You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் பழங்குடிகள் சாதிச் சான்றிதழ் பெற இப்போதும் அல்லாட வேண்டியிருப்பது ஏன்?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
பல்வேறு வடிவில் போராட்டங்கள், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனுக்கள் என தொடர்ந்து போராடியும், தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களில் சில பிரிவினருக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்கள் நீடிப்பதை அக்டோபர் 11ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சார்ந்த வேல்முருகன் என்பவர் தன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை எனக்கூறி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
வேல்முருகன் பல நாட்களாக சாதி சான்றிதழ் கோரி அரசு அலுவலகங்கள் பலவற்றுக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி மையம் அருகில், தன் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து அவர் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, அருகில் இருந்த காவலர்கள் தீக்காயங்களுக்கு ஆளான வேல்முருகனை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். வேல்முருகன் ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் என்ன சிக்கலை எதிர்கொண்டார்?
வேல்முருகன் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழுக்கு பல முறை முயற்சித்தும் கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு உயர் நீதிமன்றம் சென்றதாக, போலீசார் கூறுகின்றனர்.
"நேரடியாக ஆய்வு செய்வதில்லை"
பழங்குடி மக்களில் இப்போதும் சில பிரிவினருக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் நலத்திட்ட உதவிகள் போன்றவை கிடைப்பதில் பிரச்னைகள் தொடருவதாக, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆதிமூலம் கூறுகிறார்.
சாதிச் சான்றிதழ்களை பெறுவதில் பழங்குடிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பழங்குடிகளுக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கே உள்ளது. அவர்கள் நாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். தொழில், குலதெய்வம், கலாசாரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், இப்போது அப்படி ஆய்வு செய்வதில்லை.
மாறாக, நாங்கள் இணையம் மூலம் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், ஆய்வுக்கு வராமல் அவர்கள் அலுவலகத்திலிருந்தே எங்கள் விண்ணப்பங்களை நான்கு நாட்களில் இணையம் வாயிலாக நிராகரிக்கின்றனர். பள்ளி மாற்றுச் சான்றிதழ், வீட்டு பட்டா உள்ளிட்ட பல ஆதாரங்களை சமர்ப்பிக்கிறோம். ஆனால், ஒவ்வொருமுறையும் போதுமான ஆதாரம் இல்லை என திருப்பி அனுப்புகின்றனர்.
அதேபோன்று, ஏற்கெனவே பெற்றோரோ உறவிலோ யாருக்கும் சாதிச் சான்றிதழ் இல்லாவிட்டால், அவர்களின் வாரிசுகளுக்குக் கிடைப்பது கடினமாகி விடுகிறது. பழங்குடிகளில் முந்தைய தலைமுறையினர் சாதிச் சான்றிதழ் வைத்திருப்பது மிக அரிதாகவே உள்ளது.
அதனால், இளம் தலைமுறையினருக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், அவர்கள் 12ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடிவதில்லை. இதனால், இளம் வயதினர் செங்கல் சூளைகள் உள்ளிட்டவற்றில் கொத்தடிமைகளாக செல்கின்றனர்.
இணையம் மூலம் சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது ஒருவருக்கு தலா ரூ.100 செலவாகிறது. எளிமையான தொழில் செய்யும் பழங்குடிகளுக்கு ஒவ்வொருமுறையும் செலவு செய்வது கடினமாக இருக்கிறது" என்றார்.
"காட்டுநாயக்கர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் நிலை இன்னும் மோசம்"
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தை சேர்ந்த ராஜேஷ் பேசுகையில், "சாதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அப்படியே நிலுவையில் இருக்கின்றன. அவர்கள் நேரடியாக விசாரணை செய்து கொடுக்க வேண்டும். ஆனால், அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
நரிக்குறவர்கள், இருளர்கள் நிலைமையை விட, பூம்பூம் மாட்டுக்காரர்கள், காட்டு நாயக்கர்கள் போன்ற பழங்குடிகளுக்கு இன்னும் சாதிச் சான்றிதழ் கிடைக்காத நிலை உள்ளது. அவர்களின் பிரச்னைகளை பொதுவெளிக்குக் கொண்டு வர அச்சமூகத்திலிருந்து வலுவான தலைவர்களும் இல்லை. சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்வி தொடர்ந்து தடைபடுகிறது" என தெரிவித்தார்.
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கால தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என, அதிகாரிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
"பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்" என அவர் கடந்தாண்டு வெளியிட்டார்.
கடந்த ஜூலை மாதமும் இதனையே வலியுறுத்தி, சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு அதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியிருந்தார்.
எனினும், பழங்குடிகள் விவகாரத்தில் தொடர்து காலதாமதம் நீடிப்பது குறித்து அமைச்சர் ராமச்சந்திரனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் பலமுறை தொடர்பு கொண்டும், அவரிடமிருந்து இது குறித்த கருத்தைப் பெற முடியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்