You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துருக்கியில் நிலநடுக்கத்தை தாங்கி நிற்க திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டடங்கள் தரைமட்டமானது ஏன்?
- எழுதியவர், ஜேக் ஹார்ட்டன் & வில்லியம் ஆர்ம்ஸ்ட்ராங்
- பதவி, பிபிசி உண்மை கண்டறியும் குழு & பிபிசி மானிடரிங்
துருக்கியைத் தாக்கிய வலுவான நிலநடுக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அடுமனைகள் (அடுக்குமாடிக் குடியிருப்புகள்) கூட நொருங்கி விழுந்திருப்பது அங்கே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கட்டுமானப் பாதுகாப்பு விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக, வெறும் இடிபாடுகளாக மாறிப்போன மூன்று கட்டடங்களை பிபிசி ஆய்வு செய்தது.
துருக்கியின் தெற்குப் பகுதியிலும், சிரியாவின் வடக்குப் பகுதியிலும் ஏற்பட்ட 7.8 மற்றும் 7.5 அளவிலான நிலநடுக்கம் எல்லாவிதமான கட்டடங்களையும் தரைமட்டமாக்கியுள்ளது; பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போயினர்.
ஆனால், புத்தம்புதிய அடுமனைகள்கூட இடிந்து மண்ணோடு மண்ணாகியிருக்கும் காட்சி, கட்டுமானப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த அவசரமான கேள்வியை எழுப்பியுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டும்போது கட்டடங்கள், இந்த அளவுக்கான நிலநடுக்கத்தைக்கூட தாங்கி நிற்கவேண்டும். இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்படுவதை முந்தைய பேரழிவுகளைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட விதிமுறைகள் உத்தரவாதம் செய்திருக்க வேண்டும்.
இடிந்து விழுந்ததில் ஆராய்வதற்காக பிபிசி அடையாளம் கண்ட மூன்று புதிய கட்டடங்களில் முதல் கட்டடம் இடியும் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அந்த வீடியோவில் மக்கள் கூக்குரல் எழுப்பியபடி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஓடுகிறார்கள்.
மலாட்யா என்ற இடத்தில் இருந்த ஓர் அடுமனைத் தொகுப்பின் கீழ்ப்பாதி அப்படியே நொறுங்குகிறது. மீதிப் பாதி கட்டடம், இடிபாடுகளுக்கு நடுவே சாய்ந்தபடி நிற்கிறது.
இந்த அடுமனைகள் கடந்த ஆண்டு புதிதாகக் கட்டப்பட்டவை. இந்தக் கட்டடம், நிலநடுக்கத்தைத் தாங்குவதற்கான விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் சிலவற்றின் ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருள்கள், செய்நேர்த்தி என அனைத்தும் "முதல் தரமானவை" என்கிறது அந்த விளம்பரம். இந்தக் கட்டுமானத்தை மேற்கொண்ட நிறுவனத்தின் மூல விளம்பரம் தற்போது இணையத்தில் கிடைக்கவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் கிடைக்கும் இந்நிறுவனத்தின் பழைய விளம்பர வீடியோக்கள், இந்நிறுவனத்தின் பழைய விளம்பரங்களை ஒத்தே இருக்கின்றன.
இவை மிகவும் சமீபத்திய கட்டடங்கள் என்பதால், 2018இல் மேம்படுத்தப்பட்ட தரக்கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து இவற்றைக் கட்டியிருக்க வேண்டும். இந்தத் தரக்கட்டுப்பாட்டு விதியின்படி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்திய, வலுவூட்டிய கான்கிரீட்டை கட்டடங்களில் பயன்படுத்தவேண்டும்.
நிலடுக்கத்தின் தாக்கத்தைத் தாங்கி நிற்கும் வகையில் தூண்களும் பீம்களும் பரவியிருக்கும் வகையில் அமைக்கப்படவேண்டும். ஆனால், இடிந்து நொறுங்கிய இந்தக் கட்டடத்தில் என்னவிதமான கட்டுமானத் தரம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.
இஸ்கென்டெருன் மாநகரில் சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு வானுயர்ந்த அடுமனை ஒன்றும், பெரிய அளவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்ததை புகைப்படங்கள் காட்டுகின்றன. அந்த 16 மாடிக் கட்டடம் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் முழுவதும் இடிந்துள்ளது. கட்டடத்தின் ஒரு துண்டு மட்டும் கீற்றாக நிற்கிறது.
சேதமடைந்த கட்டடத்தின் புகைப்படத்தையும், இந்தக் கட்டடத்தைக் கட்டிய நிறுவனம் விளம்பரத்துக்காக முன்பு வெளியிட்டிருந்த புகைப்படத்தையும் பிபிசி ஒப்பிட்டுப் பார்த்தது. இந்தக் கட்டடம் 2019இல் கட்டப்பட்டது. எனவே, புதிய கட்டட தரக்கட்டுப்பாட்டு விதிமுறைப்படி கட்டப்பட்டிருக்கவேண்டும். இந்தக் கட்டடத்தைக் கட்டிய நிறுவனத்தை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
அண்டாக்யா என்ற இடத்தில் எடுக்கப்பட்டு, பிபிசியால் சரிபார்க்கப்பட்ட இன்னொரு படத்தில், 9 மாடி குடியிருப்புக் கட்டடத் தொகுதி மொத்தமாகச் சிதைந்துவிட்டது. இந்தக் கட்டடத்தின் பெயரான Guclu Bahce என்பது இடிந்துபோன கட்டடத் தொகுதியின் முன்புறத்தில் தெளிவாகக் காணப்படுகிறது.
இந்தக் கட்டடத்தின் திறப்பு விழா வீடியோ எங்களுக்குக் கிடைத்தது. இதில் இருந்து இந்தக் கட்டடம் 2019 நவம்பரில் கட்டி முடிக்கப்பட்டது தெரிய வருகிறது.
இந்தக் கட்டடம் அமைந்துள்ள இடம், கட்டுமானத்தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் குக்லு பாஷே திட்டம் மற்றத் திட்டங்களைவிட தனிச் சிறப்பானது என்று திறப்புவிழாவில் இதைக் கட்டிய செர்-அல் நிறுவனத்தின் உரிமையாளர் செர்வெட் அல்தாஸ் கூறுவது வீடியோவில் தெரிகிறது.
பிபிசியின் கேள்விக்குப் பதிலளித்த அல்தாஸ், "ஹடாயில் (தெற்கத்திய மாகாணம். இதன் தலைநகரம்தான் அண்டாக்யா) நான் கட்டிய நூற்றுக்கணக்கான கட்டடங்களில், துரதிருஷ்டவசமாகவும் துயகரகரமாகவும், இரண்டு கட்டடத் தொகுதிகள் இடிந்துவிட்டன," என்றார்.
நகரில் உள்ள ஒரு கட்டடம்கூட பாதிப்பு ஏதும் இல்லாமல் தப்ப முடியாத அளவுக்கு இந்த நிலநடுக்கம் மிகப் பெரிய அளவிலானது என்று கூறிய அவர், "செய்தி அளிப்பது என்ற பெயரில் எப்படி சில ஊடக நிறுவனங்கள் பார்வையை மாற்றி, சில பலிகடாக்களை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன என்பதை வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கிறோம்," என்றார்.
நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏராளமான கட்டடங்கள் இடிந்துவிழுந்த நிலையில், கட்டுமான விதிமுறைகள் என்னவிதமாக இருக்கின்றன என்று துருக்கியில் உள்ள பலர் கேள்வி கேட்கிறார்கள்.
இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததுதான் என்றாலும், முறைப்படி கட்டப்பட்டிருந்தால், கட்டடங்கள் இதையும் தாங்கி இருந்திருக்கவேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
"இந்த நிலநடுக்கத்தின் அதிகபட்ச தீவிரம், கடுமையானது ஆனால், நன்கு கட்டப்பட்ட கட்டடங்களை தரைமட்டம் ஆக்கும் அளவுக்கு வலுவானது அல்ல," என்கிறார் பேராசிரியர் டேவிட் அலெக்சாண்டர். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றும் அவசரகாலத் திட்டமிடல், மேலாண்மை வல்லுநர் இவர்.
"பெரும்பாலான இடங்களில் குலுங்குவது என்பது அதிகபட்ச அளவுக்குக் கீழாகவே இருந்தது. எனவே, இடிந்து விழுந்த ஆயிரக்கணக்கான கட்டடங்களில் கிட்டத்தட்ட எதுவுமே நிலநடுக்கத்தை தாங்கி நிற்பதற்கான குறைந்தபட்சமான விதிகளைக்கூட பின்பற்றவில்லை என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்," என்கிறார் அவர்.
கட்டுமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி
இஸ்மிட் நகரைச் சுற்றி ஏற்பட்ட1999 நிலநடுக்கம் உள்ளிட்ட முந்தைய பேரழிவுகளுக்குப் பிறகு, கட்டுமான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. 1999 நிலநடுக்கத்தில் 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 2018இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தரக்கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சட்டங்கள் சரிவர அமல்படுத்தப்படவில்லை.
"புதிய விதிமுறைகள் வந்தபிறகு அதற்கு ஏற்ப பழைய கட்டுமானங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு சீர்படுத்துவது மிகக் குறைவாகவே நடந்தது. அதுமட்டுமல்ல, புதிய கட்டடங்களிலும் இந்த விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை," என்கிறார் பேராசிரியர் அலெக்சாண்டர்.
