மூன் லைட்டிங் என்றால் என்ன? ஐ.டி. நிறுவனங்கள் இது குறித்து எச்சரிப்பது ஏன்?

    • எழுதியவர், சோயா மாட்டீன்
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சாஃப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சஹைல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2019ஆம் ஆண்டு தான் பிரதானமாக செய்து வரும் பணி தவிர, இரண்டாவதாக ஒரு பணியை அவர் செய்தபோது அதன் தீவிர சிக்கலை அவர் உணரவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக தனது அன்றாட பணியை தவிர்த்து பிற ஐடி நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் கோடிங் நேர்காணலை மேற்கொண்டு வருகிறார் சஹைல். இதன்மூலம் அவர் ஒரு பிராஜெக்டிற்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஈட்டி வருகிறார்.

தனது முதன்மைப் பணியில் இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாததால் தான் செய்யும் இரண்டாவது பணி குறித்து நிறுவனம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் சஹைல்.

மூன்லைட்டிங் என்றால் என்ன?

பிரதானமாக ஒரு பணியை செய்து கொண்டிருக்கும்போது மற்றொரு பணியை செய்வதற்கு பெயர் ஆங்கிலத்தில் 'மூன்லைட்டிங்' எனப்படுகிறது. சில நேரம் அந்த இரண்டாவது பணியை ரகசியமாக செய்வதும் இதில் அடக்கம்.

எனவே தற்போது இந்த மூன்லைட்டிங் குறித்து ஐடி பெரு நிறுவனங்கள் எச்சரித்துள்ள நிலையில் இதுகுறித்த பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன.

இப்படி எச்சரிக்கை விடுத்துள்ள முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ, செப்டம்பர் மாதம் இம்மாதிரி தங்களது போட்டி நிறுவனங்களுக்காகப் பணி செய்த 300 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியதாக அறிவித்தது. விப்ரோ தலைவரான ரஷத் ப்ரேம்ஜி, மூன் லைட்டிங்கை பகிரங்கமாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆகஸ்டு மாதம் அவர் இதுகுறித்து பதிவிட்ட ட்வீட் ஒன்றில், "இது ஒரு ஏமாற்று வேலை. அவ்வளவுதான்" என தெரிவித்திருந்தார்.

ஆதரவாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை

ஆனால் ஒரு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பலர் இந்த மூன் லைட்டிங் நடைமுறையை ஆதரித்துள்ளனர். இந்தியாவில் பணியை நோக்கிய பார்வை எப்படி மாறுகிறது என்பதற்கான சாட்சி இது என்கின்றனர் இந்த நடைமுறையின் ஆதரவாளர்கள்.

ஆனால் அதே சமயம் பணி செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

மூன் லைட்டிங்கில் ஏன் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என்கின்றனர் நிபுணர்கள். இந்த நிச்சயமற்ற பணிச் சந்தையில் சீரான வருவாயைப் பெற இவ்வாறு இரண்டாம் பணியில் ஈடுபடுகின்றனர் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ தங்களுக்கு பிடித்தமான வேலையை செய்ய இவ்வாறு இரண்டாம் பணியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தாம் முதன்மையாகப் பணியாற்றும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஒரு ஊழியர் மீறாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் அப்படி மீறுவது சட்ட சிக்கலை ஏற்படுத்த கூடும்.

"உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்து அதற்கான ஊதியத்தையும் பெறுகிறீர்கள் என்பதற்கும் முழு நேரமாக இரண்டாவதாக ஒரு பணியில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது" என தொழில்முனைவோர் ரஜத் கார்க் தெரிவிக்கிறார்.

ஊழியர்கள் பணியைவிட்டு சென்றவுடன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நிறுவனத்திற்கு தேவையற்ற ஒன்று என்கிறார் அவர்.

