You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை, ஸ்டெர்லைட் ஆணைய அறிக்கை: அடுத்து என்ன நடக்கும்?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் அடுத்ததாக என்ன நடக்கும்?
ஆறுமுகசாமி ஆணையத்தின் பின்னணி & பரிந்துரை
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நீண்ட சிகிச்சைக்குப் பிறகும் உயிரிந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக விசாரிப்பதற்காக 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் சுமார் நான்கரை ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு தனது அறிக்கையை இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அல்லது இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் உள்பட பல மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அது வழங்கப்படாதது ஏன் என ஆணையம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
சிகிச்சையை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்க மருத்துவர் தவிர சசிகலாவுக்கும் இருந்தது. நெருக்கடியின் போது முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சையை தொடராமல் தவறிழைத்திருக்கலாம். அந்த அறுவை சிகிச்சை மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம் என அறிக்கை கூறுகிறது.
மேலும், அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படாதது ஏன் எனக் கேள்வியெழுப்பியருக்கும் ஆணையம், ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, அவரது உறவினர் டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளது.
மேலும், டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்யாதது குறித்து அவர்களை விசாரிக்க வேண்டும்.
அந்த காலகட்டத்தில் பல்வேறு படிவங்களில் கையெழுத்திட்ட அப்போதைய தலைமைச் செயலர் டாக்டர் ராம்மோகன் ராவிடம் விசாரணை நடத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மையான தகவல்களை மறைத்து, ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என பேட்டியளித்தது ஏன் என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டியை விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ளது.
நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பின்னணி & பரிந்துரை
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டில் அந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திவந்தனர். அந்தப் போராட்டத்தின் 100வது நாளில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர். அதன்படி 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி மே 22ஆம் தேதி நடந்த போராட்டம் பெரும் வன்முறையிலும் துப்பாக்கிச் சூட்டிலும் முடிவடைந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக அடுத்த நாளே ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அக்டோபர் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது.
அடுத்ததாக என்ன நடக்கும்?
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் மூன்றுவிதமான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக ஐ.ஜி முதல் சாதாரண காவல்துறை அதிகாரிகள் வரை 17 பேர் மீது நடவடிக்க எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக, துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவளித்த சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட மூன்று வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை அதிகரித்துத் தரும்படி கூறியுள்ளது.
இதில், காவல்துறையினர் மீதான நடவடிக்கையைப் பொறுத்தவரை, இந்த அறிக்கையை தலைமைச் செயலர், உள்துறைச் செயலருக்கும் காவல்துறை தலைவருக்கும் அனுப்பி, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைப்பார். அதற்குப் பிறகு, இவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கைக்கான முகாந்திரம் இருந்தால், எந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து ஆராயப்பட்டு, அந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, வழக்கு நடக்கும்.
வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் இதே பாணியில் நடவடிக்கை எடுக்கப்படலாம். இழப்பீடுகளை அதிகரித்துத் தருவதைப் பற்றி அரசே முடிவுசெய்து அறிவிக்கலாம்.
ஆனால், ஆறுமுகசாமி அறிக்கையில் குறியிருக்கும் பரிந்துரைகள் குறித்து அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் கேள்விக்குறி. இந்த ஆணையத்தின் பரிந்துரையில், ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, சிவகுமார், விஜயபாஸ்கர், ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
"ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, நான்கு முறை தமிழ்நாடு அமைச்சரவை கூடியிருக்கிறது. அதில் ஒரு முறை, ஓ. பன்னீர்செல்வம் முதல்வரின் பொறுப்புகளை நிறைவேற்றத் தேர்வுசெய்யப்பட்டார். ஒரு முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது, அவரது மருத்துவம் குறித்த பொறுப்பு அமைச்சரவைக்கு இல்லையா? சுகாதாரத் துறைச் செயலர் மட்டும் தனியாக முடிவெடுத்துவிட முடியுமா?" எனக் கேள்வி எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளரான இளங்கோவன் ராஜசேகரன்.
தவிர, முதல்வருக்கான மருத்துவம் போன்ற பல்வேறு நபர்கள், மூத்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சிலரை மட்டும் குற்றம்சாட்டுவது எப்படி ஏற்கத்தக்கது என்றும் கேள்வியெழுப்புகிறார் அவர்.
ஆகவே, ஆறுமுகசாமி ஆணையம் குறித்து தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விசாரணை ஆணையங்களின் அதிகாரம் என்ன?