25 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிலநடுக்கத்தில் சேதமடைந்த ஒரு கட்டடம், பிறகு, முறையாக வலுப்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டு தற்போது இடிந்து விழுந்துள்ளது என்று பிபிசி மத்தியக் கிழக்கு செய்தியார் டாம் பேட்மேனிடம் உரையாடிய அடனா நகர மக்கள் கூறினர்.
ஜப்பான் எடுத்துக்காட்டு: நிலநடுக்கத்தின் விளைவை குறைப்பது எப்படி?
தீவிர நிலநடுக்க வரலாறு கொண்ட ஜப்பான் போன்ற நாடுகளில் வானுயர்ந்த கட்டடங்களில் நெருக்கமாக வாழும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள். கட்டுமான ஒழுங்குமுறைகள் பேரிடர்களில் இருந்து எப்படி மக்களைப் பாதுகாக்கும் என்பதை இவை காட்டும்.
ஒரு கட்டடத்தின் பயன்பாடு, நிலநடுக்க இடர்ப்பாடு கொண்ட இடத்துக்கு அது எவ்வளவு அருகில் உள்ளது என்பனவற்றைப் பொறுத்து கட்டுமானப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான தேவை மாறுபடும். எளிமையான வலுவூட்டல், மோஷன் டேம்பர்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் அதிர்வுத் தணிப்பான்களை கட்டடம் முழுவதும் அமைப்பது, மொத்த கட்டுமானத்தையும் தரைமீது அமைக்கப்பட்ட ஷாக் அப்சார்பர் எனப்படும் ஒருவித அதிர்வு உறிஞ்சியின் மீது கட்டுவது. இதன் மூலம் அதிரும் வாய்ப்புள்ள தரைக்கும் கட்டுமானத்துக்கும் இடையில் ஓர் இடைவெளியை உருவாக்குவது என்று பலவிதமான பாதுகாப்பு நடைமுறைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.
நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்?
துருக்கியில் அவ்வப்போது, 'கட்டுமான மன்னிப்பு'களை வழங்குவது உண்டு. இதன் மூலம் தேவையான பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் கட்டப்பட்ட கட்டட உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுவதில் இருந்து சட்டபூர்வமாக விலக்குகள் அளிக்கப்பட்டன. பெரிய நிலநடுக்கம் ஏற்படும்போது, இதுபோன்ற விலக்குகளால் பேரழிவைக் கொண்டுவரும் என்று விமர்சகர்கள் கூறிவந்தனர்.
தெற்கு துருக்கியில் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதியில் இதுபோல் 75 ஆயிரம் கட்டடங்கள் வரை கட்டுமானப் பிழைகளுக்கான மன்னிப்பு பெற்றவை என்கிறார் பெலின் பினார் கிரிட்லியோக்ளு. துருக்கி பொறியாளர் சேம்பர்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளர்கள் சேம்பர்களின் ஒன்றியத்தின் இஸ்தான்புல் பிரிவு தலைவராக உள்ளார் இவர்.
சமீப காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கும்கூட இப்படிப்பட்ட மன்னிப்பை வழங்குவதற்கான புதிய சட்ட முன்வடிவு ஒன்று நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக சமீபத்திய நிலநடுக்கத்துக்கு சில நாள்களுக்கு முன்பு துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நிலநடுக்க அபாயம் மிகுந்த ஒரு நாட்டில் இத்தகைய கட்டுமான மன்னிப்புகள் குற்றத்துக்கு ஒப்பானவை என்று கூறியிருந்தார் மண்ணியல் வல்லுநர் செலால் செங்கார்.
2020இல் மேற்கு மாகானமான இஸ்மிரில் நடந்த ஒரு மோசமான நிலநடுக்கத்துக்குப் பிறகு, இஸ்மிரில் 6.72 லட்சம் கட்டடங்களுக்கு மிக சமீபத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டிருந்த விஷயத்தை பிபிசி துருக்கி சேவை கண்டறிந்து செய்தியாக்கியது.
2018 அளவில் துருக்கியில் இருந்த மொத்த கட்டடங்களில் பாதி விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டவை என்றும், எண்ணிக்கையில் பார்த்தால் இது 1.3 கோடி கட்டடங்கள் என்றும் சுற்றுச்சூழல், நகரமயமாக்கல் அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அதே செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்கள் நிர்வாகத்தால் கட்டப்பட்ட ஒரு கட்டடம்கூட இடிந்து விழவில்லை என்றும், களத்தில் சேதார மதிப்பீட்டு ஆய்வுகள் விரைவாக நடந்து வருவதாகவும் அந்த அமைச்சகம் சமீபத்திய நிலநடுக்கம் குறித்துக் கூறியிருந்தது.
கூடுதல் செய்தி சேகரிப்பு: ஒல்கா ஸ்மிர்னோவா, அலெக்ஸ் முர்ரே, ரிச்சர்ட் இர்வைன்-பிரௌன், திலாய் யால்சின்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்