You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல் காந்தியின் பயணம்: வரலாற்றில் பதிவான யாத்திரைகள் போல இருக்குமா?
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடையும் வகையில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ள 'இந்திய ஒற்றுமைப் பயணம்' (பாரத் ஜோடோ யாத்திரை) புதன்கிழமை (செப்டம்பர் 7) மாலையில் தொடங்கியது.
கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த நடைபயணம் நடைபெறுகிறது.
நடைபயணம் குறித்த சில தகவல்கள்:
கடந்த மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்த 'பாரத் ஜோடோ யாத்திரை' குறித்து அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்த பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 7 மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம், 150 நாட்கள் தொடர்ந்து நடந்து காஷ்மீரில் நிறைவடைகிறது.
3,570 கி.மீ. தொலைவு செல்லும் இந்தப் பயணம், ஒவ்வொரு நாளும் காலை - மாலை தலா மூன்று மணிநேரம் என 20 கி.மீ தொலைவை கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த நடைபயணம் நடைபெறும்.
இந்த நடைபயணத்தில் மூன்று விதமான பங்கேற்பாளர்கள் இருப்பார்கள். இந்த நடைபயணத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை கலந்துகொள்ளும் 100 பேர், நடைபயணம் மேற்கொள்ளப்படும் மாநிலத்தைச் சேர்ந்த 100 பேர், எந்தெந்த மாநிலங்கள் வாயிலாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவில்லையோ அந்த மாநிலங்களைச் சேர்ந்த 100 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இப்படி ஒரே சமயத்தில் 300 பேர் இந்த நடைபயணத்தில் உறுதியாக கலந்துகொள்கின்றனர்.
அவர்கள் உறங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் உண்டான வசதிகள் மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய வெவ்வேறு வகையான கண்டெய்னர்களும் இந்த நடைபயணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
'இந்திய ஒற்றுமை பயணம்' என்பதால் தேசியக்கொடியை ஏந்தி இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இடதுசாரி, பொதுவுடைமை அமைப்புகள், காங்கிரஸ் விமர்சகர்கள், பொதுச் சமூகம் என பல்வேறு தரப்புக்கும் இந்த நடைபயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த நடைபயணம்?
"இந்தியாவில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணம் தான் இந்த நடைபயணம்" என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
காங்கிரஸின் தலைவர் யார் என தினசரி யூகங்கள் வெளியாகிவரும் நிலையிலும், 2014-2022 வரை நடைபெற்ற பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்கள் ஆகியவற்றில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
தாக்கத்தை ஏற்படுத்துமா?
ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், "காங்கிரஸ் தலைமைக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2004ல் சோனியா காந்தி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற கேள்வி வந்தபோது அவரை ஆதரித்தது தமிழ்நாடு தான். 2019-ல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது மு.க.ஸ்டாலின்தான். காங்கிரஸ் தலைமையைப் பொறுத்தவரையில் அதற்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து வந்தால் வலுவாக இருக்கும் என கருதுகின்றனர்" என தெரிவித்தார்.
காங்கிரசுக்கு இந்த யாத்திரை எந்தளவுக்கு கைகொடுக்கும் என்ற கேள்விக்கும் "இரண்டு ஆண்டுகளில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. அதற்காக காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான நடைபயணங்கள் முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் இரண்டு பயணங்கள் முக்கியமானதாக உள்ளது. ஒன்று ஜெயப்பிரகாஷ் காந்தி அவசரநிலை காலத்திற்கு பிறகு முன்னெடுத்த நடைபயணம். மற்றொன்று அத்வானியின் ரதயாத்திரை. ஒன்று ஜனநாயகத்திற்கு உதவியாகவும் மற்றொன்று வலதுசாரி அரசியலுக்கு உதவியாகவும் மாறியிருக்கிறது. இரண்டும் முன்னுதாரணமாக இருக்கும்போது ராகுல்காந்தியின் நடைபயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மக்கள் மீது இந்த நடைபயணங்கள் தாக்கம் ஏற்படுத்துகிறதோ, இல்லையோ எல்லோரும் இதுகுறித்து பேசுவார்கள். உரையாடலை தாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என வலதுசாரிகள் நினைக்கும்போது இந்த நடைபயணம் உதவியாக இருக்கும். விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்னைகளை எழுப்ப உதவிகரமாக இருக்கும்" என்றார்.
வரலாற்றில் சில யாத்திரைகள்
காந்தியின் தண்டி யாத்திரை முதல் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளை கண்டுள்ளது. அதில், சில முக்கியமான யாத்திரைகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
பிரிட்டிஷாருக்கு எதிராக காந்தியின் தீவிரமான நடைபயணங்கள்
பிரிட்டிஷாருக்கு எதிராக பல்வேறு நடைபயணங்களை மேற்கொண்டுள்ளார் மகாத்மா காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முகமாக மகாத்மா காந்தி மாறுவதற்கு தண்டி யாத்திரை வழிவகுத்தது.
உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து, அகமதாபாத்திலிருந்து தண்டி வரை 241 கி.மீ. வரை நடைபயணம் மேற்கொண்டார் மகாத்மா காந்தி. அவருக்கு அப்போது 61 வயது. தினசரி 24 கி.மீ. வரை நடைபயணம் மேற்கொண்டார். எந்த நோக்கத்திற்காக நடைபயணம் மேற்கொண்டாரோ அதனை நிறைவேற்றி காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாத்திரையாக இது கருதப்படுகிறது. அதன்பின் சுதந்திர இந்தியாவில் பல்வேறு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட யாத்திரைகளின் முன்னோடியாக தண்டி யாத்திரை கருதப்படுகிறது.
அத்வானியின் ரத யாத்திரை
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் தொடங்கி பிகாரில் சமஸ்டிபுர் வரையில் மேற்கொண்ட பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கான ராமர் ரத யாத்திரை பயணம் முழுக்க "கோயிலை அங்கு கட்டுங்கள்" என்ற கோஷத்தை அத்வானி முன்வைத்தார். 1990 செப்டம்பர் - அக்டோபரில் பிகாரில் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த ரத யாத்திரை மூலம் அத்வானி முன்னெடுத்துச் சென்ற, தீவிரமான இந்துத்வா அரசியல் நல்ல பலனைக் கொடுத்தது. 1996 தேர்தலில் 161 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 1984 தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற கட்சிக்கு அது மிகப் பெரிய முன்னேற்றமாக அமைந்தது. முதலாவது பாஜக அரசு அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையில் பதவியேற்றது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் அது 13 நாட்கள் மட்டுமே பதவியில் நீடித்தது.
நீதி கேட்டு நெடும்பயணம்
1982ல் திருத்தணி கோயில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் ஏற்க மறுத்தார். அப்போது, திருச்செந்தூர் கோவில் வேல் மீட்கப்படவேண்டும், திருடப்பட்ட வேல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றார் கருணாநிதி.
"எம்.ஜி.ஆர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அரசின் மீதான விமர்சனங்களை அவையில் பதிவுசெய்தது, திருச்செந்தூர் ஆலய அதிகாரி கொலைவழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட எம்.ஜி.ஆர் அரசு தயங்கியபோது, அந்த அறிக்கையை ரகசியமாகப் பெற்று பத்திரிகைகளில் வெளியிட்டது, கொலைக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியபோது நீதிகேட்டு நெடும்பயணம் சென்றது என்று தொடர்ச்சியாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே, தனது கட்சியையும் உயிரோட்டத்துடன் வைத்திருந்தார் கருணாநிதி" என,"திராவிட இயக்க வரலாறு", "தமிழக அரசியல் வரலாறு" உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் பிபிசி தமிழுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் படை
1938 ஆகஸ்டு 1ஆம் தேதி 'தமிழர் படை' என்ற பெயரில் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் உறையூரில் தொடங்கி தமிழகம் முழுதும் கிராமம் நகரம் வேறுபாடின்றி மாபெரும் பேரணியாகச் சென்று பட்டிதொட்டியெங்கும் 87 பொதுக்கூட்டங்களை நடத்தினர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் குமாரசாமி பிள்ளை உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழுவினர், செப்டம்பர் 11, 1938 அன்று சென்னை) நகரில் இருந்த பிரிட்டிஷ் - இந்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை சென்றனர்.
இந்தத் தமிழர் படை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகமெங்கும் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டங்களில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோர் 1939இல் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்தது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.
வைகோவின் நடைபயணங்கள்
பல தலைவர்கள் நடைபயணம் மேற்கொண்டிருந்தாலும் அனைத்து நடைபயணங்களும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியதில்லை. தமிழக அரசியல்வாதிகளில் அதிக நடைபயணங்களை மேற்கொண்டவர் வைகோ. மதுவிலக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, காவிரிப் பிரச்னை என பல பிரச்னைகளுக்காக நீண்ட தூர நடைப்பயணங்கள் மேற்கொண்டார்.
திமுகவிலிருந்து விலகிய பின் 1994ம் ஆண்டு மதிமுகவை தொடங்கிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு நடைபயணங்களை மேற்கொண்டுள்ளார். அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக என 1500 கி.மீ . தொலைவு 51 நாட்கள் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். எனினும், இந்த நடைபயணங்கள் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை 1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலில் மதிமுகவின் தோல்வி உணர்த்தியது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களுக்காக வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
நதிநீர் இணைப்புக்காக ஒருமாத காலமும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். காவிரி மீட்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் நடைபயணங்கள் மேற்கொண்டதுண்டு.
இப்போது காங்கிரஸ் கட்சி தன்னை மீட்டெடுக்க ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளும் இந்த 'ஒற்றுமை நடைபயணம்' அக்கட்சிக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்