You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காசி - தமிழ் சங்கமம் நடத்தப்படுவது அரசியலுக்காகவா அரசு நிகழ்வுக்காகவா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்பை உறுதிப்படுத்தவும், அதை மீண்டும் கண்டந்து புதிய தலைமுறையிடம் சேர்க்கவும் 'காசி தமிழ் சங்கமம்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளதாக இந்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதன் உண்மையான நோக்கம் குறித்து பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் அதை புரிந்து கொள்ள முற்படுகிறது இந்த கட்டுரை.
இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நேரத்தில், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருத்துக்கு இந்த திட்டம் வலுவூட்டும் என்றும் பழமையான மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திடும் பணியாக இந்த திட்டம் அமையும் என்று இந்திய கல்வி அமைச்சகம் கூறுகிறது.
ஆனால் இந்த திட்டத்தால் தமிழ் மொழி வளர்ச்சியை விட சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடிக்கும் போக்குதான் அதிகரிப்பதாக எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கின்றன.
காசி தமிழ் சங்கமம் திட்டம் என்பது என்ன?
இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காசி தமிழ் சங்கமம் மூலம் ஒரு மாத காலத்துக்கு இன்றைய வாரணாசியான காசியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
அறிஞர்கள் இடையே கல்வி ஞான பரிமாற்றங்கள் - கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவை இந்த சங்கத்தின் அங்கமாக நடைபெறும் என்று செய்திக்குறிப்பு கூறுகிறது.
காசியில் உள்ள வர்த்தகம், ஆன்மிக தலங்களை பார்வையிடுதல், கர்நாடக சங்கீதம், கிராமிய கலைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள இணைப்புகள், இரண்டு பகுதிகளின் பாரம்பரிய அறிவு, கலை, தொழில், விவாதங்கள், கருத்துரைகள்,வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் உரைகள் நிகழ்த்தப்படும்.
சங்கமத்தின் முடிவில், தமிழ்நாட்டு மக்கள் காசியின் ஆழமான அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் அதுபோல காசி மக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், வருகைகள், உரையாடல்கள் போன்றவற்றின் ஆரோக்கியமான அறிவுப்பகிர் அனுபவங்களின் பரிமாற்றத்தின் மூலம், தமிழகத்தின் கலாசார செழுமையை அறிந்து கொள்வார்கள் என்றும் இந்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிகழ்வை நடத்துவது யார்?
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அறிவுசார் ஒருங்கிணைப்பாளராகவும், சுதந்திர இந்தியாவின் அமுத பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுக்கு மத்திய கல்வி அமைச்சகம் பொறுப்பேற்று ஒரு மாத நிகழ்வை நடத்தும்.
பங்கேற்பவர்கள் யார்?
இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு https://kashitamil.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 210 பேர் ஒரு குழுவாக 8 நாட்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். சுமார் 2500 பேர் கொண்ட அத்தகைய 12 குழுக்கள் ஒரு மாத காலத்திற்கு காசியில் தங்கியிருந்து நிகழ்வில் பங்கேற்கும்.
இணையத்தில் பதிவு செய்யபவர்களில் இருந்து 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பங்கேற்பாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களின் பயணச் செலவு, தங்கும் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.
வழக்கமான ரயில்களுடன் இணைக்கப்பட்ட சிறப்பு ரயில் பெட்டிகளில் - ராமேஸ்வரம் , சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று நகரங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் குழுக்கள் புறப்படும்.
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும்என்ன தொடர்பு?
தொல்லியலாளர் பத்மாவதியிடம் பேசுகையில், 10ஆம் நூற்றாண்டு காலம் தொட்டே காசிக்கும், தமிழநாட்டுக்கும் தொடர்புகள் இருந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் கிடைக்கின்றன என்கிறார்.
