You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் பயனாளிகளுக்கு உண்மையில் கைகொடுக்கிறதா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
திருவள்ளூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, பள்ளிக்கல்வியை முழுமையாக அரசுப்பள்ளியில் முடித்தவர். பெற்றோர் விவசாயிக்கூலிகளாக உள்ளனர். அதனால் கல்லூரி படிப்பிற்குச் செலவாகும் பணத்தை எப்படி சேர்ப்பது என்று தவித்துக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்த புதுமைப்பெண் திட்டம் தனக்கு கைகொடுத்தது என்கிறார் மகாலட்சுமி.
புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளியில் படித்த பெண்கள் கல்லூரி படிப்பிற்குச் செல்லும்போது மாதம் ரூ.1,000 உதவித்தொகையை அளிக்கும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதோடு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற சலுகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு சலுகைகள் இருப்பதால், மகாலட்சுமி பெற்றோரிடம் பணத்தை எதிர்பாராமல், நல்ல மதிப்பெண்கள் பெற்று, அரசு கல்லூரியில் பி.காம் சேர்ந்து தற்போது புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகையும் பெறத் தொடங்கியுள்ளார்.
''கல்லூரி படிப்பை நான் படிப்பேனா என்ற சந்தேகம் இருந்தது. எங்கள் குடும்பம் நடுத்தரக்குடும்பம் கூட இல்லை. பெற்றோர் இருவரும் விவசாயிக்கூலியாக இருப்பதால், அவர்களின் தினசரி வருமானத்தை நம்பிதான் எங்கள் அன்றாட வாழக்கை அமைந்திருக்கும்.
இதில், கல்லூரி படிப்பு, அதுவும் மூன்று ஆண்டுகளுக்குச் செலவாகும் பணத்தைப் பெற்றோர் கட்டமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. நானும் அவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணமும் இருந்தது.
12ஆம் வகுப்பில் 411/600 மதிப்பெண்கள் பெற்றதால், எனக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது. இலவச பேருந்து வசதி இருப்பதால், நான் கல்லூரி சென்று வரும் செலவும் இல்லை. தற்போது மாதம் அரசின் உதவித்தொகையாக ரூ.1,000 கிடைக்கும் என்பதால், எனக்கான நோட்டு, புத்தகங்கள் வாங்குவதற்கும் பிரச்னை இல்லை. என் கல்லூரிப் படிப்பை தன்னம்பிக்கையுடன் படிக்கிறேன்,'''என்கிறார் மகாலட்சுமி.
தனது தம்பி தேவேந்திரனும் அரசுப்பள்ளியில் படிப்பதாகக் குறிப்பிட்ட மகாலட்சுமி, பட்டப்படிப்பு முடித்து, பட்ட மேற்படிப்பு படித்து, வேலைக்குச் செல்வதில் முனைப்புடன் இருப்பதாகக் கூறுகிறார்.
''எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி நானாக இருப்பேன். என் பெற்றோரின் தலைமுறையில் முதல் பட்டதாரி பெண்ணாக நான்தான் இருப்பேன் என்பதில் மகிழ்ச்சி,''என்கிறார் மகாலட்சுமி.
திருவள்ளூரைச் சேர்ந்த மகாலட்சுமி, புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களில் ஒருவர்.
மகாலட்சுமியைப் போல, புதுமைப் பெண் திட்டத்தால் முதல் கட்டமாக, 1,16,342 மாணவிகள் கடந்த ஒரு வருடமாக பயனடைந்து வருவதாகவும், திருவள்ளூரில் தொடங்கிவைக்கப்பட்ட இரண்டாம் கட்டம் மூலமாக, மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 மாதங்களில் 69.44 கோடி ரூபாய் அரசின் சார்பில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூரில் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை 27 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
குடும்பச் சூழல், வறுமை காரணமாக படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தொடங்கப்பட்ட திட்டம்தான் புதுமைப்பெண் திட்டம் என்றும் தெரிவித்தார்.
"ஒரு விஷயம் கவலை தருகிறது"
ஆனால் புதுமைப்பெண் திட்டத்தில் பல லட்சம் பெண்கள் பயனடைந்ததாகக் கூறினாலும், ஏழைப் பெண்கள் பலருக்கும் உதவிய திருமண உதவித்திட்டம் நிறுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் பி.சுகந்தி.
புதுமைப்பெண் திட்டம் வரவேற்கவேண்டிய திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றபோதும், திருமண உதவித்திட்டம் மூலமாக தரப்பட்ட நிதியுதவி மற்றும் ஒரு சவரன் தங்கம் பல குடும்பங்களுக்கு உதவியது என்கிறார் அவர்.
''புதுமைப்பெண் திட்டத்தில் ஒரு மாணவிக்கு அதிகபட்சமாகக் கல்லூரி படிக்கும்போது, மூன்று ஆண்டுகளில் ரூ.36,000தான் தரப்படுகிறது. ஆனால் திருமணஉதவித்திட்டத்தில், பட்டதாரி பெண்ணுக்கு ரூ.25,00வரை நிதியுதவி மற்றும் ஒரு சவரன் தங்கம் கிடைத்தது. திருமண உதவித்திட்டத்தை நிறுத்திவிட்டு, புதுமைப்பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால், இரண்டு திட்டங்களும் செயல்பாட்டிலிருந்தால் பல லட்சம் ஏழைப் பெண்களுக்கு உதவியாக இருக்கும்,''என்கிறார் சுகந்தி.
புதுமைப்பெண் திட்டம் என்பது என்ன?
இந்த திட்டம் பெண் குழந்தைகள் கல்வியில் இடையில் நிற்பதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சில இடங்களில் அவர்களின் பதின்ம வயதில் திருமணம் நடைபெறும். அதை தடுப்பதற்கும் இந்த திட்டம் உதவும். ஒவ்வொரு மாணவிகளிடமும் ஒவ்வொரு திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெறும் மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பெறும் மாணவிகள் இணையதளம் வாயிலாக இந்த உதவி தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்