You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி அரசு, நிர்மலா சீதாராமனுக்கு எதிராக அமெரிக்க நாளிதழில் வெளியான சர்ச்சைக்குரிய விளம்பரம்
இந்திய அரசில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலருக்கு எதிராக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் சமீபத்தில் வெளியான ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) மற்றும் தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் விவகாரத்தில் தொடர்புடைய பிற அதிகாரிகளை 'வாண்டட்' (தேடப்படுபவர்கள்) என்று கூறி அவர்களுக்கு எதிராகத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த செய்தித்தாளில் வெளியான விளம்பரம் கோரியுள்ளது.
அக்டோபர் 13-ம் தேதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான விளம்பரத்தில், 'இந்தியாவை அன்னிய முதலீட்டிற்கு பாதுகாப்பற்ற இடமாக மாற்றிய அதிகாரிகளைப் பாருங்கள்' என்று எழுதப்பட்டுள்ளது.
11 பேருக்கு தடை விதிக்கக் கோரியுள்ள இந்த விளம்பரத்திற்கு 'மோதியின் மேக்னிட்ஸ்கி 11' என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசின் 2016 Global Magnitsky சட்டத்தின் கீழ், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் வெளிநாட்டு அரசு அதிகாரிகள் மீது தடை விதிக்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்டோபர் 11ஆம் தேதி வாஷிங்டனுக்குச் சென்ற நிர்மலா சீதாராமன், அக்டோபர் 16 ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருந்தார்.
விளம்பரத்தை வெளியிட்டது யார்?
அமெரிக்காவின் ஃபிரான்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடம் என்ற அரசு சாரா அமைப்பு இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. ஃபிரான்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடம் என்பது 'தனிமனித சுதந்திரம், சக்தியின் மூலம் அமைதி, வரையறுக்கப்பட்ட அரசு, சுதந்திர நிறுவனங்கள், சுதந்திர சந்தை மற்றும் பாரம்பரிய அமெரிக்க மதிப்புகள்' போன்ற கொள்கைகளை ஊக்குவிக்கும் ஒரு கல்வி அமைப்பு என்று அதன் இணையதளம் தெரிவிக்கிறது.
விளம்பரத்தில் 11 பேரின் பெயர்கள் உள்ளன, "மோதி அரசின் இந்த அதிகாரிகள், அரசியல் மற்றும் வணிக போட்டியாளர்களை அகற்ற, அரசு அமைப்புகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தி சட்டத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை பாதுகாப்பற்ற இடமாக மாற்றியுள்ளனர்" என்றும் எழுதப்பட்டுள்ளது.
"உலகளாவிய மாக்னிட்ஸ்கி மனித உரிமைகள் பொறுப்புக் கூறல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் விசா தடைகளை விதிக்க அமெரிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். மோதி ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி குறைந்து, இந்தியா ஆபத்தான முதலீட்டு இடமாக மாறியுள்ளது."
"நீங்கள் இந்தியாவில் முதலீட்டாளராக இருந்தால், நீங்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் அடுத்தவர்."
ஃபிரான்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடம் அமைப்பு இந்த ஆண்டு ஆகஸ்டில், உலகளாவிய மேக்னிட்ஸ்கி மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் சட்டத்தின் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்திய அதிகாரிகள் 'அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகின்றனர்' என்று அதில் குற்றம் சாட்டப்பட்டது. "இந்தியாவின் குற்றப் புலனாய்வு முகமைகள் மற்றும் நீதிமன்றங்கள் மூலம் முட்டுக்கட்டைகள் உருவாக்கப்படுகின்றன" என்று இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேவாஸ் மல்டிமீடியா அமெரிக்கா இன்க் மற்றும் அதன் இணை நிறுவனர் ராமச்சந்திர விஸ்வநாதன் சார்பில் ஃபிராண்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடம் இந்த மனுவை தாக்கல் செய்வதாக இந்த மனுவின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆன்ட்ரிக்ஸ் தலைவர் ராகேஷ் சசிபூஷண், இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கட்ராமன், நீதிபதி ஹேமந்த் குப்தா, நீதிபதி வி. ராமசுப்ரமணியம், சிபிஐ டிஎஸ்பி ஆஷிஷ் பாரிக், அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஷ்ரா, துணை இயக்குநர் ஏ. சாதிக் முகமது நைஸ்னார், உதவி இயக்குநர் ஆர். ராஜேஷ் மற்றும் சிறப்பு நீதிபதி சந்திரசேகர் ஆகியோர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 11 பேர்.
