You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பொது இடத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த விவகாரம்: வலுக்கும் எதிர்ப்பு
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி சேவைக்காக
கர்நாடக முன்னாள் அமைச்சரும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பவல்லி, தனது தொகுதியில் வசிக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும் தொலைக்காட்சியில் அதுகுறித்துப் பேசியதும் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுகுறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது, "நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தேனா, என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?" என்று அவர் தனது செயலை நியாயப்படுத்தியது சமூக ஊடகங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய தொகுதிக்கு உட்பட்ட வர்தூர் பகுதியில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்கலில் வைரலாகப் பரவியது. அங்கு ஒரு பெண் அவரிடம், தனது வீடு மழைநீர் வடிகால் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கூறி அதற்கான ஆவணத்தைக் காட்டினார். அந்தப் பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் தான் இந்தச் சீற்றத்திற்குக் காரணம்.
கடும் மழை, வெள்ளம் ஆகியவை ஏற்பட்டதால், பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பெங்களூரு மாநகராட்சியின் பிரஹுத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) என்ற அரசு அமைப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.
அந்த வீடியோவில் லிம்பவல்லி திடீரென அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி, அவருடைய கையிலிருந்து ஆவணத்தைப் பறிக்கும்போது பெண்ணைப் பார்த்து சத்தம் போடுவதைப் பார்க்கலாம். அவரை ஒருமையில் பேசுவதும் வீடியோவில் கேட்கிறது. "உனக்கு சுயமரியாதை ஏதும் இல்லையா" என்று அவர் அந்தப் பெண்ணிடம் கத்தியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட இடத்தில் சுவர் கட்ட தனக்கு உரிமை, அனுமதி இருக்கிறது என்றும் ஆனாலும், தனது வீட்டை ஒட்டிய சுவரை அதிகாரிகள் இடித்துவிட்டனர் என்றும் அந்தப் பெண் பதில் கூறினார்.
ஒரு பெண்ணிடம் இப்படிப் பேசக்கூடாது என்று அந்தப் பெண் கூறியபோதும், போலீசிடம் திரும்பி திமிராகப் பேசியற்காக அந்தப் பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லும்படி லிம்பவல்லி கூறுவதாக அந்த வீடியோவில் தெரிகிறது.
அந்தப் பெண்ணே தாம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதையும் கூறுகிறார். இதையடுத்து, இந்தப் பிரச்சனை அரவிந்த் லிம்பவல்லிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையிலான வார்த்தைப் போராக வெடித்தது.
அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கன்னடத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
"பெண்களின் மீட்பர் என்று கூறுவது பாஜகவின் பாசாங்குத்தனம். உங்கள் கட்சியைச் சேர்ந்த அரவிந்த் லிம்பவல்லி, ஒரு மக்கள் பிரதிநிதியாக பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட விதம் மன்னிக்க முடியாதது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற செயலுக்கு எதிராக பேசும் தைரியம் உங்களுக்கு உள்ளதா? அரவிந்த் லிம்பவல்லி அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்பாரா?" என்று அந்த ட்வீட்டில் கேட்டுள்ளார் சுர்ஜேவாலா.
இதற்கு லிம்பவல்லி தனது ட்விட்டில், "நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால், உங்கள் கட்சிக்காரர் மேரி கடந்த பல ஆண்டுகளாக ராஜாகலுவேவை ஆக்கிரமித்து மக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார். உங்கள் கட்சிக்காரரிடம் அதை காலி செய்யச் சொல்லுங்கள். அவரது ஆணவத்தை நிறுத்தச் சொல்லுங்கள்!" என்று பதில் அளித்துள்ளார்.
பிறகு, கன்னட தொலைக்காட்சி செய்தியாளர் அவரிடம், "இந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகம் என்றாலும் ஒரு பெண்ணிடம் இப்படிப் பேசுவது முறையா? பெரிய மழைநீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்த எத்தனை பேரிடம் இப்படிப் பேசியுள்ளீர்கள்?" என்று கேள்வியெழுப்பினார்.
இந்தக் கேள்வியில் கோபமடைந்த லிம்பவல்லி, "ஏன் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? இதை ஏன் பிரச்னை ஆக்குகிறீர்கள்? நான் என்ன அவரை பாலியல் வல்லுறவா செய்துவிட்டேன்?" என்று கேட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்