You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலவசங்கள் வழக்கு: “பொதுப் பணத்தை செலவிட சரியான வழி எது?” – தலைமை நீதிபதி ரமணா கேள்வி
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சி.டி.ரவிகுமார், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டது.
அந்த வழக்கில் இன்று இலவசங்கள் தொடர்பான இந்த வழக்கை வேறு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தவிட்டுள்ளார். மேலும், இலவசங்களை அறிவிப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார்.
இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது என்று கூறிய அதேவேளையில், இலவசங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
மேலும் இலவசங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஏன் கருத்து கேட்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்ததோடு, இலவசங்கள் குறித்த விவாதம் தேவையெனவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, மத்திய அரசு வல்லுநர் குழுவை அமைத்து ஆராயவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
"வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது"
"அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டுள்ள இந்தப் பிரச்னை குறித்து விரிவான விசாரணை தேவைப்படுகிறது. நீதிமன்றம் மூலம் வல்லுநர் குழுவை நியமிப்பது ஏதேனும் பயனளிக்குமா, இதில் நீதித்துறை தலையிடுவதன் தேவை என்ன என்பன போன்ற சில பூர்வாங்க விஷயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
பல்வேறு தரப்பினர் சுப்பிரமணியம் பாலாஜி வழக்கின் தீர்ப்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று தெரிவித்தனர். அந்த வழக்கில், இதுபோன்ற நடைமுறைகள் ஊழல் நடவடிக்கைகளாகக் கருதப்படாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்தப் பிரச்னையின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றுகிறோம்," என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்களுக்கு எதிராக பாஜக தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யாய உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கப்படும் இலவச வாக்குறுதிகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்மானிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை அமைக்கலாமே என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டிருந்தது.
அதோடு, "திமுக மட்டும் தான் மிகவும் புத்திசாலித்தனமான சாதுர்யமான கட்சி என்று நினைக்க வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து நாங்கள் பேசாமல் தவிர்ப்பதால், அதுகுறித்து அறியவில்லை என்று நினைக்கவேண்டாம்," என்று அஸ்வினி உபத்யாய தொடர்ந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்திருந்தார்.
பிரச்னையின் சிக்கலான தன்மையை ஒப்புக்கொண்ட தலைமை நீதிபதி ரமணா, நீதிமன்றத்தின் நோக்கம் இந்தப் பிரச்னை குறித்த ஒரு பரந்த பொது விவாதத்தைத் தொடங்குவது என்றும் அதற்காகவே ஒரு வல்லுநர் குழுவை உருவாக்குவதாகவும் கூறினார்.
முந்தைய விசாரணையின்போது, இலவசங்கள் குறித்த பிரச்னை சிக்கலானது என்றும் நலத் திட்டங்கள் மற்றும் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளுக்கு இடையே வேறுபாடு காட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
அரசியல் கட்சிகளின் இலவசங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு நிதி ஆயோக், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற பங்குதாரர்களைக் கொண்ட ஆணையம் தேவை எனக் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு உதவிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நிதி ஆயோக் போன்ற "அரசியல் சார்பற்ற அமைப்பு" இந்தப் பிரச்னையை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கலாம் எனக் கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி, "தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பதைத் தடுக்க முடியாது. ஆனால், சரியான வாக்குறுதிகள் எது, பொதுப் பணத்தைச் செல்விடுவதற்கான சரியான வழி எது என்பது தான் கேள்வி," என்று கூறியிருந்தார்.
"தேர்தல் செயல்முறையின் தூய்மையைக் கெடுக்கும்"
ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் இந்த மனுவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தன.
இலவச தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து போன்ற தேர்தல் வாக்குறுதிகள் 'இலவசம்' அல்ல, சமத்துவமற்ற சமுதாயத்தில் இந்தத் திட்டங்கள் முற்றிலும் அவசியம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.
உபத்யாய தாக்கல் செய்த மனுவில், பொது நிதியிலிருந்து கண்மூடித்தனமான இலவசங்களை விநியோகிப்பதாக உறுதியளித்த அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னங்களைக் கைப்பற்றவும் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கோரப்பட்டிருந்தது.
தவறான ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் தன்னிச்சையாக வாக்குறுதிகள் அல்லது கண்மூடித்தனமான இலவசங்களை வழங்குவது, வாக்காளர்களைத் தங்களுக்கு ஆதரவாகக் கவர்ந்திழுப்பது, அது லஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கிற்கு ஒப்பானது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் பொது நிதியிலிருந்து கண்மூடித்தனமான இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது அல்லது விநியோகிப்பது, வாக்காளர்கள் மத்தியில் தேவையற்ற செல்வாக்கைச் செலுத்துன், சுதந்திரமான, நியாயமான தேர்தலின் வேர்களை அசைத்து, தேர்தல் செயல்முறையின் தூய்மையைக் கெடுக்கும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :