You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அன்னா மணி: கேரள பெண் விஞ்ஞானியை கூகுள் ஏன் கொண்டாடியது? வானிலை முன்னறிவிப்பில் அவரது சாதனை என்ன?
இந்தியாவின் முதல் தலைமுறை பெண் விஞ்ஞானிகளில் சிறந்து விளங்கிய கேரளாவைச் சேர்ந்த அன்னா மணியின் 104வது பிறந்த நாளை ஒட்டி அவரை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் நேற்று (ஆக. 23) அவருக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது.
இன்றைய காலகட்டத்தில் அறிவியல் துறையில் பெண்கள் சாதிப்பதற்கு பல்வேறு தடைகள் உள்ள நிலையில், இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அத்துறையில் பல சாதனைகளை புரிந்துள்ளார் அன்னா மணி. இந்தியா இப்போது துல்லியமாக வானிலையை கணிப்பதில் இவருடைய பங்கு மகத்தானது. யார் இந்த அன்னா மணி? அவரை குறித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்:
- 1918ம் ஆண்டு ஆகஸ்ட் 23ல் திருவிதாங்கூரில் (தற்போதையை கேரளா) பிறந்த அன்னா மணி, தன்னுடைய இளம் வயதிலிருந்தே புத்தகங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவராக இருந்தார். 12 வயதுக்குள்ளாகவே தங்கள் பகுதியில் உள்ள பொது நூலகத்தில் அனைத்துப் புத்தகங்களையும் படித்தவராக இருக்கும் அளவுக்கு புத்தகங்களின்பால் ஆர்வம் கொண்டவர் அன்னா மணி.
- உயர்நிலை பள்ளியை நிறைவு செய்தபின் சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் இடைநிலை அறிவியல் துறையை தேர்வு செய்து படித்தார். பின்னர் சென்னை மாநில கல்லூரியில் இளநிலை இயற்பியல் மற்றும் வேதியியல் ஹானர்ஸ் படித்தார்.
- பட்டப்படிப்பை முடித்த பின்னர் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியிலேயே பேராசிரியராக ஓராண்டு பணிபுரிந்தார். பின்னர் அவருக்கு முதுகலை படிக்க உதவித்தொகை கிடைத்ததையடுத்து, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை படித்தார். இங்கு அவர் நோபல் பரிசு பெற்ற சர். சி.வி.ராமன் வழிகாட்டுதலில் வைரங்கள், மாணிக்கங்களின் ஸ்பெக்ட்ரோஸ்கோபி குறித்து படித்தார்.
- 1942 முதல் 1945 வரை 5 ஆய்வறிக்கைகளை வெளியிட்ட அவர், தனது பி.ஹெச்.டி ஆய்வுப் படிப்பையும் முடித்தார்.
- அதன் பின்னர், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் வானிலை கருவிகள் குறித்த பட்டப்படிப்பை படித்தர்.
- 1948ல் இந்தியாவுக்குத் திரும்பிய அன்னா மணி, இந்திய வானிலை ஆய்வுத்துறையில் இணைந்து பணிபுரிய ஆரம்பித்தார். இங்கு பணிபுரிந்த காலத்தில், இந்தியா சொந்தமாகவே வானிலை கருவிகளை தயாரிப்பதிலும் வடிவமைப்பதிலும் உதவிபுரிந்தார்.
- ஆண்களே கோலோச்சும் வானிலை துறையில் சிறந்து விளங்கிய அன்னா மணி, 1953-ல் இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையின்கீழ் 100க்கும் மேற்பட்ட வானிலை கருவிகளின் வடிவமைப்புகள் எளிமைப்படுத்தப்பட்டன, அதன் உற்பத்தியும் தரப்படுத்தப்பட்டது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் குறித்து ஆரம்ப காலத்திலேயே பேசியவராக அறியப்படுபவர் அன்னா மணி. 1950களில் சூரிய கதிர்வீச்சு கண்காணிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்பை நிறுவினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
- பின்னர், இந்திய வானிலை ஆய்வுத்துறையின் துணை இயக்குனரான அன்னா மணி, ஐநா உலக வானிலையியல் அமைப்பில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார். அறிவியல் துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்காக ஐ.என்.எஸ்.ஏ கே.ஆர். ராமநாதன் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
- பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பெங்களூருவில் உள்ள ராமன் ஆய்வு மையத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் வளர்ச்சிக்கு உதவும் கருவிகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நிறுவினார் அன்னா மணி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்