ஃபிரான்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடமின் நிறுவனரும் குடியரசுக் கட்சியின் செனட்டருமான ஜார்ஜ் லேண்ட்ரித் இந்த விளம்பரத்தை ட்வீட் செய்துள்ளார். "இந்தியாவின் மேக்னிட்ஸ்கி XI மற்றும் நிதியமைச்சரின் செயல்களை, ஃப்ரான்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடமின் புதிய விளம்பரம் அம்பலப்படுத்துகிறது. இவர்கள் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியையும் முதலீட்டுச் சூழலையும் அழித்துவிட்டனர்," என்று அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவின் மேக்னிட்ஸ்கி லெவன், நிர்மலா சீதாராமன், நரேந்திர மோதி மற்றும் பாஜகவும், இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ள முதலீட்டாளர்களுக்கு 'இந்தியா முதலீட்டிற்கு ஆபத்தான இடம்' என்ற தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர்,"என்று அடுத்த ட்வீட்டில் அவர் எழுதியுள்ளார்.
விளம்பரத்தின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா?
இந்த விளம்பரம் வெளியான பிறகு, இந்தியாவில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் இந்த விளம்பரத்தின் பின்னணியில் வேறு சிலர் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மோசடி செய்பவர்கள் அமெரிக்க ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்துவது வெட்கக்கேடானது' என்று செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா ட்வீட் செய்துள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இந்திய அரசையும் இந்தியாவையும் குறிவைத்து வெளியான விளம்பரம், வியக்கத்தக்க வகையில் பயங்கரமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இது போன்ற விளம்பரங்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தேவாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த, நாட்டைவிட்டு தப்பியோடிய ராமச்சந்திர விஸ்வநாதன் இந்த விளம்பர பிரசாரத்தை நடத்துகிறார்," என்று கஞ்சன் குப்தா மேலும் எழுதியுள்ளார்.
"விஸ்வநாதன் இந்தியாவில் இருந்து தப்பியோடிய, பொருளாதார குற்றவாளி. அவரது நிறுவனமான தேவாஸ் ஊழலில் ஈடுபட்டதாக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது இந்திய அரசுக்கு எதிரான பிரசாரம் மட்டுமல்ல. இது நீதித்துறைக்கு எதிரான பிரசாரம். இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான பிரசாரம்," என்று தனது அடுத்த ட்வீட்டில் அவர் எழுதியுள்ளார்.
'இது பத்திரிகை தர்மம் அல்ல, அவதூறான அறிக்கை. வால் ஸ்ட்ரீட் ஜெர்னலின் விளம்பரக் கொள்கை என்ன? இது பத்திரிக்கை துறை மீதான களங்கம். இந்த அவமானத்திற்கு எதிராக நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம்," என்று பிரிட்டிஷ் மத்திய கிழக்கு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செயல் உத்தி அரசியல் விவகார நிபுணர் அம்ஜத் தாஹா ட்வீட் செய்துள்ளார்.
முக்கிய விஷயங்கள்
- வால் ஸ்ட்ரீட் ஜர்னல் விளம்பரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் 'தேடப்படுபவர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
- நிதியமைச்சர் உட்பட 11 பேருக்கு பொருளாதார மற்றும் விசா கட்டுப்பாடுகளை விதிக்குமாறு விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது.
- ஃப்ராண்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடம் என்ற அமெரிக்க அமைப்பு இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது
- இந்த 11 அதிகாரிகள் இந்தியாவை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பற்றதாக மாற்றியதாக விளம்பரம் கூறுகிறது
- இந்த விளம்பரத்தின் பின்னணியில் தேவாஸ் மல்டிமீடியாவின் இணை நிறுவனர் ராமச்சந்திர விஸ்வநாதன் இருப்பதாக கூறப்படுகிறது.
ராமச்சந்திர விஸ்வநாதன் யார்?
அமெரிக்க குடிமகமான ராமசந்திர விஸ்வநாதன் தேவாஸின் இணை நிறுவனராக இருந்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவிற்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையே 2005ஆம் ஆண்டு ஒரு செயற்கைக்கோள் ஒப்பந்தம் செய்யதுகொள்ளப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
பணமோசடி வழக்கில் விஸ்வநாதனை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க , பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குநரகத்திற்கு அனுமதி அளித்தபோது தேவாஸ் சம்பந்தப்பட்ட வழக்கு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது.
2015ஆம் ஆண்டு சர்வதேச வர்த்தக சபை (ஐசிசி) தேவாஸ் மல்டிமீடியாவுக்கு இஸ்ரோ130 கோடி டாலர் வழங்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பை, டெல்லி உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விஸ்வநாதன் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது . இருதரப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் (MLAT) கீழ் மொரிஷியஸில் தேவாஸின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனுடன், விஸ்வநாதனுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இன்டர்போல் அமைப்பிடமும், அவரை இந்தியாவுக்கு அனுப்புமாறு அமெரிக்காவிடமும் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மறுபுறம் தேவாஸ் மல்டிமீடியாவும் அதன் சட்ட முயற்சிகளைத் தொடர்கிறது. ஐசிசியின் தீர்ப்பின் அடிப்படையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா நீதிமன்றங்களை அந்த நிறுவனம் அணுகியது. இதற்குப் பிறகு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனின் அமெரிக்க கணக்கில் இருந்து, 87,000 டாலர்கள் மற்றும் பாரிஸில் உள்ள அதன் சொத்துகளையும் தேவாஸ் நிறுவனம் கையகப்படுத்திக்கொண்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்