You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராணுவ வீரர் கொலை: போராட்டத்தில் குதித்த பாஜக - விளக்கம் அளித்த போலீஸ்
கிருஷ்ணகிரி அருகே உள்ளூர் கவுன்சிலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயம் அடைந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி திமுக கவுன்சிலர், ஒரு போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராணுவ வீரர் இறந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு உள்ளூர் பாரதிய ஜனதா கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் வேலம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், திமுகவினர் ராணுவ வீரரை கொல்லும் அளவுக்கு துணிந்து உள்ளனர். ராணுவ வீரருக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாத போது பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்க முடியும்? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் ,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறினார்.
போலீஸ் எச்சரிக்கை
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் செய்தியாளர்களை வியாழக்கிழமை பிற்பகலில் சந்தித்தார்.
"ஒரு கட்சியை சேர்ந்த கவுன்சிலர், ராணுவ வீரரை கொலை செய்து விட்டதாகவும், ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தாக்கியவர்கள், காயம் அடைந்தவர்கள், ராணுவ வீரர்கள். அனைவரும் மிகவும் நெருங்கிய உறவினர்கள். சாதாரண அடிதடி சம்பவம் கொலையில் முடிந்துள்ளது," என்று எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் கூறினார்.
சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், இந்த சம்பவத்தை திட்டமிட்டு கொலை செய்தார்கள் என அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவ்வாறு தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் பிரபு .
பிரபாகரனும், அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.
இதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி திமுக ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.
துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறு
கடந்த 8ஆம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் சின்னசாமி இது குடிநீர் இதில் ஏன் துணிதுவைக்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது
அதற்கு பிரபாகரன் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும் போதே அங்கு வந்த பிரபாகரனின் தாய் எதோ சொல்ல, சின்னசாமிக்கும் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .
இந்த நிலையில் அன்று மாலையில் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குரு சூர்யமூர்த்தி குணாநிதி ராஜபாண்டியன் அங்கு வந்து பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பினர் தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு மற்றும் தந்தை மாதையன் ஆகிய 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது .
ராணுவ வீரர் படுகாயம்
இந்த தாக்குதலில் 3 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர் .அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இது குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி மற்றும் மணிகண்டன் மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன் ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களை போலீஸார் தேடி வந்தனர் .
ராணுவ வீரர் மரணம்
இந்நிலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு நேற்று (14- 02-23 ) மாலையில் இறந்தார்.
இதையடுத்து பிரபுகொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றி தலைமறைவான ஒன்பது சந்தேக நபர்களையும் தேடினர்.
இதில் முதலாவதாக குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன்,வேடியப்பன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் குருசூர்யமூர்த்தி சென்னை மாநகர ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். குணாநிதி கல்லூரி மாணவர் ஆவார்.
இவர்களைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் இன்று கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்