவது இதுவே முதல் முறை.
இந்தத் தகவல் வெளியானதையடுத்து, வெள்ளிக்கிழமை அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 17.5 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 10 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 5 சதவீதமும் உயர்ந்தன.
அதானி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் கூறுகையில், "அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் முன்னேற்றம், செயல்திறன் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உலகளாவிய முதலீட்டாளர்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதை இந்த முதலீடு காட்டுகிறது." என்றார்.
யார் இந்த ராஜீவ் ஜெயின்?
•ஜி.க்யூ.ஜி(GQG) பார்ட்னர்ஸ் ஒரு அமெரிக்க சொத்து மேலாண்மை நிறுவனம்.
•இந்நிறுவனம் அதானி குழுமத்தில் 1.87 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
• ராஜீவ் ஜெயின் ஜிக்யூஜி பார்ட்னர்ஸின் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ஆவார்.
•அவர் ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் முதலீடுகளை நிர்வகிக்க உத்திகளை வகுக்கும் பிரிவின் மேலாளராகவும் உள்ளார்.
ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் என்பது ஒரு முதலீட்டாளர் நிறுவனமாகும், இது அதன் வாடிக்கையாளர்களின் சார்பாகச் சந்தையில் முதலீடு செய்கிறது.
ஜிக்யூஜி பார்ட்னர்ஸின் லிங்க்ட் இன் சுயவிவரத்தின்படி, இந்நிறுவனம் டிசம்பர் 31, 2022 நிலவரப்படி வாடிக்கையாளர்களுக்காக 88 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கிறது.
இந்த நிறுவனத்தின் தலைமையகம், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் அமைந்துள்ளது. இதன் அலுவலகங்கள் நியூயார்க், லண்டன், சியாட்டில் மற்றும் சிட்னியில் உள்ளன. இந்நிறுவனத்தில் 51 முதல் 200 ஊழியர்கள் வரை பணிபுரிகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்சில் ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ஐபிஓவைக் கொண்டு வந்தது.
ஜிக்யூஜி பார்ட்னர்ஸின் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ராஜீவ் ஜெயின் ஆவார். அவர் ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் முதலீடுகளை நிர்வகிக்க உத்திகளை வகுக்கும் பிரிவின் மேலாளராகவும் உள்ளார்.
ராஜீவ் ஜெயின் இந்தியாவில் பிறந்தவர். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, இவர் அஜ்மீர் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் மயாமி பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ படித்தார்.
இதற்குப் பிறகு, ராஜீவ் ஜெயின் சுவிஸ் வங்கி கார்ப்பரேஷனில் சர்வதேச ஈக்விட்டி ஆய்வாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
ராஜீவ் ஜெயின் லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவர் சுவிஸ் நிறுவனமான வோன்டோபெல் அசெட் மேனேஜ்மென்ட்டில் இணை-தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் பங்குத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவர் 1994 இல் வோன்டோபெலில் சேர்ந்தார்.
23 வருட முதலீட்டு அனுபவத்திற்குப் பிறகு ஜூன் 2016 இல் ஜிக்யூஜி பார்ட்னர்ஸைத் தொடங்கினார்.
ஜிக்யூஜி உலகளவில் 1000 நிறுவன முதலீட்டாளர்களின் சொத்துக்களை நிர்வகிக்கிறது. அதன் வாடிக்கையாளர்களுக்கு நிதி ஆலோசகராகவும் செயல்படுகிறது.
அதானி குழுமம் குறித்து ராஜீவ் ஜெயின் கூறுகையில், இந்த நிறுவனங்களில் நீண்ட கால விரிவாக்கத்திற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.
கெளதம் அதானியைப் பாராட்டிய ராஜீவ் ஜெயின், "அதானி தனது தலைமுறையின் சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் " என்றார்.
பிப்ரவரி 23 அன்று ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் கூட, அதானி மீது வழக்கு இருந்தாலும், இந்திய வங்கி அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக ராஜீவ் ஜெயின் தெரிவித்தார்.
முதலீட்டைப் பொறுத்தமட்டில், சீனாவை விட இந்தியாவின் தரப்பு வலிமையானது என்று நீங்கள் விவரிக்கிறீர்கள் என்றும், அதானி மீதான வழக்குக்குப் பிறகும் இந்தியாவை அதே நிலையை பார்க்கிறீர்களா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து ராஜீவ் ஜெயின் கூறுகையில், "எங்கள் பார்வையில் எதுவும் மாறவில்லை. அதானி வழக்கைப் பார்க்கும்போது, எனது பார்வையில், பல வலுவான புள்ளிகள் உள்ளன. முதலில், வங்கி எக்ஸ்போஷர் சுமார் ஒரு சதவீதம். வங்கி அமைப்பு நன்றாக உள்ளது. இரண்டாவதாக, இவை ஒழுங்குபடுத்தப்பட்ட சொத்துக்கள். அமைப்பின் பார்வை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை." என்றார்.
முதலீடு குறித்த கேள்வி
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக ஜிக்யூஜியிடம் அதன் வாடிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிக்யூஜியின் வாடிக்கையாளரான ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் இந்த முதலீடு குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதிகளில் குறைந்தது நான்கின் சார்பாக ஜிக்யூஜி பணம் திரட்டியுள்ளது.
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் தரவுப் படி, ஜிக்யூஜி பார்ட்னர்ஸின் தலைவரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ராஜீவ் ஜெயின், அதானி குழுமம் குறித்துத் தனது நிறுவனம் ஆழமான விசாரணையை மேற்கொண்டதாகவும், ஹிண்டன்பர்க்கின் அறிக்கையுடன் இது உடன்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
"ராஜீவ் ஜெயினின் முடிவு சிலரை ஜிக்யூஜி-யிலிருந்து விலக்கி வைக்கலாம், ஆனால் அவரது வலுவான செயல்திறனைக் கருத்தில் கொண்டு, சிலர் விரும்பலாம்" என்று ஜிக்யூஜி-யை உள்ளடக்கிய மார்னிங்ஸ்டாரின் ஆய்வாளர் ஷான் லீர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அதானி குழுமம், ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட தகவல்களில், அதானி குழுமம் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களை இறையாண்மை நிதியத்திலிருந்து முதலீடு செய்ததாகக் கூறப்பட்ட ஊடக அறிக்கைகளையும் மறுத்துள்ளது.
அதானி குழுமம் சார்பில், "இந்தச் செய்தி வெறும் வதந்தி என்றும், இது குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அமைத்த குழு
முன்னதாக செவ்வாயன்று, அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு சுயாதீன குழுவை அமைத்தது.
முன்னாள் நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையிலான இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை அடுத்த இரண்டு மாதங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்.
நீதிபதி ஜேபி தியோதர், வங்கி நிபுணர் கேவி காமத், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலேகனி, எஸ்பிஐ முன்னாள் தலைவர் ஓபி பட், பாதுகாப்பு சட்ட நிபுணர் சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்