You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை கார் வெடிப்பு சம்பவம்: அண்ணாமலையின் புதிய குற்றச்சாட்டு, கைதானவர்கள் மீது போலீஸ் போட்ட புதிய வழக்கு - சமீபத்திய தகவல்கள்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் மீது ஏற்கெனவே பதிவான முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்ற சட்டப்பிரிவுகளுடன் கூடுதலாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 23ஆம் தேதி அதிகாலையில் உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு மாருதி 800 வாகனம் 2 எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களோடு கோவிலின் அருகே நான்கு மணி அளவில் வெடித்தது. அதில் வாகனத்தை ஒட்டி வந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த முபின் என்பவர் தீக்காயங்களோடு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்," என்று கூறினார்.
நடந்த சம்பவம் குறித்து கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் உதவி ஆணையர் புலன் விசாரணை செய்து வந்த நிலையில் சம்பவ பகுதியை போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு சேகரிக்கப்பட்ட தடயங்கள் தொடர்பாக தடயவியல் குழு உதவியுடன் அறிவியல் பூர்வ விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் உயிரிழந்தவரின் அடையாளம் கண்டறியப்பட்டு தீயில் கருகிய வாகனம் இதுவரை 10 பேர் வசம் கைமாறியதும் தெரிய வந்தது. அந்த 10 பேரும் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அன்று மாலையே வாகனம் எங்கிருந்து வந்தது, இறந்தவர் யார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த விவரத்தை செய்தியாளர்களிடம் விவரித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், நீதிமன்ற அனுமதியுடன் உயிரிழந்தவரின் வீட்டில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அங்கிருந்து பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
சம்பவ பகுதியை ஏற்கெனவே காவல் இணை ஆணையர், காவல் ஆணையர் ஆய்வு செய்த நிலையில், சென்னையில் இருந்து வந்து கோவையில் முகாமிட்டுள்ள காவல் கூடுதல் டிஜிபி மற்றும் டிஜிபியும் நேரில் பார்வையிட்டனர். நேற்றைய நிலவரப்படி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு
இத்தகைய சூழலில்தான் கைது செய்யப்பட்டுள்ள ஐவர் மீதான வழக்கில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சட்டம், பயங்கவராத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுவோர் மீதே வழக்கமாக பதிவு செய்யப்படும்.
முன்னதாக, கைதானவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174 மற்றும் வெடி மருந்துகள் சட்டப்பிரிவு 3ஏ ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைதான ஐவர் மீதும் குற்றச்சதிக்கான 120பி, இரு வேறு குழுக்கள் இடையே பகைமையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு 153ஏ ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன.
இந்த சட்டப்பிரிவுகளுடன் யுஏபிஏ சட்டத்தையும் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த வழக்கில் மேலும் 20க்கும் மேற்பட்டோரை விசாரித்து வருவதாகவும் சந்தேக நபர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெடி விபத்து ஏற்பட்ட அன்றைய தினம் 200 மீட்டர் தொலைவில் போலீஸ் தடுப்பு இருந்துள்ளது. அங்கு அதிகாரிகள் இருந்துள்ளனர். அதிகாலை 3.30 மணி அளவில் அவர்கள் கோவில் அருகே ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டன.
காவல் தடுப்பு இருந்ததால் அந்த இடத்தை தாண்ட முடியாமல் வெடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகர பகுதியில் வாகன தணிக்கை மற்றும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
"தீபாவளி நேரம் என்பதால் ஒப்பணக்கார தெரு மற்றும் அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்ற போதும் அங்கு பெருமளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டன. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த கூட்டு சதியில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் அவர்களது தொடர்பு எண் என்ன போன்றவற்றை ஆய்வு செய்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கைதான சிலர் கேரளாவிற்கு சமீபத்தில் சென்று வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த முபின் வீட்டில் 2019ஆம் ஆண்டிலேயே தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்துள்ளது.
சிசிடிவியில் இருப்பது யார்?
இதற்கிடையே, முபின் வீடு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வீட்டிலிருந்து மூட்டை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவியில் உள்ளது. மேலும், இரண்டு சிலிண்டர்கள் மூன்று சிறிய ட்ரம் கேன்களை அவர்கள் எடுத்துச் செல்வதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வீட்டிலிருந்து சென்ற நபர்கள் ரியாஸ், நவாஸ் பெரோஸ் என புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்துதான் பொட்டாசியம் நைட்ரேட் உட்பட 75 கிலோ அளவிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தல்கா, அல்உம்மா அமைப்பைச் சேர்ந்த பாஷா என்பவரது உறவினர் என தெரியவந்துள்ளது.
அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்த நிலையில், இவ்விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை பல தகவல்களை மறைப்பதாகவும் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு பலவீனமடைந்துவிட்டதாகவும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கோயம்புத்தூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
"தீபாவளிக்கு முதல் நாள் கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு ஒரு கார் விபத்து நடந்ததாக செய்தி வெளியானது. பிறகு, காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்பட்டது. இதற்குப் பிறகு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், கூடுதல் தலைமை இயக்குநர் போன்றோர் கோயம்புத்தூருக்குச் சென்றனர். இதன் பிறகு ஆறு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை.
இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லுங்கள் என பாஜக கூறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி, சிலிண்டர் வெடித்து விபத்து நடந்ததாகக் கூறினார்.
