You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு அவசர சட்டம் - 7 தகவல்கள்
இணைய வழி விளையாட்டுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திங்கட்கிழமை (செப்டம்பர் 26) நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் அவசர சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த விளையாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமாக இந்தச் சட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஏழு தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
1) மொபைல் போன்களில் செயல்படும் செயலிகளின் மூலம் ரம்மி என்ற விளையாட்டை விளையாடுவது கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த ஆட்டத்தில் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பெரிய அளவில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
2) ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றை 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு இயற்றியது. அதன்படி அந்த ஆட்டத்தை விளையாடுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும். அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அந்தச் சட்டம் கூறியது. இந்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
3) இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜிங்க்லி கேம்ஸ், ரீட் டிஜிட்டல், ப்ளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, சிலர் தற்கொலை செய்து கொண்டதால் தடை விதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
4) ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 பேர் வரை உயிரிழந்தும் சிறப்புச் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு போட்டிகளை நடத்திவருவதை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டின. இந்த விளையாட்டு திறமையின் அடிப்படையில் நடப்பதாகவும் இதில் சூதாட்டம் இல்லையென்றும் வாதிடப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒட்டுமொத்தமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி அந்தச் சட்டத்தை ரத்து செய்தது.
5) இதன் பிறகும் ஆன்லைன் விளையாட்டுகளால் மரணங்கள் நிகழ்ந்த நிலையில், புதிதாக மீண்டும் சட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அறிவிப்பு ஜூன் பத்தாம் தேதி தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவையும் அமைத்தது. இந்தக் குழு ஜூன் 27ஆம் தேதி தனது அறிக்கையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
6) நீதிபதி சந்துரு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி மாநில பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள், கருத்துக்களைப் பகிர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் மேலும் இது தொடர்பான கருத்துகள் பெறப்பட்டன. இதற்குப் பிறகு ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
7) ஆனால், அந்தச் சட்டத்தை மேலும் திருத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி திருத்தப்பட்ட அவசரச் சட்டம் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு இந்தச் சட்டம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவரது ஒப்புதல் கிடைத்த பிறகு, பிரகடனம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வருமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்