"ஆனால் உங்களின் பணிக்கு நீங்கள் மிகுந்த சோர்வுடன் செல்கிறீர்கள், உங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவு உங்களால் பணி செய்ய முடியவில்லை என்றால் நிச்சயம் அது பிரச்னையாக மாறும்." என்கிறார் ரஜத்.

மூன் லைட்டிங் என்பது இந்தியாவிற்கு புதிதான ஒன்று இல்லை என்றாலும், கொரோனா பெருந்தொற்று சமயத்தில்தான் இந்த டிரண்ட் அதிகரித்தது. "அந்த சமயத்தில் மக்கள் அதிகம் வீட்டிலிருந்து பணி செய்தனர் அதனால் அவர்களால் பல பணிகளை ஒரே சமயத்தில் செய்ய முடிந்தது." என்கிறார் தொழில்நுட்ப நிபுணர் பிரஷாந்தோ ராய்.

மூன்லைட்டிங்கின் பயன்கள்

தற்போது ரெட்டிட் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களில் மூன் லைட்டிங்கில் ஈடுபட நினைக்கும் இளைஞர்களுக்கு யோசனைகள் வழங்கப்படுகின்றன. அதில் இம்மாதிரியாக இரண்டாவதாக பணி செய்வது முழு நேர பணியை திறன்பட செய்வதற்கு உதவும் என்று கூறும் ஆய்வுகளின் லிங்குகளும் பகிரப்படுகின்றன.

பொதுவாக வாகனம் ஓட்டுதல், ஆன்லைன் ரீடைலிங், கிராஃபிக் டிசைனிங் மற்றும் கன்டண்ட் ரைட்டிங் ஆகிய துறைகளில் பலர் இரண்டாம் பணியை தேர்வு செய்கின்றனர்.

ஐடி துறையில் அதிகம்

ஐடி துறையில் இந்த மூன் லைட்டிங் என்பது பொதுவான ஒன்றாக உள்ளது என்கிறார் ரஜத் கார்க். ஏனென்றால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களின் முழு நேர பணியின்போதுதான் இதற்கான திட்டங்களை வகுத்தனர். அதற்கு ஒரு சர்வதேச எடுத்துக்காட்டு ஸ்டீவ் வோஸ்னியாக். இவர் ஹெச் பி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸை வடிவமைத்தார். கார்க்கின் ஊழியர்கள் பலர் இரண்டாம் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

"ஆனால் அவர்களின் நிறுவனத்திற்காக எனது நிறுவனத்திலிருந்து தகவல்களை திருட தொடங்கினாலோ அல்லது போட்டி நிறுவனங்களுக்கு வழங்கினாலோ அது முற்றிலும் சட்டவிரோதமானது," என்கிறார் கார்க்.

"விப்ரோ நிறுவனம் மூன் லைட்டிங்கில் ஈடுபட்டவர்களை எல்லாம் பணியிலிருந்து நீக்கிவிடவில்லை. போட்டி நிறுவனங்களுக்கு பணி செய்தவர்களை மட்டுமே பணியிலிருந்து நீக்கியது" என்கிறார் கார்க்

"ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் அரிதாகவே பிற நிறுவனங்களில் பணிபுரிய அனுமதிக்கிறது." என்கிறார் ராய்.

"சில ஊழியர்கள் அவர்களின் நேரத்தை திட்டமிடலாம். இரண்டாவது நிறுவனம் போட்டி நிறுவனமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த தெளிவு என்பது அரிது." என்கிறார் ராய்

ஆனால் மூன்லைட்டிங்கை ஆதரிப்பவர்கள் பலர் தற்போது இந்த பதத்தை முறையற்ற செயலுடன் சிலர் ஒப்பிட்டு வருவதால் இது குறித்து தவறான பார்வையே அதிகரித்து வருகிறது என்கின்றனர்.

