You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார் அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நிதிஷ் குமார் அரசு - 10 தகவல்கள்
பிகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ள நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதன்கிழமை வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
243 உறுப்பினர்கள் கொண்ட பிகார் சட்டசபையில் 164 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதிஷ் குமார் தலைமையிலான 'மகாத்பந்தன்' அரசு பிகார் சட்டசபையின் நம்பிக்கையை வென்றது.முன்னதாக சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா (பாஜக) ராஜிநாமா செய்ததால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரியால் சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டசபைக்கு புதிய சபாநாயகர் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்படுவார். இந்த அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1) பிகார் சட்டசபையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஏழு கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் அணி வெற்றி பெற்றது, அத்துடன் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சியாக வலுப்பெறவும் இந்த கூட்டணி அழைப்பு விடுத்தது.
2) அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக 164 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதையொட்டி சட்டசபையில் முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது, "பிகாரின் வளர்ச்சிக்காக நாங்கள் (ஆர்ஜேடி மற்றும் ஜேடியு) இணைந்து செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துள்ளோம். நாடு முழுவதிலுமிருந்து தலைவர்கள் என்னை அழைத்து இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்தனர், 2024 தேர்தலில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து போராடுமாறு வலியுறுத்தினேன்," என்றார்.
3) மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி விளம்பங்கள் மீது நாட்டம் கொண்டுள்ளதே தவிர, ஏழைகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் அமிர்த மகோத்சவ் கொண்டாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய நிதிஷ், சுதந்திர போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய பங்கு இப்போதும் சந்தேகத்தின் நிழலிலேயே உள்ளது என்றார்.
4) நிதி ஒதுக்கீட்டில் பிகார் அரசுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியதாகவும், பாட்னா பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும் நிதிஷ் குற்றம்சாட்டினார்.
5) மாநில துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசும்போது, "பாஜக அல்லாத அரசுகளை சீர்குலைக்க மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ), அமலாக்கத்துறை இயக்குநரகம் (இடி), வருமான வரித்துறை (ஐடி) போன்ற மத்திய அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று அவை பாஜகவின் மூன்று மறுமகன்கள்," என்றும் கூறினார்.
6) "இந்த மகா கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க கூட்டணி. இதன் இன்னிங்ஸ் என்றும் முடியாது. இது நீண்ட நாட்களுக்கு தொடரும். யாரும் இடையில் ரன் அவுட் ஆக மாட்டார்கள்," என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
7) இன்றைய சபை நடவடிக்கைகளின்போது பாஜக உறுப்பினர்கள் இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர். முன்னாள் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், சட்டசபை நிகழ்ச்சி நிரல் முறைப்படி பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். சட்டசபையின் நெறிகள் குழு, முன்பு ஆர்ஜேடி எதிர்கட்சியாக இருந்தபோது சபைக்குள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளதை குறிப்பிட்டார். அந்த நெறிமுறைக் குழுவின் அறிக்கை இதுவரை சபையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அதன் தலைவராக அருண்குமார் சின்ஹா செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றும் தர்கிஷோர் குற்றம்சாட்டினார்.
8) முன்னதாக சட்டசபையில் வாக்கெடுப்புக்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கியபோது சபாநாயகர் வி.கே.சின்ஹா, தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நியாயமற்ற முறையில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி பதவி விலகினார்.
9) இதையடுத்து பிகார் சட்டசபையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெறும் என்றும் பிகார் சட்டப்பேரவை துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி, அவை அலுவலை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைப்பதாகவும் கூறினார்.
10) பிகார் சட்டசபையில் ஆளும் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த இதே நாளில், ஆர்ஜேடி கட்சியைச் சேர்ந்த எம்எல்சி சுனில் சிங், எம்பிக்கள் அஷ்ஃபக் கரீம், ஃபயாஸ் அகமது, முன்னாள் எம்எல்சி சுபோத் ராய் உள்ளிட்டோர் தொடர்புடைய 25 இடங்களில் மத்திய புலனாய்வுத்துறை சோதனை நடத்தியது. இவர்கள் அனைவரும் ஆர்ஜேடி முன்னாள் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கானவர்களாக அறியப்படுபவர்கள். வேலைக்கு நிலம் தொடர்பான முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் தொடர்புடையதாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னணி: பிகாரில் முந்தைய தேர்தலின்போது ஆர்ஜேடி உடன் சேர்ந்து ஆட்சி அமைத்த நிதிஷ் குமார், பிறகு பாதியிலேயே அந்த கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கரம் கோர்த்து புதிய ஆட்சி அமைத்தார். இந்த நிலையில், மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து மகாகத்பந்தன் கூட்டணியை உருவாக்கினார்.
இதன் மூலம் பிகாரின் எட்டாவது முறையாக முதல்வராக அவர் பதவியில் தொடர்கிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருக்கிறார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த சில தினங்களுக்கு முன்புதான் தமது அமைச்சரவையை நிதிஷ் குமார் விரிவுபடுத்தினார். நிதிஷின் கட்சியைச் சேர்ந்த 11 பேரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 16 பேரும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களுடன் காங்கிரஸுக்கு இரண்டு, ஜித்தன் ராம் மன்ஜியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவில் இருந்து ஒருவர், ஒரு சுயேச்சை உறுப்பினர் அமைச்சர் ஆகியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்