''சோழர்காலத்தில் வாரணாசி மடம் என்ற பெயரை குறிப்பிட்டு எழுதப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காசி என்ற பெயர் கொண்ட ஊர்களும் இங்கு உண்டு. காசியில் தமிழ் மக்கள் இன்றளவும் வாழ்கிறார்கள். காசி விஸ்வநாதர் கோவிலுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்,''என்கிறார்.
மேலும், "ஆன்மிக பயணமாக வடநாட்டில் இருப்பவர்கள் ராமேஸ்வரத்திற்கு வருவதும், தென்னாட்டில் இருப்பவர்கள் காசிக்கு செல்வதும் இன்றும் நீடிக்கும் ஒரு பழக்கமாக உள்ளது. இந்த பயணம் தொன்றுதொட்டு நடந்து வந்தது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன," என்கிறார் அவர்.
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ மதத்தை பின்பற்றிய புலவர் குமரகுருபரர், தமிழகத்தில் இருந்து காசிக்கு சென்று மடம் அமைத்தவர். பிற்காலத்தில் அந்த மடம் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பட்டாலும் அதனை காசி மடம் என்று அழைக்கும் சொல்லாடல் தற்போதும் நீடிக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
எதிர்ப்புக்கான காரணம் என்ன?
தற்போது காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடத்தப்படுவதற்கான தேவை குறித்து பேசிய பேராசிரியர் அருணன், ''தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு குறைந்தபாடில்லை. அதனை தணிப்பதற்கு தமிழ் மொழியை சிறப்பிக்கும் தோற்றத்தை பாஜக உருவாக்குகிறது. பாரதிய பாஷா சமிதி என்பது இந்திய மொழிகளை வளர்த்தெடுப்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு. தமிழ் மொழியை வளர்க்கும் நிகழ்வு, தமிழ் பண்பாட்டை உயர்த்தும் நிகழ்வாக பாஷா சமிதி இந்த திட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தால், அதனை தமிழகத்தில் நடத்தியிருக்கலாம்.
சமஸ்கிருதத்தின் பீடமாக கருதப்படும் காசியில் ஏன் நிகழ்வை நடத்த வேண்டும் என்பது பேராசிரியர் அருணனின் கேள்வி.
அத்துடன், இந்த நிகழ்வில் இந்து மதத்தின் ஆன்மிக தலைமையகமாக கருதப்படும் காசியில் நடத்துவதால் கிடைக்கும் பயனை விட, தமிழ்நாட்டின் கீழடியில் நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்,'' என்கிறார்.
மேலும், "தமிழ் மொழி, பண்பாட்டின் சிறப்பை உலகம் முழுவதும் உணர்த்த, காசியை தேர்வு செய்வது என்பது பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகதான்," என்கிறார் அருணன்.
''இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்த நிகழ்வை நடத்துவதாக இருந்தால், ஏன் 'இந்து மத நகரமாக' அறியப்படும் காசியில் நடத்த வேண்டும்? அவ்வாறு நடத்தினால், தமிழகத்திற்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பை அறிவதை போல, தமிழகத்திற்கும் கிறித்தவ மதத்தின் தலைமையாக கருதப்படும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள தொடர்பு, இஸ்லாமிய மதத்தின் முக்கியத்தலமான மெக்காவுக்கும் உள்ள தொடர்பு என பிற நகரங்களையும் சேர்க்க வேண்டும் தானே? அங்கும் தமிழ் மொழியின் தாக்கம் இருப்பதற்கான வரலாற்று ரீதியான ஆய்வுகள் உள்ளதா என அறிய வேண்டும் தானே?'' என்கிறார் பேராசிரியர் அருணன்.
"தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைக்க விரும்பினால், மத்திய அரசு கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்ட இடங்களின் அறிக்கைகளை வெளியிட்டு, இந்திய வரலாற்றின் வரிசையை ஹரப்பா, மொகஞ்சதாரோவில் இருந்து தொடங்காமல், தமிழகத்தில் இருந்து தொடங்கிகிறது என்று அறிவிக்கட்டும்," என்கிறார் அவர்.
பனாரஸ் இந்து பல்கலைகழகம் என்ன சொல்கிறது?
காசி தமிழ் சங்கமத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழத்தின் பங்கு இருப்பதாக அரசின் செய்தி குறிப்பு தெரிவித்தாலும், அங்குள்ள இந்திய மொழிகள் துறை ஆசிரியர்களிடம் இந்த நிகழ்வு குறித்து கேட்டோம்.
ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் ஒருவர், ''இதுவரை அதிகாரபூர்வமாக எங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. எங்களின் பங்களிப்பு என்ன என்றும் தெரியவில்லை. ஒரு மாதம் இங்கு நிகழ்வுகள் நடக்கும் என செய்திகளில் வந்த தகவல்கள் மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். நாங்கள் எந்த வகையில் இந்த நிகழ்வில் பங்கேற்கப்போம் என்று தெரியவில்லை. இந்த நிகழ்வு முழுமையாக அரசு நிகழ்வாக இல்லாமல், அரசியல் நிகழ்வாகத்தான் நடத்தப்படுகிறது,'' என்கிறார்.
பனாரஸ் பல்கலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு குறித்த முன்னெடுப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் சென்னையில் உள்ள ஐஐடியில் தான் தொடக்கவிழா நடைபெற்றது என்றும் கூறுகிறார் அந்த பேராசிரியர். '
'ஐஐடி நிர்வாகம் காசி தமிழ் சங்கமத்திற்கான இணைய தளத்தை உருவாகியுள்ளது. இந்த நிகழ்வில் 12 குழுக்கள் உருவாக்கப்பட்டு, இதில் பங்கெடுக்க நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நடவடிக்கைகள் எதிலும் எங்களுடைய கருத்துக்கள் கேட்கப்படவில்லை,'' என்கிறார் அந்த பேராசிரியர்.
காசி தமிழ் சங்கமம் அரசியல் நிகழ்வா?
பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் தேவை குறித்து கேட்டபோது, ''இந்திய சுதந்திரத்தை கொண்டாடும் போது, பல மொழிகள் பேசினாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை தன்மையை மேலும் ஊக்குவிக்க நடக்கும் நிகழ்வுகளில் காசி தமிழ் சங்கமமும் ஒன்றாகும்," என்கிறார்.
"இந்த நிகழ்வில் பங்குபெறும் 2,500 நபர்களும் ஒற்றுமை தூதுவர்களாக செயல்படுவார்கள். காசியில் உள்ளவர்கள் தமிழகத்தின் பெருமையை அறிந்துகொள்ளவர்கள். தமிழர்கள் காசிக்கு நேரடியாக சென்று அங்குள்ள அனுபவத்தை பெறுவார்கள் என்பதால், இரு பகுதிகளில் உள்ள மக்கள் ஒற்றுமையை உணர்வார்கள். தமிழ்மொழியின் சிறப்பை மெருகேத்தும் நிகழ்வாக இது அமைகிறது,'' என்கிறார் அவர்.
காசியில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுவது குறித்து கேட்டபோது, ''தமிழத்திற்கும் காசிக்கும் உள்ள பாரம்பரிய தொடர்பை இன்றைய தலைமுறையிடம் கொண்டுசேர்க்க போகிறோம். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இந்த நகரம் ஒரு நெருங்கிய நகரம் என்ற உணர்வு தொன்றுதொட்டு இருக்கிறது. நாங்கள் புதிதாக எதையும் சொல்லவில்லை. ஆன்மிகவாதிகள் மட்டுமல்ல, நாத்திகவாதியான ஈவெரா பெரியார் கூட தன்னுடைய வாழ்நாளில் ஒரு சில மாதங்கள் காசியில் கழித்துள்ளார் என்பது வரலாறு என்பதை இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் பலரும் அறிந்தவர்கள்தான். அரசியல் ஆதாயத்திற்காக பேசுபவர்கள் நாங்கள் அல்ல. மொழி அரசியல் செய்பவர்கள் திமுகவினர்தான்,''என்கிறார் நாராயணன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்