ஊதியத்திற்காக மட்டுமல்ல

2020ஆம் ஆண்டு வரை, டெல்லியில் உள்ள ஸ்டார்டப் நிறுவனம் ஒன்றில் டேட்டா அனலிஸ்டாக இருந்தவர் அர்ஜூன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

அந்த பணியில் அதிக நேரங்களில் ஈடுபட்டார். நன்றாக ஊதியம் ஈட்டினார். ஆனால் தனது வாழ்க்கையை கொண்டாட அவருக்கு ஆற்றல் இல்லை. எப்போதும் சோர்வாகவே இருந்தார்.

ஆனால் இந்த கோவிட் சமயத்தில் அவரின் வேலை பளு குறைந்தது. அப்போது கிடைத்த நேரத்தில் அவர் தனது பணி குறித்து யோசிக்க தொடங்கினார்.

"திடீரென எனக்கு நேரம் அதிகமாக கிடைத்தது. அதை திறன்பட பயன்படுத்தி கொள்ள நான் முடிவு செய்தேன்," என்கிறார் 28 வயது அர்ஜூன். தற்போது இவர் க்ரிப்டோ ப்ளாக்செயின் உருவாக்க திட்டங்கள் மற்றும் என்எஃப்டிகளில் பகுதி நேரமாக பணி செய்து வருகிறார்.

இது பணத்திற்காக ஏதோ செய்ய வேண்டும் என்று செய்யும் வேலை இல்லை என்று கூறும் அவர், இந்த பகுதி நேர பணி தனக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து புரிதலை உருவாக்கியது. தனக்கு பிடித்தமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்பையும் தருகிறது என்கிறார்.

"தாங்கள் செய்துவரும் முதன்மைப் பணியை விட்டுவிடவேண்டும் என்பதற்காக பலர் மூன்லைட்டிங்கில் ஈடுபடுவதில்லை. பணி மாறுவது அவர்களுக்கு வேறு அனுபவங்களை தருகிறது. திறனை வளர்த்து கொள்ள உதவுகிறது. பல்வேறு வாய்ப்புகள் குறித்து தெரிந்தபின் சிறந்த ஒன்றை தேர்வு செய்யலாம்," என்கிறார். அவர்.

அதேபோல மூன் லைட்டிங் குறித்து ஐடி துறையில் பெரிதாக பேசப்படும் அதேநேரத்தில் வீட்டிலிருந்து பணி செய்யக்கூடிய சாத்தியமுள்ள துறைகளில் தங்களுக்கு ஏற்றாற்போல பணி நேரத்தை வழங்க வேண்டும் என்று கோருகின்றனர் ஊழியர்கள்.

ஒப்பந்தத்தை பொறுத்தது

29 வயதாகும் சாம்ராட் கன்னா, என்ன பணி செய்கிறார் என்று கேட்டால், அனைத்தும் என்கிறார். இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனத்தில் ஆறு நாட்கள் பைடலட்டாக பணிபுரியும் சாம்ராட் கன்னா, பகுதி நேர டிஜே வாகவும் பணி புரிகிறார்.

தனது பகுதி நேர பணிகள் குறித்து தன் நிறுவனத்திடம் சில தகவல்களை தெரிவிக்க வேண்டி இருந்தது. மற்றபடி அவர்களுக்கு இதில் எந்த பிரச்னையும் இல்லை என்கிறார் அவர்.

"பணி நேரத்தை தாண்டி நான் என்ன செய்கிறேன் என்பது அவர்களுக்கு தேவையில்லாத ஒன்று" என்கிறார் அவர்.

ஆனால் இது அனைத்தும் நீங்கள் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பொறுத்தது என்கிறார் கார்க்.

"உங்கள் ஒப்பந்தம் நீங்கள் வேறு வேலையை செய்யக் கூடாது என்று கூறினால் நீங்கள் அதை செய்யக்கூடாது. ஊழியர்களுக்கு அவர்கள் உரிமை குறித்து தெரியும் வேளையில் அவர்களின் கடமைகள் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: