You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலவசமாக தற்காப்புக் கலை பயிற்சி: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சொல்லித் தந்த விஜயலட்சுமி
- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"பெண் என்றாலே மென்மையாளவள், பூப்போன்றவள் என்பதைதான் இந்த சமூகம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால் அது அப்படி கிடையாது. உங்கள் அனுமதி இல்லாமல் ஒருவர் தொட்டால் அதற்கு நீங்கள் வலிமையுடன் எதிர்வினையாற்ற வேண்டும். துணிச்சல் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குள் இருக்கும் திறன். தற்காப்பு படி தொடறவனை அடி, இது தான் என் தாரக மந்திரம் " என உறுதியாக சொல்கிறார் விஜயலட்சுமி.
சென்னை மதுரவாயலை சேர்ந்த விஜயலட்சுமி, பெண்களுக்கு தற்காப்பு கலை சொல்லி தரும் பள்ளியை நடத்தி வருகிறார். இதுவரை தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று கிட்டத்தட்ட 5000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகவே தற்காப்பு கலையை கற்றுத் தந்துள்ளார் விஜயலட்சுமி.
"எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. நான் அங்குதான் பிறந்தேன். ஆனால் நான் தூத்துக்குடியில் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தேன். என்னுடைய அப்பா மற்றும் அம்மா வழி தாத்தாக்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். அவர்கள் மூலமாகத்தான் தற்காப்பு கலையின் மீது ஆர்வம் வந்தது. நான் சிறுவயதாக இருக்கும் போது என்னுடைய தம்பிக்கு வீட்டுக்கு வந்து தற்காப்பு கலை கற்றுத்தருவார்கள். ஆனால் நான் பெண் என்பதால் எனக்கு முதலில் தற்காப்பு கலையை கற்றுத்தரவில்லை. ஆனால் நான் அவர்களை விடவில்லை. எனக்கு தற்காப்பு கலையை சொல்லித் தாருங்கள் என வற்புறுத்திக் கொண்டே இருந்தேன். அதனால் பாவம் பார்த்து என்னுடைய தாத்தா ஒரே முறை தற்காப்பு முறையை சொல்லிக் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டே நான் பெருமையாக அதை அனைவரிடத்திலும் செய்து காண்பிப்பேன் " என பெருமையுடன் கூறினார்.
சிறுவயதில் ஒரே ஒரு தற்காப்பு கலையை கற்றுக் கண்டாலும் நாள் போக போக அதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால் விஜயலட்சுமியின் தாயார் அவருக்கு பாட்டு மற்றும் பரதத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அதை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற தாகம் அவருக்குள் தீராமல் இருந்து கொண்டே இருந்தது.
"படிப்பு முடித்ததும் எனக்கு திருமணம் செய்து விட்டார்கள். அதன் பிறகு குடும்பம் , குழந்தை என்று என்னுடைய வாழ்க்கை அதன் வழியிலேயே பயணித்து கொண்டே இருந்தேன். ஒரு தொழில்முனைவோராக என்னை மேம்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டேன். குழந்தைகள் சிறியவர்களாக இருந்தால் அவர்களை பார்த்துக் கொண்டே வீட்டிலேயே குழந்தைகளுக்கு பரதநாட்டிய வகுப்புகள் நடத்தினேன். அப்போதும் எனக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் துளிர்த்துக் கொண்டே இருந்தது. அதையும் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்" என ஆர்வமாக கூறினார் விஜயலட்சுமி.
42 வயதில் ஒரு புறம் குடும்பத்தை கவனித்துக் கொண்டே மறுபுறம் தான் கற்ற தற்காப்பு கலையை பெண்களுக்கு சொல்லி தரத்தொடங்கினார் விஜயலட்சுமி. 5 வருடங்களாக பெண்களுக்கு தற்காப்பு கலையை சொல்லித்தருவதற்காக தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களுக்கு பயணம் செய்து வரும் இவர், குறிப்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி தற்காப்பு பலையை பயிற்றுவிக்கிறார். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 5000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலையை சொல்லித்தந்திருக்கிறார் விஜயலட்சுமி.
" முதன்முதலில் நான் தற்காப்பு கலையை சொல்லிக் கொடுக்கும்போது பெண்கள் மிகவும் தயங்கினார்கள். தற்காப்பு கலை என்பது ஆண்களுக்கனதுதானே என்றும் சொன்னார்கள். அதன்பிறகு தற்காப்பு கலையின் அவசியம் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் மாணவிகளிடம் எடுத்துச் சொல்ல, அவர்கள் புரிந்து கொண்டார்கள். முதலில் குறைவான மாணவிகளே பயிற்சிக்கு வந்து சேர்ந்தார்கள். அதன் பின்னர் தற்காப்பு கலையின் அவசியத்தை புரிந்து கொண்டு பெற்றோர் வாய்மொழியாக பலபேருக்கு சொல்ல அதன் பின்னர் மாணவிகளின் வருகை படிப்படியாக அதிகரித்தது " என்கிறார் விஜயலட்சுமி.
இவரிடம் தற்காப்பு பயிலும் மாணவிகளுக்கு இரண்டு விஷயங்களை வலியுறுத்துகிறார். ஒன்று, உங்களை உங்கள் அனுமதி இல்லாமல் யாராவது தொட்டால் முதலில் அந்த இடத்தில் இருந்து கத்துங்கள். யாரையாவது உதவிக்கு அழையுங்கள். கத்துவது அசிங்கம் என்று நினைக்காதீர்கள். உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் உங்கள் உடலை தொடுவதற்கு அனுமதி கிடையாது.
இரண்டாவது விஷயம், யாராவது உங்கள் அனுமதியை மீறி உங்கள் உடலை தொட்டால் அடித்து விடுங்கள். அடித்த பிறகு உங்களுக்கு பிரச்சனை ஏதாவது வருமோ என்று பயப்படாதீர்கள். அடித்த உடன் எனக்கு தொலைபேசியில் அழையுங்கள். அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். அப்படி பல மாணவிகள், தங்களிடம் சீண்டலில் ஈடுபட்ட ஆண்களை அடித்து விட்டு இவருக்கு தொலைபேசி மூலம் அழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டரீதியாகவும் உதவிகளை வழங்கியிருக்கிறார் விஜயலட்சுமி. இதனால் பெற்றோர்களும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
"தற்காப்பு கலையின் அவசியத்தை உணர்த்துவதற்காக " அக்னிதேவதை " என்ற குறும்படத்தை இயக்கினேன். அந்த குறும்படம் அனைத்து மொழியினரும் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. அந்த குறும்படத்தை இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள் . பல பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் அந்த குறும்படத்தை பார்த்து விட்டு தங்கள் குழந்தைகளை என்னிடம் தற்காப்பு பயிற்சிக்கு அனுப்பி வைத்திருக்கிர்கள் என்கிறார் விஜயலட்சுமி.
அதேபோல் இந்த தற்காப்பு கலையை கற்று கொள்ளும் பெண்களுக்கு அந்த கலை ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. வீட்டில் இருந்து வெளியே வரும் பெண்களுக்கு இந்த உலகத்தை அணுகும் கூடுதல் தைரியத்தை அது கொடுக்கிறது. யாராவது தன்னை வேண்டுமென்றே சீண்டினால் முதலில் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு பாதுகாப்பான உணர்வை அது கொடுக்கிறது என்று சொல்கிறார் விஜயலட்சுமியிடம் தற்காப்பு கலையை பயிலும் மாணவியின் அம்மாவான காஞ்சனா.
" என்னுடைய பெண் மிகவும் கூச்சசுபாவம் உடையவள். யாரிடும் பேசத் தயங்குவாள். அதே போல் எதேற்கெடுத்தாலும் பயப்படுவாள். ஒரு நாள் விஜயலட்சுமி மேடம் தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கிறார் என்று தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அங்கு என் பெண்ணை தற்காப்பு கலை வகுப்பில் சேர்த்தேன். ஆரம்பத்தில் பயந்தவள் இன்று தைரியமாக அனைவரையும் எதிர்கொள்கிறார். எங்கும் பயப்படாமல் சென்று வருகிறாள். எனக்கும் தைரியமாக இருக்கிறது" என்கிறார் காஞ்சனா.
இப்படி பல பெற்றோர்களின் நம்பிக்கையை சம்பாதித்து இருக்கிறார் விஜயலட்சுமி. இவருக்கு இன்னும் மிகப்பெரிய கனவு இருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 10 லட்சம் பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலையை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அந்த கனவை நோக்கிதான் இவருடைய பயணமும் அமைந்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்