இந்தியாவில் விசாரணை ஆணையங்களைப் பொறுத்தவரை, 1952ஆம் ஆண்டின் The Commissions of Inquiry Act சட்டத்தின் கீழ் நியமிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக, மாநில அரசோ, மத்திய அரசோ வெளியிடும் ஓர் அரசிதழ் அறிக்கையின் மூலம் இந்த விசாரணை ஆணையங்கள் உருவாக்கப்படுகின்றன.
விசாரணை ஆணையங்களின் அதிகாரத்தைப் பொறுத்தவரை, அவை யாரையும் அழைத்து விசாரிக்கலாம். சாட்சியங்களை கோரிப் பெறலாம். நீதிமன்றங்களில் இருந்தோ அரசு அலுவலகங்களில் இருந்தோ ஆவணங்களை கோரிப் பெறலாம்.
ஆனால், விசாரணை ஆணையத்திற்கு முன்பாக ஒருவர் அளிக்கும் வாக்குமூலத்தை, அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் நீதிமன்றத்தில் வைக்க முடியாது. அரசு நினைத்தால், ஆணையத்தைக் கலைத்துவிட முடியும்.
ஓர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, பொதுவாக அவற்றை சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ முன்வைக்க வேண்டும். அரசுகள் விரும்பினால், அது குறித்து விவாதம் நடத்தலாம். அறிக்கையின் பரிந்துரைகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த Action Taken Reportஐ சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுக்காவிட்டாலோ, விவாதம் நடத்தப்படாவிட்டாலோ அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அதோடு போய்விடும்.
"அரசுகளைப் பொறுத்தவரை, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆணையங்கள் பரிந்துரைத்தால், அம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது" என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.
சில ஆணையங்கள்; சில நடவடிக்கைகள்
1998ல் திண்டுக்கல் மாவட்டம் குண்டுப்பட்டியில் நடந்த வன்முறைகள் குறித்து விசாரணை நடந்த ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் காவல்துறையின் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியது. அந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது.
1994ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்திற்கு அருகில் உள்ள நடுநாலு மூலைக்கிணறு என்ற ஊரில் பட்டியலினத்தோர் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறை குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றமே ஓ. வெங்கடாச்சலம் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் அறிக்கை காவல்துறையைக் கடுமையாகச் சாடியது. "காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, நாகரீகமற்ற, மனிதத் தன்மையற்ற வகையில் நடந்துகொள்ளக்கூடாது" என்று கூறியது.
90களின் பிற்பகுதியில் தென் மாவட்டங்களில் நடந்த ஜாதிக் கலவரங்களின் பின்னணி, அவை நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் தலைமையில் மு. கருணாநிதி தலைமையிலான அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் பெரும்பாலானவற்றை அரசு ஏற்றுக்கொண்டது.
கொடியங்குளத்தில் பட்டியலினத்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கோமதிநாயகம் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தை பட்டியலினத்தவர்கள் புறக்கணித்தனர். 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்படவில்லை. இந்த நிலையில், அடுத்ததாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. 1999 நவம்பர் 23ஆம் தேதி அந்த அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சரியானதுதான் என்றும் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று கொடியன்குளத்தின் மீது காவல்துறை எவ்விதமான அத்துமீறலிலும் ஈடுபடவில்லையென்றும் அந்த அறிக்கை கூறியது. அரசுக்கு ஆதரவாகவே ஆணையத்தின் அறிக்கை இருந்ததால் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
2011 செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பட்டியல் இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2013 மே மாதம் அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கை அதே ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.
சம்பத் அறிக்கையை காவல்துறையின் நடவடிக்கைகள் பெரும்பாலானவற்றை ஆதரித்தது. மதுவிலக்கை அமுல் செய்ய வேண்டும், இலவசங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகள் ஆணையத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என தமிழ்நாடு அரசு நிராகரித்தது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞனான இளவரசன், திவ்யா என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண் இளவரசனிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையில், ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் இளவரசன். அவரது மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது.
அந்த ஆணையம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் அளித்தது. ஆனால், அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை.
மதுரை மாவட்டத்தில் நடந்த சட்டவிரோத கிரானைட் சுரங்க முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கையை அவர், உயர் நீதிமன்றத்தில் 2018ல் தாக்கல்செய்தார். அதற்குப் பிறகு அதில் பெரிய முன்னேற்றம் ஏதும் நடக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்