கோவை மாநகரம் என்பது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது என்பது ஜூன் 2019இல் அனைவருக்கும் தெரியவந்தது. 1998இல் நடந்த வெடிகுண்டு விபத்தில் 58 அப்பாவிகள் பலியாகினர். அதன்பின்னர் ஜூன் 2019ல் என்ஐஏ ஐந்து பேரை கோவையில் இருந்து கைது செய்தனர். அவர்கள் அனைவரும் முகமது அசாருதீன் என்பவர் மூலமாக, கேரளாவில் இருந்த அபுபக்கர் என்பவரோடு தொடர்பில் இருந்தனர்.
அவர்கள் இருவருமே இலங்கையில் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்த ஷஹ்ரான் ஹாஸ்மியுடன் தொடர்பில் இருந்தனர். இவர்கள் பேஸ்புக், டெலிகிராம் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 269 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணை சிரியா, துருக்கி என சர்வதேச அளவில் நடந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை கோவையிலும் அருகில் உள்ள பாலக்காட்டிலும் நடந்தது. இதில் பாலக்காட்டில் அபுபக்கரும் கோவையில் அசாருதீனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறை பலரிடம் விசாரணை நடத்தியது. அதில் ஜமேசா முபீனும் ஒருவர். அக்டோபர் 23ஆம் தேதி நடந்த விபத்திலும் காரை ஓட்டி வந்தவர் ஜமேசா முபின் என்பதை 24 மணி நேரத்திற்குப் பிறகுதான் காவல்துறை தெரிவித்தது. இருந்தாலும் இதனை ஒரு சிலிண்டர் விபத்தாகவே கூறிவந்தனர். பிறகு பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பியதும், அதில் கோலிக் குண்டுகள், ஆணிகள் இருந்ததை ஒப்புக் கொண்டனர்.
பின்னர், வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளனர்.
வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்ட முபீன்
காரை ஓட்டி இறந்த ஜமேசா முபீன் இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். அதாவது, "என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது, நான் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள். என் குற்றங்களை மறந்துவிடுங்கள். என் இறுதிச்சடங்கில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் பயன்படுத்தும் வார்த்தைகள்.
இந்த நிலையில், நேற்றுப் பின்னிரவு இன்று அதிகாலையில் கோவை மாநகர காவல்துறை முகமது தல்கா, முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ் ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்திருப்பதாகக் கூறியிருக்கிறது. இது குறித்து காவல்துறை அறித்த அறிக்கையில், அவர்கள் எந்தப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் தரப்படவில்லை.
இது தவிர, எட்டு பேரை கோவை நகர காவல்துறை தனது பிடியில் விசாரித்து வருகிறது. அவர்களை ஏன் கைது செய்யவில்லை? அவர்கள் மீது ஏன் யுஏபிஏ பிரிவின் கீழ் வழக்கு தொடரவில்லை. 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம் ஆகியவற்றை அவர்கள் வைத்திருந்தார்கள். கோலி குண்டுகள், ஆணிகள் ஆகியவற்றை அவர்கள் வைத்திருந்தார்கள். அவற்றோடு அவர்கள் எதற்காக வந்தார்கள்?
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு பா.ஜ.க கடிதம் எழுதியுள்ளது. அதன் விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது. கோவையில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்த அரசு உடனடியாக டிஸ்மிஸ் ஆகியிருக்கும்.
2021வரை தமிழக உள்துறையின் கட்டமைப்பு வேறு மாதிரி இருந்தது. புரொஃபஷனல்கள்தான் இருப்பார்கள். அனுபவம் வாய்ந்தவர்கள் இருப்பார்கள். ஆனால், முதலமைச்சர் பதவியேற்ற பிறகு, அண்ணாமலையை உளவு பார்ப்பதே வேலையாகி விட்டது. தமிழக உள்துறையில் 60 சதவீதத்திற்கு மேல் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் உளவுத்துறை ஏடிஜிபி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஒரு என்.ஜி.ஓவும் மிஷினரியும் செய்யும் வேலைகளை இன்று உளவுத்துறை செய்து கொண்டிருக்கிறது.
மேலும் குண்டு வெடிக்க வேண்டுமா? இந்தியாவின் மிக மோசமான உள்துறை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள எவ்வளவு நாள் வேண்டும்? கடந்த தி.மு.க. ஆட்சியில் இருந்ததைப் போல சிறந்த அதிகாரிகளைக் கொண்டுவர வேண்டும்.
நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ்சைச் சேர்ந்த தீவிரவாதியை தமிழக காவல்துறை கைதுசெய்ததா இல்லையா? பாரிஸில் நடந்ததைப் போல ஒரு தாக்குதலை நடத்த ஒரு வண்டியை அவர் வாங்கினாரா இல்லையா? அதற்குப் பிறகு வெளியிலிருந்து உளவுத் துறை தகவல் வந்த பிறகு சேலத்திலும் ஈரோட்டிலும் ஒருவரை காவல்துறை கைதுசெய்யவில்லையா? ஏன் அதை மறைக்கிறீர்கள்? ஐஎஸ்ஐஎஸ் கலவர பூமியாக கொங்குப் பகுதி மாறிவருகிறது.
உளவுத் துறையை நான்கு பேர் அரசியல் துறையாக மாற்றிவைத்திருக்கிறார்கள். அந்தப்பிரிவில் அரசியல் உளவு பார்ப்பதுதான் 99 சதவீதம் நடக்கிறது. தோல்விக்கு மேல் தோல்வி. ஆகவே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதல் என்பதை தமிழ்நாடு அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்" என்கிறார் அண்ணாமலை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்